

2015இல் இத்தாலியின் தலைநகரமான ரோமில் வாழ்ந்து கொண்டிருந்த யூதக் குடும்பத்தில், 1920இல் பிறந்த எழுத்தாளர் ரூபினோ ரோமியோ சால்மோனி, 1940களில் சாவின் கரங்களிலிருந்து தப்பிப்பிழைத்து, இவ்வளவு காலமும் அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கையை வாழ்ந்து முடித்து கடந்த 2011இல் இறந்தார். எல்லாருடைய வாழ்க்கையும் அர்த்தமுள்ள வாழ்க்கையாக இருந்துவிடுவதில்லை. அர்த்தமுள்ள வாழ்க்கையை அவ்வளவு எளிதாக வாழ்ந்து முடித்துவிடவும் முடியாது. சால்மோனி வாழ்ந்து முடித்தார்.
1943இல் ரோமில் வாழ்ந்து கொண்டிருந்த யூதர்களைக் கைது செய்வதற்காக நாஜிகள் நடத்திய மனித வேட்டையிலிருந்து தப்பித்தவர் சால்மோனி. ஆனால், அடுத்த ஆண்டிலேயே இத்தாலிய காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டார் சால்மோனி. தொடர்ந்து இரண்டு சிறைகளுக்கு மாற்றப்பட்டவர், ஜுன் மாதத்தில் ஹிட்லர் செய்த மானுடக் கொடூரத்தை இன்றுவரையிலும் உலகிற்குச் சொல்லிக்கொண்டிருக்கும் போலந்தின் ஆஸ்ட்விட்ச் வதை முகாமிற்கு, மற்ற யூதர்களோடு தொடர் வண்டியில் அனுப்பி வைக்கப்பட்டார் சால்மோனி.
நாடுகடத்தப்பட்ட சால்மோனிக்கு அங்கு A15810 என்கிற கைதி எண் வழங்கப்பட்டது. அவருடைய இரண்டு சகோதரர்களும்கூட அதே வதைமுகாமில் அடைக்கப்பட்டிருந்தனர். ஆனால், அவர்கள் இருவரும் நாஜிகள் செய்த இனப்படுகொலையில் அநியாயமாகக் கொல்லப்பட்டனர். சால்மோனி மட்டும் சாவின் கரங்களிலிருந்து தப்பித்தார்.
வதைமுகாமில் கட்டாயத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதையும், பசி, குளிர், நோய், மரணத்தின் அச்சம் ஆகிய அனைத்தையும் எதிர்கொண்ட அனுபவங்களைப் பின்னாளில் சுயசரிதை நூலாக எழுதினார். புத்தகத்தின் தலைப்பு ’நான் ஹிட்லரைத் தோற்கடித்தேன்.’
இந்தப் புத்தகத்தின் வழியாக அவர் சொல்ல நினைத்தது, ‘ஹிட்லர் என்னைக் கொல்ல நினைத்தான், ஆனால் நான் உயிருடன் திரும்பினேன். எனவே இறுதியில் வென்றவன் நான்தான்’ என்கிற நம்பிக்கையைத்தான். மேலும் ஆஸ்ட்விட்ச் போன்று மனிதத் தன்மை அழிக்கப்பட்ட இடத்திலும் சால்மோனி நம்பிக்கையையும், நகைச்சுவை உணர்வையும் இழக்கவில்லை என்பதைப் புத்தகத்தை வாசிக்கும்போது உணர்ந்து கொள்ளலாம். இந்தத் திரைப்படத்திற்கும், இந்தப் புத்தகத்திற்கும் சம்பந்தம் இருக்கும் என்பதை இந்நேரம் நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள்.
இந்தத் திரைப்படத்தின் இயக்குநர் ராபர்ட்டோ பெனிக்னி இந்தப் புத்தகத்தையும், சால்மோனியையும் அறிந்திருந்தார். சால்மோனியின் வாழ்க்கை திரைக்கதை எழுதுவதற்கான திறவுகோலைக் கொடுத்தது. முக்கியமாக அந்தப் புத்தகத்தில், மரணத்தின் நடுவிலும் வாழ்க்கையைப் பற்றிக் கொண்டிருக்கும் மனநிலை, இருண்ட சூழ்நிலையிலும் நகைச்சுவையை ஓர் உயிர்வாழும் கருவியாகப் பயன்படுத்துதல் போன்ற அம்சங்கள் நாயகனின் கதாபாத்திரத்தை உருவாக்குவதில் தாக்கம் ஏற்படுத்தின.
