Last Updated : 13 Jan, 2022 06:05 PM

Published : 13 Jan 2022 06:05 PM
Last Updated : 13 Jan 2022 06:05 PM

கரோனாவிலிருந்து மீண்டோருக்கு 28 நாட்களுக்குள் முழுப் பரிசோதனை அவசியம்: டாக்டர் தேரணிராஜன் சிறப்புப் பேட்டி

"கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அதிக தாக்கம் இல்லை. எனவே தடுப்பூசி என்பது அவசியம். ஏற்கெனவே நம் உடலில் ஏற்பட்டிருக்கும் எதிர்ப்பு சக்தியை மேலும் அதிகரிக்க பூஸ்டர் டோஸ் தடுப்பூசி அவசியம்" என்கிறார் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் டாக்டர் தேரணிராஜன்.

ஒமைக்ரான் அறிகுறிகள் முதல் பூஸ்டர் டோஸ் வரை பல சந்தேகங்களுக்கு எளிய விளக்கங்களுடன் கரோனா 3-வது அலை குறித்து 'இந்து தமிழ் திசை' டிஜிட்டலுக்கு அளித்த சிறப்புப் பேட்டி:

ஒமைக்ரான் அறிகுறிகள் என்னென்ன? அவை தென்பட்டால் உடனே செய்ய வேண்டியது என்ன?

தொண்டையில் வலி, கரகரப்பு, காய்ச்சல், அதிக உடல்வலி சோர்வு போன்றவை ஆரம்ப கட்டத்தில் ஏற்படும். இரண்டு டோஸ் தடுப்பூசி எடுக்காமல், இணை நோய் இருப்பவர்களுக்கு ஒமைக்ரானின் அறிகுறிகள் தென்பட்டால் அவர்கள் உடனே மருத்துவமனை உதவியை நாட வேண்டும்.

பாதிப்புத் தன்மையில் ஒமைக்ரான், டெல்டா இடையிலான வேறுபாடு...

கொரோனா வைரஸின் உருமாற்றத்தில் ஏற்பட்ட வைரஸ்தான் ஒமைக்ரான். ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா, டெல்டா ப்ளஸ், ஒமைக்ரான் என உருமாறிக் கொண்டே இருக்கிறது. ஒமைக்ரான் 37 முறை மரபணு மூலமாக தன்னை உருமாற்றிக்கொண்டு எஸ்ஜீன் என்னும் புரதத்தை இழந்து உருமாறியிருக்கிறது.

சாதாரணமாக எஸ்ஜீன் என்னும் புரதம் உடலுக்குள் சென்று உடலில் உள்ள பாகங்களை திசுக்களை அழிப்பதற்கு அது ஒரு முக்கியமான ஓர் உறுப்பு. அதை இழந்து வந்திருப்பதால் வைரஸால் தொண்டை பகுதியில் மட்டும் இருந்து, அங்கிருந்து தன்னைப் பெருக்கி கொண்டு இருமுவது, தும்முவது மூலமாக அருகில் இருப்பவர்களுக்கு உடனடியாக பரவி விடுகிறது. பெரும்பாலும் நுரையீரலில் பாதிப்பு ஏற்படுவதில்லை.

கரோனா 3-வது அலையால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனரா?

அதாவது, கரோனா 3-வது அலைதான் குழந்தைகளைத் தாக்கும் என்பது இல்லை. முதல் அலையிலும், 2-ஆம் அலையிலும் குழந்தைகள் பாதிக்கப்பட்டார்கள்.
பொதுவாக கரோனா வைரஸ் நம்மைத் தாக்க வேண்டும் என்றால், அது நம் உடலில் சென்றவுடன் அது தங்குவதற்கு ஏற்றவகையில் சுவாசப் பாதையில் ஓர் இடம் உண்டு. அதன் பெயர் ஆஞ்சியோடென்சின் கன்வர்டிங் என்சைம் ரிசப்ட்டார்கள். அந்த ஆஞ்சியோடென்சின் கன்வர்டிங் என்சைம் ரிசப்ட்டார்கள் பெரியவர்களுக்குத்தான் நல்ல வளர்ச்சி அடைந்திருக்கும். வைரஸ் நம்மைத் தாக்கியதும் அதில் நேராகப் போய் உட்கார்ந்து, தன்னைப் பெருக்கிக்கொண்டு, உட்கார்ந்த இடத்தை அழிக்கக்கூடிய வேலையைச் செய்யும். ஆனால் குழந்தைகளுக்கு கரோனா வைரஸ், சுவாசப்பாதைச் செல்களை அபகரிக்கவும் நங்கூரம் போட்டு ஊடுருவவும் தேவையான ஆஞ்சியோடென்சின் கன்வர்டிங் என்சைம் ரிசப்ட்டார்கள் முழுமையாக வளர்ச்சி அடைந்திருப்பதில்லை. அதனால் குழந்தைகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டாலும் சாதாரணமாக மூக்கில் தண்ணீர் ஒழுகுதல், இருமல் மட்டும் வந்து போய்விடும். பெரிதாகப் பயப்பட வேண்டியதில்லை. எனினும், கோவிட் தாக்கிய குழந்தைகளுக்கு மிகவும் அரிதாக அதிக பாதிப்பு ஏற்படும். எனினும் உரிய சிகிச்சை மூலம் சிறப்பான முன்னேற்றத்தையும் காண முடியும்.

தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் 3-வது அலை குறித்து மக்களிடம் பரவலாக பயம் இருக்கிறதே?

பயம் நம்மைப் பாதிப்படையச் செய்துவிடக்கூடாது. நாம் தொற்று காலங்களில் பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டுமோ, அதை முழுமையாக கடைப்பிடித்துக் கொள்ள வேண்டும். ஐ.சி.எம்.ஆர், உலக சுகாதார அமைப்பு, மத்திய அரசு மற்றும் தமிழக அரசு போன்றவற்றின் மூலம் வரும் தகவல்களை மட்டுமே பொதுமக்கள் நம்ப வேண்டும். மற்றபடி வாட்ஸ்அப்பில் வலம் வரும் நம்பகத்தன்மையற்ற வதந்திகளை நம்பக்கூடாது. கரோனா தாக்கம் வந்து போன பிறகு, 28 நாட்களுக்குள் உங்கள் உடலை அரசு மருத்துவமனையில் காண்பித்து முழுப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இது மற்ற பாதிப்புகளில் இருந்து உங்களைக் காக்கும். பொதுவாகத் தொற்று காலங்களில் இணை நோய்களை கட்டுக்குள் வைத்துக்கொள்ளுங்கள். நோய் பாதிப்பு ஏற்பட்டுவிட்டால் அசால்டாக இருக்காதீர்கள்.

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களையும் கரோனா தாக்குவது குறித்து...

தடுப்பூசி போட்டால் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். அது எவ்வளவு நாட்கள் என்பது விவாதத்தில் இருக்கும் விஷயம். எல்லா நாடுகளும் தடுப்பூசியை ஒரே சமயத்தில் பயன்படுத்துவதன் மூலம் இந்த பேண்டமிக் நோயை ஒழிக்க முடியும். எல்லோரும் கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசியை எடுத்துக் கொள்ள வேண்டும். தற்போது போடப்பட்டு வரும் பூஸ்டர் தடுப்பூசியையும் கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும். வளர்ந்த நாடுகளில் 3-வது டோஸ் போட்டுவிட்டு, மற்ற நாடுகளில் போடவில்லை என்றால் கொரோனா வேறுமாதிரி உருமாறும் ஆபத்து ஏற்படும். எனவே உலக நாடுகள் எல்லாம் ஒன்றிணைந்து இந்தத் தொற்று நோயை விரட்ட முயற்சி செய்ய வேண்டும்.

யாரும் தடுப்பூசிக்குப் பயப்பட வேண்டாம். தடுப்பூசிதான் நம்மை தொற்றில் இருந்து காப்பாற்றும் ஒரே வழி. சின்னம்மை, போலியோ போன்றவற்றில் இருந்து இன்றுரை நம்மை காத்து நிற்பது தடுப்பூசி மட்டும்தான் என்பதை நாம் நினைவுப்படுத்தி கொள்ள வேண்டும். அதேபோல நாம் தடுப்பூசி போட்டுவிட்டோம் என்பதால் கொரோனா வராது என்று இஷ்டத்திற்கு மக்கள் சுற்றவும் கூடாது. அது இரும்புக்கவசம் அல்ல. தடுப்பூசியின் மூலம் நாம் கண்ட பலன் என்னவென்றால், தடுப்பூசி போட்டவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டாலும் அதிக தாக்கம் இல்லை. மரணம் வரை போகவில்லை. எனவே தடுப்பூசி என்பது அவசியம். போட்டுக்கொண்டால் நோயை தீவிரத் தன்மைக்குச் செல்லவிடாது. ஏற்கெனவே நம் உடலில் ஏற்பட்டிருக்கும் எதிர்ப்பு சக்தியை மேலும் அதிகரிக்க பூஸ்டர் டோஸ் தடுப்பூசி அவசியம்.

