

யோகி பாபு நடித்துள்ள படத்துக்கு ‘கெணத்த காணோம்’ எனப் பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
பல்வேறு பெரிய நாயகர்களுடன் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும், அவ்வப்போது நாயகனாகவும் சில படங்களில் நடித்து வந்தார் யோகி பாபு. இதில் மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்திருந்தார். அப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராகி வந்தன.
தற்போது அப்படத்துக்கு ‘கெணத்த காணோம்’ எனப் பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. ‘ஒரு கிடாயின் கருணை மனு’ மற்றும் ‘சத்ய சோதனை’ உள்ளிட்ட படங்களின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் சுரேஷ் சங்கையா. ‘கெணத்த காணோம்’ படப்பிடிப்பு முடிவடைந்தவுடன், உடல்நலம் சரியில்லாமல் காலமானார். அப்படக்குழுவினர் இறுதிகட்டப் பணிகளை முடித்து, படத்தினை வெளியீட்டுக்கு தயார் செய்திருக்கிறார்கள்.
யோகி பாபு நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் லவ்லின் சந்திரசேகர், ராமகிருஷ்ணன், ரேச்சல் ரபேக்கா, ஜார்ஜ் மரியம், மொட்டை ராஜேந்திரன், கவிதா பாரதி, கலைபாண்டியன், ஹலோ கந்தசாமி மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக வி.தியாகராஜன், இசையமைப்பாளராக நிவாஸ் கே.பிரசன்னா ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.