“அந்த அளவுக்குக் கொடூரமான அனுபவத்தைச் சந்தித்துவிட்டு, இப்படியாக எப்படி அவரால் வாழமுடிந்தது என்பது அளவிடவே முடியாத மகத்துவத்தின் வெளிப்பாடு” என்று சால்மோனியைப் பற்றிச் சொன்னார் இயக்குநர் பெனிக்னி.
இந்தத் திரைப்படம் உருவாவதற்கு சால்மோனியின் அனுபவங்களின் வெளிப்பாடான புத்தகம் ஒருபக்கம் காரணமென்றால், இன்னொரு பக்கம் இந்தத் திரைப்படம் உருவாவதற்குப் பின்னால் இன்னொருவரின் வாழ்க்கையும் அடங்கியிருந்தது. அவர் பெயர் லூயிஜி பெனிக்னி, இயக்குநர் ராபர்டோ பெனிக்னியின் தந்தை.
இரண்டாம் உலகப்போரின் போது முசோலினியின் இத்தாலிய ராணுவத்தில் பணிபுரிந்தவர். 1943இல் இத்தாலி ஆக்சிஸ் கூட்டணியிலிருந்து வெளியேறிய பிறகு, ஜெர்மானியர்களால் கைதுசெய்யப்பட்டு, இரண்டு ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டார். அங்கு கடுமையான பசி, கடுமையான தண்டனை போன்றவற்றை அனுபவித்தார்.
ஆனபோதிலும், அவர் விடுதலையாகி வீட்டிற்குத் திரும்பிய பிறகு, தன்னுடைய குழந்தைகளிடம் அந்தக் கொடூரமான அனுபவங்களை அப்படியே சொல்லாமல், நகைச்சுவையுடன் ஒரு கதையைப் போலச் சொன்னார்.
இதைப் பற்றி இயக்குநர் பெனிக்னி, “என் தந்தை அந்த அனுபவத்தை எங்களுக்கு ஒரு கதைபோலச் சொல்வார். நாங்கள் பயந்துவிடக் கூடாது என்று அவர் பயந்தார். அவர் எங்களைப் பாதுகாத்தார். திரைப்படத்தில் நான் என் மகனைப் பாதுகாப்பதைப் போல” என்று சொல்லியிருக்கிறார். இதுதான் இந்தத் திரைப்படத்தின் மையக்கருத்தைப் புரிந்துகொள்ள கூடிய திறவுகோல்.
மிகப் பயங்கரமான அனுபவத்தை நகைச்சுவையாகப் பகிர்ந்து கொண்ட தந்தையை, அவரின் வார்த்தைகளைக் கலைஞனான பிறகு தன் கலையில் வேறு விதமாக வெளிப்படுத்துகிறார் பெனிக்னி. வதைமுகாமின் பயங்கரத்தை, ‘இது ஒரு விளையாட்டு’ என்று வலியை மறைத்துக்கொண்டு அவனோடு விளையாடுகிறார் பெனிக்னி.
இன்னொரு நேர்காணலில், “தந்தையின் முகமும் அவர் சொன்ன கருத்துகளும் திரைப்படத்தை உருவாக்கும் போது மீண்டும் மீண்டும் நினைவிற்கு வந்தன. ஒருவேளை என் தந்தைதான் இந்தத் திரைப்படத்தை எனக்குப் பரிந்துரைத்திருக்கலாம் என்று நம்புகிறேன்” என்று சொல்லியிருக்கிறார் பெனிக்னி.
