‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானார் - சோகத்தில் திரையுலகம்

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானார் - சோகத்தில் திரையுலகம்
Updated on
1 min read

சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 84. அவரது மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 1977-ம் ஆண்டு வெளியான '16 வயதினிலே' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, தமிழ் சினிமாவுக்கு புதியதொரு இலக்கணத்தை எழுதினார். அதுவரை பெரும்பாலும் ஸ்டூடியோவுக்கு உள்ளேயே முடங்கிக் கிடந்த கேமராவை, கிராமத்து வயல்வெளிகளுக்கும், மண் வாசனைக்கும் கொண்டு சேர்த்தார்.

‘கிழக்கே போகும் ரயில்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘முதல் மரியாதை’, ‘கருத்தம்மா’ என அவர் இயக்கிய அத்தனை திரைப்படங்களும் தமிழ் சினிமாவின் மைல்கற்களாக அமைந்தன. 'என் இனிய தமிழ் மக்களே' என்ற அவரது குரல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

அவரது படைப்புகளுக்காக நாட்டின் உயரிய  ‘பத்மஸ்ரீ' விருது வழங்கி மத்திய அரசு அவரை கவுரவித்தது. இதுதவிர பல தேசிய, மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். பல முன்னணி நட்சத்திரங்களையும், இயக்குநர்களையும் அறிமுகப்படுத்திய ஒரு பல்கலைக்கழகமாக  திகழ்ந்தார்.

தமிழ் சினிமாவில் கோலோச்சிய பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா உள்ளிட்ட பலரும் பாரதிராஜாவின் பட்டறையில் இருந்து வந்தவர்களே. அண்மைக் காலமாக பல்வேறு திரைப்படங்களில் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் தனது முத்திரையைப் பதித்தார்.

கடந்த சில நாட்களாக கடும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பாரதிராஜா, இன்று (ஜூன் 10) அதிகாலையில் காலமானார். அவரது மறைவுச் செய்தி திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானார் - சோகத்தில் திரையுலகம்
தமிழகத்துக்கு பேரிடர் மேலாண்மை நிதியாக மத்திய அரசு ரூ.1000 கோடி விடுவிப்பு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in