

முதல்வர் ஸ்டாலின்
சென்னை: “திமுக ஐடி விங் நிர்வாகிகள் ‘டிஃபென்ஸ்’ மட்டுமே ஆடிக் கொண்டு இருக்கக் கூடாது; அவ்வப்போது அட்டாக்கிங் மோடுக்கும் செல்ல வேண்டும். ஆஃப்லைன், ஆன்லைன், இரண்டிலும் திமுகதான் ‘லயன்’ என்று காட்டுவோம்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் நடைபெற்ற ‘லோடிங் 2.0 ஐடி விங்’ நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் சந்திப்புக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: “நான் பெருமையோடு சொல்கிறேன்... தமிழ்நாட்டில் மட்டும் அல்ல, இந்தியாவிலேயே பூத் லெவலில் டிஜிட்டல் ஏஜெண்டுகளை வைத்திருக்கும் அரசியல் இயக்கம் என்றால், அது நம்முடைய திமுக.தான். ஐ.டி விங் என்றால் ஆன்லைன் வேலை மட்டும்தான் பார்ப்பார்கள் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், ஆஃப்லைனிலும் கலக்குவார்கள் என்று நீங்கள் நிரூபித்துக் கொண்டு இருக்கிறீர்கள்.
நம்முடைய ஆன்லைன் செயல்பாடுகள் இன்னும் வேகமாக அமைய வேண்டும் என்று இன்றைக்கு நாம் எல்லாம் ஒன்று கூடியிருக்கிறோம். ஆன்லைனில் உங்களின் வேலை ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்வது இல்லை; அஜெண்டாவை செட் செய்வது. ஏன் என்றால், நாம்தான் கன்டென்ட்டில் ‘கிங்’.
நூற்றாண்டுகளைக் கடந்த திராவிட இயக்கத்தின் முகம் நாம். 75 ஆண்டுகளைக் கடந்து, இன்றைக்கும் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் மிகப்பெரிய கட்சி நாம். நாம் செய்திருக்கும் திட்டங்கள்தான் இந்தியாவிற்கே இன்றைக்கு வழிகாட்டுகிறது. இன்னும் பெருமையாக சொல்ல வேண்டும் என்றால், நவீனத் தமிழ்நாட்டின் வளர்ச்சி வரலாற்றை எழுதுவதே நாம்தான்.
அப்படிப்பட்ட நம்மைக் களங்கப்படுத்தி, தமிழ்நாட்டுக்குள் நுழைந்துவிடலாம்; தமிழ்நாட்டை சிதைத்துவிடலாம் என்று நம்முடைய எதிரிகள் நினைக்கிறார்கள். அதற்கு அவர்கள் பயன்படுத்தும் ஆயுதம்தான், அவதூறுகள். எனவே, அந்த அவதூறுகளுக்கு மட்டுமே பதில் சொல்லிக் கொண்டு இருக்காமல், சோஷியல் மீடியாவிற்கான அஜெண்டாவையும் நாம்தான் செட் செய்ய வேண்டும். டிஃபென்ஸ் மட்டுமே ஆடிக் கொண்டு இருக்கக் கூடாது; அவ்வப்போது அட்டாக்கிங் மோடுக்கும் செல்ல வேண்டும்.
உங்கள் அனைவரிடமும் எழுத்துத் திறமை, ஃபோட்டோ டிசைனிங் - மீம்ஸ், வீடியோக்கள் உருவாக்குவது என்று பல திறமைகள் இருக்கிறது. இந்த ஒவ்வொரு திறமையையும் கட்சியின் வெற்றிக்காக நீங்கள் பயன்படுத்த வேண்டும். களத்தில் கட்சி நிர்வாகிகள் ஒரு நாளைக்கு நூறு வீடுகளுக்குள் செல்ல முடியும் என்றால், நீங்கள் அனைவரும் உங்களின் கருத்துகளால் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையே உங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைக்க முடியும்.