இத்தாலியில் 1997இல் வெளியான இந்தத் திரைப்படத்தை இயக்கியும் நடித்தும் இருக்கிறார் ராபர்ட்டோ பெனிக்னி. படத்திற்கான திரைக்கதையை வின்சென்ஸோவுடன் சேர்ந்து எழுதியிருக்கிறார். விமர்சனரீதியாகவும், வணிகரீதியாகவும் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
ஹாலோகாஸ்ட் போன்ற துயரமான வரலாற்றை நகைச்சுவையுடன் இணைத்திருந்ததற்காகச் சில விமர்சனங்கள் எழுந்தாலும், திரைக்கதையும் கதாபாத்திரங்களின் நடிப்பும், பெனிக்னியின் இயக்கமும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்தன. உலகம் முழுவதும் நல்ல வசூலைச் செய்திருந்தாலும், அமெரிக்காவில் அதிக வசூல் செய்த வெளிநாட்டு மொழித் திரைப்படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது.
இந்தத் திரைப்படம் பெற்ற விருதுகள் என்று எடுத்துக்கொண்டால், முற்றுப்புள்ளி வைக்காமல் சொல்லிக்கொண்டே போகலாம். 1998இல் கான் திரைப்பட விழாவில் கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்றது. அதைத் தொடர்ந்து உலகம் முழுவதுமாகப் பல விருதுகளை வாங்கிக் குவித்தது.
மிக முக்கியமாக, சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படம், சிறந்த நடிகர் என மூன்று ஆஸ்கர் விருதுகளை வாங்கியது இந்தத் திரைப்படம். சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்ற முதல் ஆங்கிலமல்லாத மொழித் திரைப்பட நடிகராக ராபர்ட்டோ பெனிக்னி வரலாற்றில் இடம்பிடித்தார்.
இருளும் பயமும் துயரமும் கண்ணீரும் சூழ்ந்திருக்கும் காலங்களிலும் வாழ்க்கையின் அழகைக் கண்டறியும் மனித முயற்சியின் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக காலத்திற்கும் இந்தப் படம் இருக்கத்தான் செய்யும். இந்தப் படத்தை எடுக்க வேண்டாம் என்று பெனிக்னியின் நண்பர்கள் அறிவுறுத்தினர்.
பெனிக்னி ஒரு நகைச்சுவை நடிகர், மேலும் அவர் யூதர் அல்லர், ஹாலோகாஸ்ட் அவரது வழக்கமான பார்வையாளர்களின் ஆர்வப் பொருள் அல்ல என்று அவர்கள் எண்ணினர். ஆனாலும் ஒரு கலைஞனாகத் தான் சொல்ல வேண்டும் என்று நினைத்தவற்றை இந்தப் படத்தின் வழியாகத் தெளிவாகச் சொன்னார் பெனிக்னி.
இந்தத் திரைப்படத்தின் இசையைச் சொல்லாமல் இருக்க முடியாது. காதலையும் அன்பையும் மானுட வேதனையையும் வெளிப்படுத்திய இசை இறவாமல் இன்றும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. இத்தாலிய இசையமைப்பாளர் நிகோலா மிகச் சிறப்பான இசையை வழங்கியிருக்கிறார். அதானால்தான் உலகம் முழுவதும் இந்தத் திரைப்படத்தின் இசை மிகப்பெரிய பாரட்டைப் பெற்றது. இசைக்கான ஆஸ்கர் விருதையும் பெற்றது. மேலும் கிராமி விருதிற்கும்கூடப் பரிந்துரைக்கப்பட்டது.
2001இல் இந்தத் திரைப்படம் இத்தாலிய அரசுத் தொலைக்காட்சி நிறுவனத்தில் ஒளிபரப்பப்பட்டது. சுமார் 1.6 கோடி பார்வையாளர்கள் திரைப்படத்தைப் பார்த்தனர்.இத்தாலியத் தொலைக்காட்சி வரலாற்றில் அதிகமான பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட திரைப்படம் என்கிற சாதனையைப் பெற்றது.
சிறந்த நடிப்பிற்காகவும், மிகச்சிறந்த இயக்கத்திற்காகவும் பெனிக்னி உலகம் முழுவதிலுமிருந்து பாரட்டைப் பெற்றார். நாயகியாக நடித்திருந்த பெனிக்னியின் மனைவி நிக்கோலெட்டாவின் நடிப்பும் சிறப்பான வரவேற்பை பெற்றது. இத்தாலிய பத்திரிகைகள் பெனிக்னியை, ‘தேசிய வீரர்’ என்று புகழ்ந்து எழுதின.
