

சினிமா, உணர்ச்சிகளை காட்சியாக மாற்றும் கலை. ஒரு கதாபாத்திரம் திரையில் எப்படி நுழைகிறது, எப்படி வெளியேறுகிறது என்பதே பார்வை யாளரின் மனநிலையை தீர்மானிக்கும். வசனங்கள் இல்லாமலேயே, ஒரு மனிதன் கேமராவை நோக்கி வருகிறானா அல்லது அதிலிருந்து திரும்பிச் செல்கிறானா என்பது கதையின் உணர்ச்சி ஓட்டத்தை மாற்றிவிடும்.
இதில் தான் ஹெட்-ஆன் ஷாட் (Head-On Shot) மற்றும் டெயில்-அவே ஷாட் (Tail-Away Shot) என்ற 2 அடிப்படை காட்சி அமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை வெறும் இயக்கத் திசைகள் அல்ல; மனித வாழ்க்கையின் வருகை (Arrival) மற்றும் பிரிவு (Departure) என்ற ஆழமான அனுபவங்களின் சினிமா வெளிப்பாடுகள்.
ஹெட்-ஆன் ஷாட்: எதிர்கொள்ளலின் சக்தி:
ஹெட்-ஆன் ஷாட் என்பது கதாபாத்திரம் நேரடியாக கேமராவை நோக்கி நகரும் காட்சி. இது பார்வையாளருடன் உளவியல் ரீதியான நேரடித் தொடர்பை ஏற்படுத்தும் சக்திவாய்ந்த அமைப்பு. நிஜ வாழ்க்கையில் ஒருவர் நம்மை நோக்கி நடந்து வரும்போது, நம் மூளை இயல்பாக எச்சரிக்கை நிலைக்கு மாறுகிறது. சினிமாவிலும் இதே மனவியல் செயல்படுகிறது.
ஹீரோவின் அறிமுகம், மோதலுக்கு முந்தைய தீர்மானம், அதிகாரம் அல்லது ஆதிக்கத்தின் வெளிப்பாடு, மன உறுதி காட்டுதல், அபாயம் நெருங்கும் தருணம் ஆகியன இந்த ஷாட் பயன்படுத்தப்படும் முக்கிய சூழல்கள் ஆகும். ஒரு கதாபாத்திரம் ஃபிரேமை நிரப்பிக் கொண்டு நம்மை நோக்கி வரும்போது, பார்வையாளர் தம்மை அந்த நிகழ்வின் ஒரு பகுதியாக உணர்கிறார். அதனால் தான் பல காவியத் திரைப்படங்களில் வில்லன் அல்லது ஹீரோவின் அறிமுகம் இந்த இயக்கத்தால் அமைகிறது. இதன் தாக்கம் இயக்கத்தில் மட்டுமல்ல, காட்சியமைப்பிலும் உள்ளது.
சிமெட்ரி காம்போசிஷன் மூலம் மையத்தில் நடந்து வரும் கதாபாத்திரம் அதிகார உணர்வை உருவாக்கும். வைட் லென்ஸ் (24எம்எம்–35 எம்எம்) பயன்படுத் தினால், நடை வேகம் அதிகமாக உணரப்படும்; இடவெளி உயிரோட்டமாகத் தோன்றும். டெலிஃபோட்டோ லென்ஸ் பின்னணியைச் சுருக்கி, கதாபாத்தி ரத்தின் மனநிலையை முன்னிலைப் படுத்தும். டாலி அல்லது டிராக்கிங் மூலம் கேமரா பின்னோக்கி நகர்ந்தால், பார்வையாளருக்கு இழுக்கப்படுவது போன்ற உணர்வு ஏற்படும்.
இந்த ஷாட் பெரும்பாலும் ‘ஹீரோயிக் லாங்குவேஜ்’ ஆக செயல்படுகிறது. ஆனால் வீரத்தை மட்டும் காட்டுவதில்லை; மன அழுத்தம், தனிமை, குற்றஉணர்வு போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு மனிதன் மெதுவாக நம்மை நோக்கி வரும்போது, அது வெற்றி நடையா அல்லது உடைந்த மனதின் பயணமா என்பதை தீர்மானிப்பது ஒளி, வேகம், ஃபிரேம் ஸ்பேஸ் ஆகியவை.
