

நண்பர் ஒருவர் போக்குவரத்து மற்றும் மேலாண்மை அமைப்பான தளவாடங்கள் (Logistic) நிறுவனம் ஒன்றில் சில வருடங்களாக வேலைசெய்து கொண்டிருக்கிறார். வழக்கத்திற்கு மாறாக எப்போது பார்த்தாலும் வேலையைக் காரணம் சொல்லி ஓடிக்கொண்டே இருக்கிறார்.
மும்பை, புனே, பெங்களூரு, சென்னை போன்ற பெரு நகரங்களில் 25000 பேருக்கு மேல் அந்த நிறுவனத்தில் வேலைசெய்து கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் அப்படித்தான் ஓடிக்கொண்டே இருப்பார்கள் போல. நண்பரும் கூட ஒன்று அலுவலகம், இல்லையென்றால் வீட்டிலிருந்து அலுவலக வேலை என இரவும் பகலும் தொடர்ந்து வேலைசெய்து கொண்டேயிருக்கிறார்.
இன்னும் கூடுதல் செய்தி என்னவென்றால், பேசுவதற்காக கைப்பேசியில் அழைத்தால், கூடவே இன்னொரு குரல் கேட்டுக்கொண்டேயிருக்கிறது. செயற்கை நுண்ணறிவின் குரல் என்று அவரே அறிமுகம் செய்து வைத்தார். நேரடியாகச் சொன்னால், வரும் செப்டம்பர் மாதத்தில் அவர்களது நிறுவனத்தில் பெரும் எண்ணிக்கையிலான வேலைநீக்கம் நடக்கப்போகிறது.
அந்த வேலை நீக்கத்திற்கு காரணமாக செயற்கை நுண்ணறிவு இருக்கப்போகிறது. அந்தச் செயற்கை நுண்ணறிவுக் கருவியை ஒவ்வொரு கணிப்பொறியிலும் இணைத்து வேலைபார்க்கச் சொல்லியிருக்கிறது நிறுவனம்.
வேலையைக் கண்காணிப்பதற்காக அல்ல, கற்றுக்கொள்வதற்காகப் பொருத்தப்பட்டிருக்கிறதாம். கற்றுக்கொண்டபின், மிகச்சரியாகக் கற்றுக்கொடுத்தவரை வேலையிலிருந்து நீக்கிவிட வேண்டியதுதான். மொத்தம் எத்தனைபேர் நீக்கப்பட போகிறார்கள் என்ற பதட்டத்தோடு ஒவ்வொரு நாளையும் கழித்துக் கொண்டிருக்கிறார்கள் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள்.
சமகாலத்தின் தொழிலாளர் உலகத்தில் இருக்கும் பிரச்சனைகளில் சிறிய எடுத்துக்காட்டுதான் இது. இன்னும் இதுபோன்ற பல வேலைகளிலும் உலகமயமாக்கலும், தனியார்மயமாக்கலும், புதிதாக வந்திருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சிகளும் தொழிலாளர்களுக்கு புதிய சவால்களை உருவாக்கியிருக்கிறது.
வளர்ச்சி என்ற பெயரில் என்ன வந்தாலும் எல்லாவற்றையும் சமாளித்து கொண்டு தொழிலாளர் உலகம் முன்னேறிச் செல்லும் என்பதற்கு சான்றாக வரலாறு இருக்கிறது. தொழில்புரட்சி ஏற்பட்டு பல்வேறு வடிவங்களில் சுரண்டல் நிகழ்ந்தபோது அதற்கு இணையாக தொழிற்சங்கங்கள் உருவாகியது வரலாறு.
முதலாளிகளின் இலாபவெறிக்கு எதிராகத் திரண்ட தொழிலாளர்கள் தங்கள் போராட்டங்களாலும், தியாகங்களாலும் வேலை நேரம், ஓய்வு நேரம், பணிப்பாதுகாப்பு போன்றவற்றை சாதித்துக் காட்டினார்கள். இன்று எல்லாம் தலைகீழாக மாறிக்கொண்டிருப்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
செயற்கை நுண்ணறிவின் காலத்தில் தொழிலாளர்களின் நிலை என்பது வெறும் வேலைகள் பறிக்கப்படுகின்றன என்பது மட்டும் கிடையாது. வேலை யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதுதான். அன்று தொழில்துறை புரட்சிக்காலத்தில் இயந்திரங்களின் வருகை உடல் உழைப்பை மாற்றியமைத்தது. இன்று செயற்கை நுண்ணறிவின் காலத்தில் அறிவுசார் உழைப்பும், கண்காணிப்பும் தானியங்கி மயமாகின்றன.