ஒவ்வொரு தொகுதிக்கும், மாவட்டத்திற்கும் பல பணிகளை இந்த 5 ஆண்டுகளில் செய்து கொடுத்திருக்கிறோம். கடந்த ஒரு மாதத்தில் மட்டுமே எத்தனை பேருந்து நிலையங்கள், எத்தனை மேம்பாலங்கள், எத்தனை மருத்துவமனை கட்டடங்கள், எத்தனை கல்லூரிக் கட்டடங்கள், அடுத்தடுத்து வரிசையாக ஒவ்வொன்றாக திறந்து வைக்க இருக்கிறோம். எனக்கே ஞாபகம் வைத்துக் கொள்ள சிரமமாக இருக்கிறது.
இன்றைக்கு நாம் எதிர்கொண்டு வீழ்த்த வேண்டிய முதல் விஷயமே ‘ஃபேக் நியூஸ்’தான். தமிழ்நாட்டுக்குள் எப்படியாவது கலவரத்தை உண்டு பண்ண வேண்டும். அந்தக் கலவரத் தீயில் குளிர் காய வேண்டும் என்று எதிரிகள் நினைக்கிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில் டிசைன் டிசைனாக பொய்ச் செய்திகளைப் பரப்பிப் பார்த்தார்கள். ஆனால், அவர்களின் எண்ணம் நிறைவேறவில்லை. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், அவர்களின் பிளான் எல்லாம் அம்பலப்பட்டு, அவமானப்பட்டு நிற்கிறார்கள். இந்த பொய்ச் செய்திகள் எனும் சவால்களை நாம் முறியடித்தாக வேண்டும். அதற்கு நீங்கள் ஒவ்வொருவரும் மிக விழிப்புடன் ஆன்லைனில் செயலாற்ற வேண்டும்.
பொய்ச் செய்திகளைப் பரப்புவதற்கென்றே, நிறைய ‘ரைட் விங்’ அக்கவுண்ட்களை பாஜக நடத்திக் கொண்டு வருகிறார்கள். அதில் பாதி அதிகாரப்பூர்வ பக்கங்கள், மீதியெல்லாம் மீம்ஸ் பேஜ் போன்று இருக்கும் பக்கங்கள். இவ்வாறு எதுவாக இருந்தாலும், நம்மைப் பற்றி ஒரு பொய்ச் செய்தி பரப்புகிறார்கள் என்றால், உடனே ஆதாரத்துடன் கமெண்ட்ஸ், ரிப்ளைஸ்-இல் நீங்கள் பதிலடி கொடுக்க வேண்டும்.
அந்தப் பொய்ச் செய்தியைப் படிப்பவர்களில் பாதி பேர் நம்முடைய விளக்கத்தைப் படித்தால் கூட அது உங்களுக்குக் கிடைத்த வெற்றிதான். இதை ஒருவர் செய்தால் போதாது, ஒவ்வொருவரும் செய்ய வேண்டும். அப்போதுதான் பொய்ச் செய்தி பரப்புபவர்களுக்கு பயம் இருக்கும். நம்முடைய ஆட்கள் நூற்றுக்கணக்கில் போடும் ரிப்ளையில் அவர்கள் அந்தப் பொய்ச் செய்தியையே டெலிட் செய்துவிட்டு ஓட வேண்டும்.
இப்போது கூட டெல்லியில் ஒன்றிய அரசு நடத்தும் ஒரு நிகழ்ச்சியைப் பற்றி, அமைச்சர்கள் உட்பட பல பாஜக-வினர் போலியான பெருமைகளை ஷேர் செய்து கொண்டு இருந்தார்கள். மொத்தப் பேரும் சேர்ந்து அம்பலப்படுத்தியதும் அந்த ட்வீட்டை எல்லாம் அமைச்சரே டெலிட் செய்துவிட்டார். அனைவரும் சேர்ந்து உண்மையைப் பேசினால் இதுதான் அவர்களின் நிலைமை. ஒவ்வொரு நாளும் இதைச் செய்ய வேண்டும்.
நம்மைச் சீண்டிப் பார்ப்பது போன்று நிறைய பதிவுகளைப் போடுவார்கள். ஆனால், நாம் அதை முதிர்ச்சியுடன் அணுக வேண்டும். காமெடியாக பதிலடி கொடுங்கள். கிண்டலாகப் பேசுங்கள். ஆனால், எதுவாக இருந்தாலும் பொறுமையாக, கூலாக டீல் செய்யுங்கள்.