டெயில்-அவே ஷாட்: பிரிவின் கவிதை
டெயில்-அவே ஷாட் என்பது கதாபாத்திரம் கேமராவிலிருந்து விலகிச் செல்லும் காட்சி. சினிமாவின் மிகக் கவிதைமயமான ஷாட் இது. ஏனெனில் பிரிவு என்பது மனித வாழ்க்கையின் ஆழமான உணர்வு. ஒருவர் நம்மை விட்டு செல்லும்போது அவரது முகத்தைப் பார்க்க முடியாது; அந்த அறியாமை, உணர்ச்சியை பெருக்குகிறது.
கதை முடிவு, தியாகம், தோல்வி, தனிமை, புதிய வாழ்க்கை நோக்கிய பயணம் ஆகிய இடங்களில் இந்த ஷாட் பயன்படுத்தப்படும். பல திரைப்படங்களின் இறுதி ஷாட் இதனால் ``வாக்கிங் அவே'' ஆகிறது. இதில் ஃபிரேம் ஸ்பேஸ் மிக முக்கியம். கதாபாத்திரம் சிறிது சிறிதாக குறையும்போது, மனிதன் நினைவாக மாறுகிறான்; நிகழ்வு அனுபவமாக மாறுகிறது.
வைட் ஷாட்டுகள் இங்கு பயன்படுகின்றன – சுற்றுப்புறம் பெரிதாக, மனிதன் சிறியதாகத் தோன்றும்போது வாழ்க்கையின் உண்மை வெளிப்படும். இது சினிமாட்டோகிராஃபியின் எக்சிஸ்டென்ஷியல் மொழி. பேக்லைட் முக்கியம் – சூரிய அஸ்தமனம், நீண்ட நிழல், சில்லவுட் ஆகியவை எண்ட் ஆஃப் ஜர்னி உணர்வைத் தரும். முகம் தெரியாததால், பார்வையாளர் தன் உணர்ச்சியை பிரதிபலிக்கிறார். இதுவே சினிமேடிக் எம்பதி.
இயக்கம் மற்றும் உணர்ச்சி அறிவியல்:
ஹெட்-ஆன் ஷாட் பார்வையாளரை நோக்கி ஆற்றலைக் கொண்டு வருகிறது – எங்கேஜ்மென்ட் உருவாக்குகிறது. டெயில்-அவே ஆற்றலை வெளியேற்றுகிறது – ரிஃப்ளெக் ஷன் ஏற்படுத்துகிறது. ஒரு படம் ஹெட்-ஆன் மூலம் தொடங்கி, டெயில்-அவே மூலம் முடிவது முழுமையான விஷுவல் ஆர்க். எடிட்டிங் ரிதம்: ஹெட்-ஆன் வேகமான கட், டென்ஷன்; டெயில்-அவே நீண்ட டேக், ஸ்லோ பேசிங், எமோஷனல் ரிலீஸ்.
உலக சினிமா உதாரணங்கள்:
‘கான் வித் த விண்ட்’ திரைப்படத்தின் இறுதியில் ரெட் பட்லரின் டெயில்-அவே – உறவின் முடிவு மற்றும் பிரிவின் துயரத்தை உணர்த்துகிறது. ‘நார்த் பை நார்த்வெஸ்ட்’-ல் கிராப்-டஸ்டர் சீக்வென்ஸ் ஹெட்-ஆன் மூலம் பரபரப்பை உருவாக்குகிறது.