இன்னும் பல வேரியன்ட்டுகள் கண்டறியப்பட வாய்ப்பு உள்ளதா?

கரோனா வைரஸ் ஆர்.என்.ஏ. வைரஸ். இது எப்போதுமே தன்னை உருமாற்றிக் கொண்டு வருவதற்கான இயல்பு உண்டு. அதன் வீரியம் எப்போது குறைகிறதோ அப்போது அது சாதாரண வைரஸாக மாறிவிடும்.

கரோனா 3-வது அலையைத் தடுக்க என்னென்ன வழிமுறைகள், பாதுகாப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டும்?

கோயில் திருவிழாக்கள், குடும்ப நிகழ்ச்சிகளில் மக்கள் கூட்டமாகக் கூடும்போது, கவனக்குறைவால் ஒருவருக்குத் தொற்று ஏற்பட்டாலும்கூட மற்றவர்களுக்கும் அது பரவிவிடுகிறது. சில இடங்களில் பணி செய்பவர்கள் நிலையான கரோனா வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றாததாலும் அதிகமாகத் தொற்று பரவுகிறது.

தமிழகத்தில் கரோனா 3-வது அலையைத் தடுப்பதற்காக தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி காய்ச்சல் கண்காணிப்பு, தடுப்பூசி போடுவதை அதிகப்படுத்துதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், கைகளை அடிக்கடி சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக முகக்கவசம் அணிவது நம் அன்றாட வாழ்க்கை நடைமுறையின் ஓர் அங்கமாக இருக்க வேண்டும். தமிழக அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். முக்கியமாக பண்டிகை காலங்களில் பொதுமக்கள் மிகவும் கவனத்துடன் இருந்தால் மட்டுமே கரோனா 3-வது அலையை கட்டுப்படுத்த முடியும்.

மூன்றாவது அலையை எளிதில் எதிர்கொள்ளும் அளவுக்கு நம் மருத்துவ கட்டமைப்புகள் எந்த அளவுக்குத் தயாராக இருக்கின்றன?

மருத்துவக் கட்டமைப்பை நாம் எந்த விதத்திலும் மாற்றியமைக்கவில்லை. இரண்டாவது அலை முடிந்த உடன் நமக்கு என்ன தேவையோ அதை அதிகப்படுத்தி விட்டோம். ஆயிரம் டன் ஆக்சிஜன் நம்மிடம் இருக்கிறது. ஒரு லட்சத்துக்கும் மேல் படுக்கை வசதிகள். மருத்துவக் கல்லூரியிலும் மிக அழகான ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளோம். மேலும் டாக்டர்களும் செவிலியர்களும் மிகவும் பழக்கபட்டு விட்டோம். கண்ணுக்கு தெரியாத எதிரியைச் சமாளிக்க எப்போதும் தயாராகவே இருக்கிறோம்.

கர்ப்பிணி பெண்களுக்கு?

கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசியை அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். தாய்ப்பாலூட்டும் தாய்மார்களும் அவசியம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இது குழந்தைகளுக்கும் பாதுகாப்பாக இருக்கும். எனவே எந்தவித தயக்கமும் இல்லாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்.

மூன்றாம் அலை எப்போது ஓயும்?

மூன்றாவது அலை முடிவுக்கு வருவதென்பது மக்களின் முழுவதுமான ஒத்துழைப்பில்தான் இருக்கிறது. எந்தவித அலட்சியமும் இல்லாமல் முகக்கவசம் அணிதல், தனி மனித இடைவெளி மற்றும் தடுப்பூசிகளை முறையாக பயன்படுத்துவதன் மூலம் 3-வது அலையின் வீரியத்தை மெதுமெதுவாக குறைத்து விடலாம். நோயைக் கண்டு பயம் கொள்ளாதீர்கள். தைரியமுடன் இருந்தால் கட்டாயம் வென்று விடலாம்.

வீடியோ வடிவில் காண > கரோனா 3-வது அலை எப்போது முடிவுக்கு வரும்? - டாக்டர் தேரணிராஜன் பேட்டி

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x