Published : 15 Jun 2023 05:51 AM
Last Updated : 15 Jun 2023 05:51 AM

காய்கறி மூட்டைகளுக்கு இடையே லாரியில் கடத்தப்பட்ட 388 கிலோ கஞ்சா பறிமுதல் - போலீஸாரின் அலட்சியத்தால் 2 பேர் தப்பினர்

கீரனூர் அருகே லாரியில் காய்கறி மூட்டைகளுக்கிடையே கடத்தி வரப்பட்ட கஞ்சா பொட்டலங்கள்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே லாரியில் காய்கறி மூட்டைகளுக்கு இடையே மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட 388 கிலோகஞ்சா பொட்டலங்களை போலீஸார் நேற்று பறிமுதல் செய்தனர்.

ஆந்திர பதிவெண் கொண்ட லாரியில், புதுக்கோட்டை மாவட்டம் வழியாக கஞ்சா கடத்திச் செல்லப்படுவதாக நேற்று முன்தினம் தகவல் கிடைத்ததையடுத்து, தீவிர சோதனை நடத்துமாறு நெடுஞ்சாலை ரோந்து போலீஸாருக்கு புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி வந்திதா பாண்டே உத்தரவிட்டார்.

இதன்படி, கீரனூர் அருகே அம்மாசத்திரம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், அந்த வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி விசாரணை நடத்தினர். தொடர்ந்து, சந்தேகத்தின்பேரில் கீரனூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு, லாரியில் வந்த இருவருடம் போலீஸார் விசாரணை நடத்தியதில், சென்னையில் இருந்து காய்கறி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு தூத்துக்குடிக்கு விற்பனைக்குக் கொண்டு செல்வதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், தொடர் விசாரணைக்காக காலையில் வருவதாகக் கூறிவிட்டுச் சென்ற இருவரும், மீண்டும் வரவில்லை.

இதையடுத்து, போலீஸார் லாரியில் ஏறி சோதனை நடத்தியதில் காய்கறி மூட்டைகளுக்கு இடையே 200 பண்டல்களில் 388 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்ததைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து, லாரியில் வந்த இருவரையும் செல்போனில் தொடர்பு கொண்டபோது, அவர்களது எண்கள் அணைத்து வைக்கப்பட்டிருந்தன. அத்துடன், அவர்கள் அளித்த முகவரிகளும் போலி எனத் தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்த 2 பேர் போலீஸாரின் அலட்சியத்தால் தப்பிய சம்பவம் சக போலீஸார் மற்றும் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x