Last Updated : 22 Mar, 2020 09:04 AM

 

Published : 22 Mar 2020 09:04 AM
Last Updated : 22 Mar 2020 09:04 AM

கரோனாவின் கோர முகம்: இத்தாலியில் ஒரே நாளில் 800 பேர் உயிரிழப்பு: பலி 4 ஆயிரத்தைக் கடந்தது;2 நாட்களில் 1400 பேர்

கரோனா வைரஸின் கோரமான ஆட்டத்துக்கு இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 793 பேர் பலியாகியுள்ளனர், இதன் மூலம் அந்த நாட்டில் உயிரிழப்பு 4,825 ஆக அதிகரி்த்துள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் உருவாகிய கரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் வியாப்பித்துள்ளது. இதுவரை உலகளவில் கரோனா வைரஸுக்கு 13 ஆயிரம் பேர் பலியாகியுள்ளார்கள், 3 லட்சத்துக்கும் அதிகமாக மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில்தான் உயிர்பலி முதலில் அதிகமாக இருந்ததுஆனால்,நாட்கள் செல்லச் செல்ல இத்தாலியில் கரோனாவால் உயிர்பலி தொடர்ந்து அதிகரித்து சீனாவை முந்திவிட்டது. கரோனா வைரஸ் இத்தாலியில் மக்களை உலுக்கி வருகிறது.

இத்தாலியில் நேற்று ஒரே நாளில் மட்டும் 793 பேர் பலியாகியுள்ளார்கள்.ஒட்டுமொத்தமாக உலகளவில் கரோனா வைரஸால் உயிரிழந்த மக்களில் 38.3 சதவீதம் இத்தாலியைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்

இத்தாலியில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் நேற்று ஒரேநாளில் 6,557 உயர்ந்து, 53 ஆயிரத்து 578 ஆக அதிகரித்துள்ளது.

குறிப்பாக பணக்காரர்கள், வசதிபடைத்த செல்லவர்கள் அதிகம் வாழக்கூடிய வடக்கு லம்பார்டி மண்டலத்தில் மட்டும் 3 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் நேர்ந்துள்ள உயிரிழப்புகளில் மூன்றில் இரு பங்கு இங்குதான் நிகழ்ந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து தீவிரமான பாதிப்பை எதிர்கொண்டுவரும் இத்தாலியில்,இரு நாட்களில் மட்டும் 1,420 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலி அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள், சமூக இடைவெளியை உருவாக்கும் நடவடிக்கைகளை எடுத்தும் உயிர்பலியை தடுக்க முடியவில்லை.

கடந்த 12-ம் தேதியிலிருந்து இத்தாலியில் 6 கோடி மக்கள் லாக்-டவுனில் சிக்கித் தவிக்கிறார்கள். பொதுமக்கள் கூடத் தடைவிதிக்கப்பட்டுள்ளது, பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு நீண்டநாட்களாக திறக்கப்படாமல் உள்ளன.

உயிரிழப்பைத் தடுக்கும் வகையிலும், கரோனா பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையிலும் பள்ளி, கல்லூரி,திரையரங்குகள், நாடக அரங்குகுகள் அனைத்தையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் கரோனா பரவும், பலியும் அதிகரித்து வருவது அந்நாட்டை பெரும் கவலையடையச் செய்துள்ளது.

ரோம் நகரில் மட்டும் 50 பேர் பலியாகியுள்ளார்கள், 1190 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் உள்ள தேசிய சுகாதாரா அமைப்பு(என்எஸ்எஸ்) வெளியிட்ட தகவலில் கரோனாவில் இறந்தவர்கள் பெரும்பாலும் 78 வயதுள்ளவர்கள், சராசரியாக 63 வயதில் இருப்பவர்கள்தான் அதிகமாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே நோய் இருந்து அதற்கு சிகிச்சை எடுத்துவந்தவர்கள்தான் கரோனாவுக்கு அதிகமாக உயிரிழந்துள்ளார்கள் எனத் தெரிவித்துள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x