

விஜய் சேதுபதி நடித்துள்ள ‘முத்து என்கிற காட்டான்’ வெப்தொடரை மணிகண்டனும் அஜித்குமாரும் இயக்கியுள்ளனர். இதில் இந்தி நடிகர் மிலிந்த் சோமன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதன் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் தமிழுக்கு வந்துள்ளார். இத்தொடர் தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் ஜியோ ஹாட்ஸ்டாரில் மார்ச் 27-ம் தேதி வெளியாகிறது.
இத்தொடரில் நடித்தது பற்றி மிலிந்த் சோமன் கூறியதாவது: நான் முதல் தமிழ்ப்படத்தில் நடித்த அனுபவம் மகிழ்ச்சியானது. பிறகு தமிழில் தொடர்ந்து நடித்தேன். தெலுங்கு படங்களிலும் நடித்துக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் ஒரே மாதிரியான கதாபாத்திரங்களாகவே வந்தன. ‘இனி அது போன்ற வேடங்களை விரும்பவில்லை’ என்று கூறிவிட்டேன்.
ஒரு கதாபாத்திரம் நேர்மறையான அம்சங்களைக் கொண்டிருந்தால், நடிக்கத் தயாராக இருக்கிறேன். கதாபாத்திரத்தின் நீளம் அல்லது முக்கியத்துவத்தை விட, அது முன்பு நான் நடிக்காத கதாபாத்திரமாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம். அது தோட்டக்காரராகவோ, சமையல்காரராகவோ, மாமாவாகவோ, தாத்தாவாகவோ இருக்கலாம். ஆனால் அது புதிதாக இருக்க வேண்டும்.
சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, அத்தகைய மாறுபட்ட கதாபாத்திரங்கள் எனக்கு அமையத் தொடங்கின. அந்த வரிசையில், ‘காட்டான்’ வெப் தொடரும் தேடி வந்தது. இதை ஏற்றுக்கொண்டதற்குப் பல காரணங்கள் உண்டு. முதலாவதாக, இது ஒரு தமிழ்த் தயாரிப்பு. 2-வது இதில் எனக்கு நேர்மறையான கதாபாத்திரம்.
இந்தக் கதாபாத்திரத் தின் தன்மையும், அது சித்தரிக்கப்பட்டுள்ள விதமும் சுவாரஸ்யமாக அமைந்திருந்தன. மேலும், படக்குழுவினர் மிகச் சிறந்தவர்களாக இருந்தனர். விஜய் சேதுபதி மிகவும் இனிமையானவர். அவர் என்னை தனது குடும்பத்தினருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். நாங்கள் மனம் விட்டுப் பேசினோம். அவர் ஒரு கணக்காளராகப் பணியாற்றியவர் என்ற தகவலை அப்போதுதான் தெரிந்து கொண்டேன்.
படப்பிடிப்புச் சூழலை மிகவும் சவுகரியமானதாக மாற்றியமைத்தார். நாங்கள் இணைந்து நடித்த ஒவ்வொரு காட்சியிலும், எந்தவிதமான மன அழுத்தமோ அல்லது இறுக்கமோ இல்லை. அந்த அனுபவம் மகிழ்ச்சியாகவும், இயல்பாகவும் அமைந்திருந்தது. நான் எப்போதும் அத்தகைய சூழலைத்தான் விரும்புவேன். இவ்வாறு மிலிந்த் சோமன் கூறினார். இந்தி நடிகரான மிலிந்த் சோமன் தமிழில் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’, ‘பையா’, ‘வித்தகன்’, ‘அலெக்ஸ் பாண்டியன்’ என சில படங்களில் நடித்துள்ளார்.