இந்த மாதிரியான காலத்தில் அர்ஜெண்டீனாவிலிருந்து வெளிவந்திருக்கும் தி டேக் திரைப்படத்தின் முக்கியத்துவம் என்ன என்று என்னைக் கேட்டால் தொழிலாளர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் திரைப்படம் என்று சொல்வேன்.
ஏதோ ஒரு காரணம் சொல்லி, தொழிற்சாலை மூடப்பட்டால் வேலையிழந்த தொழிலாளர்கள் விதியின் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு வீட்டுக்குப் போக வேண்டாம். தொழிற்சாலையைக் கைப்பற்றி உற்பத்தியை தொடங்குங்கள். இலாபத்தை சமமாகப் பங்கிட்டுக் கொள்ளுங்கள் என்று ஒரு திரைப்படம் சொல்வதைப் பார்க்க, கேட்க பரவசமாகிறதல்லவா! தி டேக் ஆவணப்படம் அந்தப் பரவசத்தைக் கொடுக்கும். கனடாவைச் சேர்ந்த கணவன் மனைவியான ஏவி லூயிஸ் (Avi Lewis) மற்றும் நவோமி கிளைன் (Naomi Klein) இருவரும் இணைந்து இயக்கியிருக்கிறார்கள் இந்தத் திரைப்படத்தை.
2004 ஆம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படம் அர்ஜெண்டீனாவின் பியூனஸ் அயர்ஸ் நகரத்தில் நடைபெறும் ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. பொருளாதார நெருக்கடியால் மூடப்பட்ட ஒரு தொழிற்சாலையை, அங்கே பணியாற்றும் தொழிலாளர்கள், முதலாளியிடமிருந்து தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்கிறார்கள். வேலையிழந்த தொழிலாளர்கள் ஒன்றுசேர்ந்து போராடி அதை மீண்டும் திறக்கிறார்கள்.
தொழிலாளர் கூட்டுறவு முறையில் நடத்த முடிவு செய்கிறார்கள். முதலாளிக்காக வேலைசெய்வதற்குப் பதிலாக, தொழிலாளர்களே தொழிற்சாலையின் உரிமையாளர்களாகவும், உழைப்பாளர்களாவும் மாறுகிறார்கள். தி டேக் தொழிற்சாலையை மீட்டெடுக்கும் தொழிலாளர்களின் கதை மட்டுமல்ல! முதலாளித்துவம், தொழிலாளர் உரிமை, வேலைவாய்ப்பு, பொருளாதார நெருக்கடி, கூட்டுறவு பொருளாதாரம், தொழிலாளர்களின் சுயநிர்வாகம் ஆகியவற்றைப் பற்றிய அற்புதமான திரைப்படமாகும்.
இந்தத் திரைப்படம் வெளியான பிறகு, அது திரைப்படமாக மட்டுமல்லாமல், தொழிலாளர் கூட்டுறவு இயக்கம் குறித்த விவாதங்களிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இது தொழிலாளர்களின் போராட்டங்கங்களை பதிவுசெய்த படம் மட்டுமல்ல. அந்தப் போராட்டத்தின் அனுபவத்திலிருந்து நடைமுறையில் ஒரு மாற்றுவழியைச் சொன்ன திரைப்படமும் ஆகும்.
போராட்டங்களை, முற்றுகையை, உழைப்பை, வாழ்க்கையை மிக நெருக்கமாக, முடிந்தவரைக்கும் உண்மையாக பதிவு செய்ததால், கிடைத்த மிகப்பெரிய ஆதரவு இந்தத் திரைப்படத்தை இன்னும் கொஞ்சம் அர்த்தமுள்ளதாக மாற்றியது. இந்தத் திடைப்படத்தை புரிந்துகொள்ள அர்ஜெண்டீனாவையும் கொஞ்சம் புரிந்துகொள்ள வேண்டும்.
Forga San Martin என்ற நிறுவனம் அர்ஜெண்டீனாவின் பியூனஸ் அயர்ஸ் நகரின் புறநகர்ப் பகுதியில் செயல்பட்டுக் கொண்டிருந்த வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஆகும். இந்தத் தொழிற்சாலையில் வேலைசெய்த தொழிலாளர்கள் மிகத் திறமையானவர்களாக கருதப்பட்டனர்.