போப் இரண்டாம் ஜான் பால் தனிப்பட்ட திரையிடலில் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, தமக்கு மிகவும் பிடித்த திரைப்படங்களின் பட்டியலில் இந்தப் படத்தையும் சேர்த்துக் கொண்டார். கான் திரைப்பட விழாவில் நடுவர் குழுத் தலைவராக இருந்த பிரபல இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்செஸின் கால்களை முத்தமிட்டு, விருதைப் பெற்றுக்கொண்ட பெனிக்னியின் செயல் எல்லாரையும் நெகிழச் செய்தது என்றால் மிகையில்லை.
இந்தத் திரைப்படம் ஹாலோகாஸ்டின் வரலாற்றைப் பற்றியதோடு மட்டுமல்ல; ஒரு தந்தை தனது மகனின் நம்பிக்கையைக் காப்பாற்றுவதற்காக உயிரையே அர்ப்பணித்த கதையாகவும் இருக்கிறது. இருள் சூழ்ந்த காலத்திலும் மானுட அன்பும் மானுட கற்பனையும் மானுட இதயத்தின் ஒளியும் அணையாமல் இருக்க முடியும் என்பதே இந்தப் படத்தின் மூலமாக பெனிக்னி உலகத்திற்குச் சொல்லும் செய்தி.
“சிரிப்பும் அழுகையும் ஆன்மாவின் ஒரே இடத்திலிருந்து வருகிறது. நான் ஒரு கதையாளர். என்னைப் பொறுத்தளவில் ஒரு படைப்பு அழகையும் கவிதையையும் அடைவதுதான் முக்கியமானது. அது நகைச்சுவையா, துயரமா என்பது முக்கியமில்லை; அழகை அடைந்தால் இரண்டும் ஒன்றே” என்கிறார் பெனிக்னி.
கான் திரைப்பட விழாவில், இதயத்தின் ஆழத்திலிருந்து இயக்குநர் பெனிக்னி வெளிப்படுத்திய வார்த்தைகள் இத்தாலியர்களுக்கு மட்டுமல்ல, இதயமுள்ள எவருக்கும் நெருக்கமானவைதான்.
“இந்தப் படத்தை உருவாக்கிய அனைவருடனும் இந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறேன். என் மனைவி நிக்கொலெட்டா, நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் எங்களுடன் உழைத்த ஒவ்வொருவரும் இந்த விருதின் பங்குதாரர்கள். இத்தாலிய சினிமாவிற்கும்,என்னை வளர்த்த கலாச்சாரத்திற்கும் நான் நன்றி செலுத்துகிறேன்.
இன்று நான் அனுபவிக்கும் இந்த மகிழ்ச்சி என் தனிப்பட்ட வெற்றியல்ல; அது எங்களுடைய கூட்டுப் பெருமை. சினிமா மனிதர்களை ஒன்றிணைக்க முடியும் என்று நான் நம்புகிறேன். சிரிப்பும் கண்ணீரும் ஒரே இதயத்திலிருந்து வருகின்றன. மனிதர்களை இன்னும் கொஞ்சம் நல்லவர்களாக மாற்ற முடிந்தால் அதுவே கலைக்கான மிகப் பெரிய வெற்றி” என்றார்.
இப்போது சொல்லுங்கள், இனப்படுகொலைகளுக்கு நடுவில் வாழ்க்கை அழகானதா? ஆம் அழகானதுதான். இனப்படுகொலை அசிங்கமானது. போர் அசிங்கமானது. சாதி, மதக் கலவரங்கள் அசிங்கமானவை. இவற்றுக்கெல்லாம் நடுவில் இருக்கும் வாழ்க்கை, வாழவேண்டும் என்கிற பேரார்வம் அழகானதுதான். உண்மையைச் சொன்னால் மானுட வரலாற்றை நகர்த்திச் செல்வது இந்த அழகுதான். அந்த அசிங்கமல்ல!
கட்டுரையாளர் : ஜோசப் ராஜா | கவிஞர் / திரைக்கதை ஆசிரியர்
தொடர்புக்கு: writer.josephraja@gmail.com