கான் வித் த விண்ட்
தமிழ் சினிமாவில் யதார்த்தவாதத்தின் பிதாமகன் பாரதிராஜா, ‘பதினாறு வயதினிலே’ படத்தின் கிளைமாக்ஸில் டெயில்-அவே ஷாட்டை ஒரு காவியமாக மாற்றியிருப்பார். படத்தின் இறுதியில், மயிலுக்காக ஒரு கொலையைச் செய்துவிட்டு சப்பாணி கைதாகி ரயிலில் அழைத்துச் செல்லப்படுவார்.
இங்கே ரயில், கேமராவிலிருந்து விலகிச் செல்லும் காட்சி, ஒரு தியாகத்தின் சாட்சி. ரயில் தண்டவாளத்தில் தூரமாகச் செல்லச் செல்ல, சப்பாணி என்ற கதாபாத்திரம் மயிலின் வாழ்க்கையில் இருந்தும், பார்வையாளர்களின் பார்வையிலிருந்தும் மெல்ல மறைந்து நினைவாக மாறுகிறது. அந்தத் தூரம் அதிகரிக்க அதிகரிக்க, சப்பாணியின் மீதான அனுதாபமும், மயில் இழந்த துணையின் வலியும் பார்வையாளர்களின் மனதில் கனக்கத் தொடங்கும். இது ஒரு முழுமையான ‘எமோஷனல் ரிலீஸ்’.
இதற்கு நேர்மாறாக, மணிரத்னத்தின் ‘உயிரே’ படத்தில் ‘சையா சையா’ பாடல் தொடங்கும் விதம் சிறந்த ஹெட்-ஆன் உதாரணம். கார்மேகங்கள் சூழ்ந்த மலைப்பாதையில், கும்மிருட்டான குகைக்குள்ளிலிருந்து ரயில் எஞ்சின் கேமராவை நோக்கி சீறிக்கொண்டு வரும்.
இந்த ஹெட்-ஆன் ஷாட், ஒரு கதையின் தொடக்கத்தையோ அல்லது ஒரு புதிய உணர்ச்சியின் வருகையையோ குறிக்கிறது. இருட்டிலிருந்து வெளிச்சத்தை நோக்கி கேமராவை மிரட்டும் வேகத்தில் வரும் அந்த ரயில், ஷாருக்கானின் துடிப்பான காதலையும், படத்தின் வேகத்தையும் ஆரம்பத்திலேயே நிலைநிறுத்திவிடுகிறது.
கேமராவுக்கும் ரயிலுக்கும் இடையிலான இடைவெளி குறையக் குறைய, பார்வையாளரின் பதற்றமும் ஆர்வமும் உச்சத்தை அடைகிறது. இது ஒரு ‘ஹீரோயிக் என்ட்ரி’யாக மட்டுமன்றி, ஒரு காதலின் தீவிரம் நம்மை நோக்கிப் பாய்ந்து வருவதன் குறியீடாகவும் அமைகிறது. ‘பதினாறு வயதினிலே’ ரயிலின் விலகல் ஒரு முற்றுப்புள்ளியாகவும், ‘உயிரே’ ரயிலின் வருகை ஓர் ஆச்சரியக் குறியாகவும் அமைகின்றன. காட்சிமொழி என்பது தொழில்நுட்பமல்ல; அது திசைகளின் வழியே மனித இதயத்தின் துடிப்பைக் கடத்தும் ஒரு ரசவாதம்.
ஒளிப்பதிவின் தத்துவம்:
சினிமா மனித பயணத்தைப் பற்றியது. ஹெட்-ஆன்: வாழ்க்கை நுழைவு; டெயில்-அவே: விலகல். ஒளிப்பதிவாளர் உணர்ச்சியின் திசையை அமைக்கிறார். ஹெட்-ஆன்: “வாழ்க்கை உங்களை நோக்கி வருகிறது”. டெயில்-அவே: “அதை நினைவாக விடுங்கள்”. சினிமா மூவ்மெண்ட் அல்ல; வருகை மற்றும் பிரிவின் நினைவுகள்.
(புதன்தோறும் ஒளிகாட்டுவோம்)
- சி.ஜெ.ராஜ்குமார்
(திரைப்பட ஒளிப்பதிவாளர்)
cjrdop@gmail.com