1990 களில் தனியார்மயமாக்கல் உள்ளிட்ட அர்ஜெண்டீனாவின் பொருளாாதர கொள்கைகள் தொழிற்துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. 2001 ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் மூடப்பட்டன. சில நிறுவனங்கள் செயலிழந்து போயின. Forge நிறுவனமும் அந்தச் சூழலில் மூடப்பட்டு, உற்பத்தி நிறுத்தப்பட்ட தொழிற்சாலையாக மாறியது.
தொழிலாளர்கள் வேலை இழந்தனர். உழைப்பு, ஊதியம் என நன்றாகப் போய்க்கொண்டிருந்த வாழ்க்கை, வேலையிழப்பால் கடும் நெருக்கடிக்குள்ளானது. குடும்பத்தைப் பற்றிய சிந்தனைகள் தூக்கத்தை தொலைக்கச் செய்தன. இந்த நேரத்தில் அவர்களுக்குள் ஒரு கேள்வி எழுந்தது. “தொழிற்சாலை இருக்கிறது. இயந்திரங்களும் இருக்கிறது. வேலைசெய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். அபப்டியென்றால், ஏன் உற்பத்தி நடக்கக் கூடாது?” என்ற இந்தக் கேள்வி போராட்டமாக மாறுகிறது. இதிலிருந்து முற்றுகை – எதிர்ப்பு – உற்பத்தி என்ற அரசியல் நடைமுறை உருவாகிறது.
Forga ன் 84 தொழிலாளர்கள் தொழிலாளர் கூட்டுறவை உருவாக்கும் ஆவணத்தில் கையெழுத்திடுகின்றனர். 2003 ல் 40 தொழிலாளர்கள் தொழிற்சாலையின் உள்ளே சென்று ஆக்கிரமிக்கத் தொடங்குகின்றனர். திரைப்படக் குழுவினர் அந்த நிகழ்வை நேரடியாக பதிவு செய்திருக்கிறார்கள். இரவுகள் உட்பட மூன்று நாட்கள் தொழிற்சாலைக்கு உள்ளேயே இருந்து அந்த ஆக்கிரமிப்பை படமாக்கியிருக்கிறார்கள் திரைப்படக் குழுவினர். அந்த வகையில் தி டேக் ஒரு வரலாற்று சம்பவத்தை நினைவுகூரும் படம் மட்டுமல்ல! தொழிலாளர்கள் தொழிற்சாலையைக் கைப்பற்றும் தருணத்தை நேரடியாகப் பதிவுசெய்த ஆவணப்படம்.
எதுவும் எளிமையாக இருக்கவில்லை, தொழிற்சாலை ஆக்கிரமிப்பு போராட்டம், நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம், இன்னொரு பக்கம் அரசியல் அதிகாரத்தை எதிர்த்துப் போராட்டம் என தொழிலாளர்கள் எல்லாப்பக்கமும் சுழன்று வேலைசெய்து கொண்டிருந்தார்கள்.
இப்படியாக அந்தக் காலத்தில் மூடப்பட்ட அல்லது கைவிடப்பட்ட தொழிற்சாலைகளை தொழிலாளர்களே கைப்பற்றும் Recovered Factory இயக்கம் மெல்ல வளரத் தொடங்கியது. அந்த இயக்கத்தில் Forge மிக முக்கியமான தொழிற்சாலையாகும். அதே இயக்கத்தில் வேறு சில தொழிற்சாலைகள் இருந்தன.
அதில் முக்கியமானது, Brukman என்ற ஆயத்த ஆடைத் தொழிற்சாலையும் அடங்கும். குறிப்பாக இந்தத் தொழிற்சாலை பெண்கள் மட்டுமே பணிபுரியும் தொழிற்சாலையாகும். அதே பெண்களால் அந்த தொழிற்சாலை கைப்பற்றப்பட்டு, தொடர்ந்து உற்பத்தி செய்யப்பட்டது. இரண்டாவதாக Zamon/Fasinpat என்ற செராமிக் தொழிற்சாலையும் இதேபோல தொழிலார்கள் ஏற்று நடத்திய தொழிற்சாலையாகும்.
இப்படியாக இந்தத் திரைப்படம் எழுப்பும் முக்கியமான கேள்வி Forga தொழிற்சாலை யாருடையது என்பது மட்டுமல்ல, “ஒரு சமூகத்தை இயக்கும், உற்பத்தி அமைப்பை உருவாக்கும் மனிதர்களுக்கே, அந்த அமைப்பை நிர்வகிக்கும் அதிகாரம் இருக்க வேண்டாமா? என்று கேட்கிறது. உழைப்பின் மீது யாருக்கு அதிகாரம் என்ற கேள்வி கேட்கப்பட வேண்டிய கேள்விதான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியுமா என்ன?