“அவர்களுக்கு வந்தால் ரத்தம், நமக்கு வந்தால் தக்காளி சட்னி” என்ற நினைப்பில்தான் செய்தி சேனல்களும், தேர்தல் ஆணையமும்கூட செயல்படுகிறது. அதனால், நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு சொல்லையும், உருவாக்கும் ஒவ்வொரு கன்டென்டையும் பொறுப்புடன் உருவாக்குங்கள். நம்முடைய எதிரிகளுக்கு இருக்கும் ஊடக சொகுசு நமக்கு என்றைக்குமே இருந்தது கிடையாது. அதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.
தோழமைச் சக்திகளுடன் சிண்டு முடியும் வேலைகளில் எதிர்க்கட்சியினர் ஈடுபடுவார்கள். அவர்களின் சூழ்ச்சிக்கு நாம் இடம் தரக் கூடாது. கட்சியில் இருந்து வரும் அஃபிஷியல் செய்திகளை மட்டும் நம்பிச் செயல்படுங்கள். இஷ்டத்திற்குப் பரப்பப்படும் புரளிகளுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.
களம் நமக்குச் சாதகமாக இருக்கிறது. வெற்றி பெறுபவர்கள்தான் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவார்கள். களத்திலும், ஆன்லைனிலும் நாம் சரியாகச் செயல்பட்டோம் என்றால் நம்முடைய டார்கெட்டை நாம் நிச்சயம் அச்சீவ் செய்துவிடுவோம். அதற்கு அடித்தளமாகத்தான் இன்றைக்கு ‘ஆடுகளம்’ செயலியை லான்ச் செய்திருக்கிறோம்.
2019-இல் இருந்து தமிழ்நாட்டில் நடந்த அனைத்துத் தேர்தலுக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்று அனைவருக்கும் தெரியும். திமுக கூட்டணிதான் வெல்லும் என்று தெரிந்தே நடந்த தேர்தல்கள்தான் அனைத்தும். ஆனால், எப்படிப்பட்ட மார்ஜினில் வெற்றி பெறுவோம், எவ்வளவு வாக்கு வித்தியாசம், இந்த முடிவுகளுக்காகத்தான் நாம் காத்திருப்போம். 2026 தேர்தலும் அதே போன்றுதான். திமுக.வின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று. ஆனால், அது எவ்வளவு பெரிய வெற்றியாக அமைய வேண்டும் என்பதை நோக்கித்தான் நாம் அனைவரும் உழைத்துக் கொண்டு இருக்கிறோம்.
கட்சியில் உறுப்பினராக, நிர்வாகியாக இருந்து உழைக்கும் செயல்வீரர்கள் அனைத்து கட்சியிலும் இருப்பார்கள். ஆனால், அடிப்படை உறுப்பினராக கூட இல்லாமல், கொள்கைக்காக இணையத்தில் களமாடும் தோழர்கள் திமுக.விற்கு மட்டும்தான் உண்டு. இதை நீங்கள் பதவிக்காக செய்யவில்லை. எம்.பி. ஆக வேண்டும் - எம்.எல்.ஏ. ஆக வேண்டும் - கவுன்சிலர் ஆக வேண்டும் என்று செய்யவில்லை.
“இந்த இயக்கத்தால் கல்வியறிவைப் பெற்றவர்கள் நாம், கழகத்தின் திட்டங்களால் உயர்ந்தவர்கள் நாம், கலைஞரால் சமூக நீதிப் பார்வையை கற்றுக்கொண்டவர்கள் நாம், மொத்தத்தில், “திராவிடத்தால் எழுந்தோம்” என்கிற நன்றியுணர்வுடன் எதையும் எதிர்பார்க்காமல் தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்காக கட்சியை ஆதரிப்பவர்கள் நீங்கள்.
இப்படிப்பட்ட தொண்டர்கள் இல்லாத எதிர்க்கட்சிகளால் இந்த உணர்வை, உறவை எப்போதுமே புரிந்து கொள்ள முடியாது. நான் உறுதியாகச் சொல்கிறேன். தேர்தல் வெற்றிக்குப் பிறகு, இந்தப் பணிகளில் சிறப்பாகச் செயல்படும் உங்களை மீண்டும் சந்திப்பேன். ஆஃப்லைன், ஆன்லைன், இரண்டிலும் திமுகதான் ‘லயன்’ என்று காட்டுவோம்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.