

விஜய் ஆண்டனி நடிக்கவுள்ள அடுத்த படத்தை ‘அயோத்தி’ இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கவுள்ளார்.
மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான படம் ‘அயோத்தி’. இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான கதை எழுதுவதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொண்டார் மந்திரமூர்த்தி. தற்போது அக்கதையை முழுமையாக முடித்து, அதில் நடிக்க விஜய் ஆண்டனி சம்மதம் தெரிவித்துள்ளார்.
மே மாதம் இறுதியில் மதுரையில் முழுவீச்சில் படப்பிடிப்பு தொடங்குகிறது. ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்கவுள்ளார்கள். தற்போது விஜய் ஆண்டனியுடன் நடிக்கவுள்ள நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக மாதேஷ் மாணிக்கள் பணிபுரியவுள்ளார்.
‘நூறு சாமி’ படத்தின் இறுதிகட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் ஆண்டனி. அதனை முடித்துவிட்டு மந்திரமூர்த்தி படத்தில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார். விஜய் ஆண்டனி – மந்திரமூர்த்தி இணையும் படத்தின் தயாரிப்பாளர் யார் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.