முதலாளித்துவத்திற்கு மாற்று இல்லை என்று சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில், மக்கள் தங்களுடைய வாழ்க்கையையும், பொருளாதாரத்தையும் வேறு விதமாக அமைத்துக்கொள்ள முடியுமா? என்ற கேள்விகளுக்கான பதிலை புத்தகங்களில் தேடாமல், நிஜ வாழ்க்கையில் தேடவேண்டும் என்று சொல்கிறது இந்தத் திரைப்படம்.
“நம்பிக்கை கொடுக்கக் கூடிய ஒரு திரைப்படத்தை உருவாக்க நினைத்தோம்” என்ற சொன்ன இயக்குநர்களின் நம்பிக்கை பொய்த்துவிடவில்லை. மிகுந்த நம்பிக்கையை விதைக்கும் திரைப்படமாக தி டேக் இருக்கிறது. தொடர்ந்து தங்கள் படைப்புகளில் நவதாராளவாத பொருளாதார அமைப்பை கடுமையாக விமர்சனம் செய்து கொண்டிருக்கும் இயக்குநர்கள் இப்படிச் சொல்கிறார்கள்.
“ஒரு புத்தகத்தின் மூலமாகவோ அல்லது ஒரு கட்டுரையின் மூலமாகவோ விமர்சிப்பதற்குப் பதிலாக, அதற்கு எதார்த்தத்தில் விடை சொல்கிறவர்களைப் படம்பிடிக்க நினைத்தோம், ஏனென்றால் அவர்கள்தானே நடைமுறையில் உதாரண சக்தியாக திகழ்கிறார்கள்” என்று தொழிலாளர்கள் சக்தியை உரத்துச் சொன்னார்கள்.
இயக்குநர்கள் இந்தத் திரைப்படத்திற்காக அர்ஜெண்டீனாவைத் தேர்ந்தெடுத்தது தற்செயலானது அல்ல. அந்த நேரத்தில் அர்ஜெண்டீனா ஜனநாயகத்தின் ஆய்வுக்கூடமாக இருந்தது. பழைய அரசியல் அமைப்பின் மீது நம்பிக்கை குறைந்து புதிய அரசியல் தேடலில் இருந்தார்கள் அர்ஜெண்டீன மக்கள்.
தொழிற்சாலைகளை கூட்டுறவு முறையில் நடத்தாலாம் என்ற அவர்களின் எண்ணத்திற்குப் பின்னால் சோவியத்தின் கூட்டுப்பண்ணையிலிருந்து, புரட்சிகள் பிரசவித்த நிறைய உதாரணங்கள் உலகமுழுவதும் இருக்கின்றன. அந்த மாற்றங்களை அறிந்த தொழிலாளர்கள் மேலும் புதிய மாற்றங்களுக்குத் தொடக்கமாக இருக்கிறார்கள்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காரணங்களைச் சொல்லி வேலைநீக்கத்தை நிகழ்த்திக் கொண்டுதான் இருக்கிறார்கள் தொழிற்சாலை முதலாளிகள். தங்கள் உரிமைகளை அறியாத தொழிலாளர்கள் என்ன செய்ய வேண்டும், எப்படி எதிர்க்க வேண்டும் என்பதை அறியாதவர்களாக அமைதியாக, எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு கடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லோரிடமும் இந்தத் திரைப்படத்தை சொல்ல நினைக்கிறேன்.
பாருங்கள் தொழிலாளர்களே, உங்களைப் போன்ற அர்ஜெண்டீன தொழிலாளர்கள். தொழிற்சாலை மூடப்பட்டதும், அமைதியாக விதியென்று நினைத்து வீட்டிற்குச் செல்லாமல், தொழிற்சாலையைக் கைப்பற்றி நிர்வகிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். எல்லாவற்றையும் உருவாக்கும் உங்களால், செய்யமுடியாதென்று நினைக்காதீர்கள். முயற்சிதான் ஒரேஒரு முயற்சிதான். பூமியில் வரலாற்றை எழுதுவதற்கு உங்களால்தான் முடியும்.
கட்டுரையாளர் : ஜோசப் ராஜா | கவிஞர் / திரைக்கதை ஆசிரியர்
தொடர்புக்கு: writer.josephraja@gmail.com