ரியாக்‌ஷன் ஷாட்: நிசப்தம் பேசும் கவிதை | ஒளி என்பது வெளிச்சமல்ல 21

ஜூராஸிக் பார்க்

ஜூராஸிக் பார்க்

Updated on
3 min read

சினிமா என்பது 'செயல்' (ஆக்‌ஷன்) மற்றும் `எதிர்வினை' (ரியாக்‌ஷன்) ஆகிய 2 தூண்களால் ஆனது. ஒரு கதாபாத்திரம் பேசுவதைக் காட்டுவது, ஒரு தகவலைத் தருகிறது என்றால், அதைக் கேட்பவரின் முகத்தைக் காட்டுவது அந்தத் தகவலின் தாக்கத்தைத் தருகிறது. "ரியாக்‌ஷன் ஷாட்" என்பது தொழில்நுட்ப உத்தி என்பதோடு, அது ஒரு கதாபாத்திரத்தின் ஆன்மாவைத் திறந்து காட்டும் சாளரம்.

ரியாக்‌ஷன் ஷாட்டின் பரிணாமம்: சினிமாவின் ஆரம்ப காலங்களில், கேமரா மேடை நாடகத்தைப் பதிவு செய்யும் கருவியாக மட்டுமே பயன்படுத்தப்பட்டது. ஒரே பிரேமில் முழுக் காட்சியும் காண்பிக்கப்பட்டதால்,தனிப்பட்ட உணர்ச்சிகளைப் பதிவு செய்யும் மொழி உருவாகவில்லை.

1900-களின் தொடக்கத்தில் அமெரிக்க இயக்குநர் டி.டபிள்யூ.கிரிஃபித் (D.W. Griffith) திரைப்பட மொழியை மாற்றியபோதுதான், ரியாக் ஷன் ஷாட் தனித்துவமான கதை சொல்லும் கருவியாக உருவானது.

அவர் ‘கட் இன்’ (Cut-in) மற்றும் க்ளோஸ் அப்பயன்பாட்டை அறிமுகப்படுத்திய போது, ஒரு சம்பவத்தை மட்டும் அல்ல; அந்தச் சம்பவம் மனித மனதில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் காட்டலாம் என்பதை நிரூபித்தார்.

இதுவே, கன்டினியூட்டி எடிட்டிங் மற்றும் ஷாட் ரிவர்ஸ் ஷாட் இலக்கணம் உருவாகக் காரணமானது. அதன்பின் ஹாலிவுட் கிளாசிக்கல் சினிமாவில், குறிப்பாக உரையாடல் காட்சிகளில், ரியாக் ஷன் ஷாட் கட்டாயமான கதை மொழியாக மாறியது.

ரியாக் ஷன் ஷாட்டின் உளவியல்: ஒரு காட்சியில் என்ன நடக்கிறது என்பதை விட, அது ஒரு மனிதனை எப்படிப் பாதிக்கிறது என்பதே முக்கியம்.

உணர்ச்சிப்பாலம்: ஒரு செய்தியைக் கேட்டவுடன் ஒரு கதாபாத்திரத்தின் கண்கள் விரிவது அல்லது இதழ்கள் துடிப்பது, பார்வையாளரிடமும் அதே உணர்வைத் தூண்டும்.

ரகசியங்களை வெளிப்படுத்துதல்: வசனங்கள் பொய் சொல்லலாம், ஆனால் ரியாக் ஷன் ஷாட்டில் வெளிப்படும் ‘மைக்ரோ-எக்ஸ்பிரஷன்ஸ்’ உண்மையைச் சொல்லிவிடும்.

சரியான கோணங்கள்

ரியாக் ஷன் ஷாட் என்பது முகத்தை மட்டும் பதிவு செய்வது அல்ல; அது பார்வையாளரின் மனநிலையை வழிநடத்தும் தேர்வாகும்.

கண் மட்டம் (Eye-Level Angle): மிகவும் இயல்பான எதிர்வினை. பார்வையாளர் அந்தக் கதாபாத்திரத்துடன் உணர்ச்சிரீதியாக இணைகிறார்.

லோ ஆங்கிள் (Slight Low Angle): அந்தக் கதாபாத்திரம் திடீரென மன வலிமை அல்லது உணர்ச்சி ஆதிக்கம் பெறும் தருணங்களில் இது பயன்படும்.

ஹை ஆங்கிள் (High Angle): அதிர்ச்சி, பயம் அல்லது பலவீனத்தை வெளிப்படுத்த இது சிறந்தது. முழு நேர்முகக் காட்சிகள் சில நேரங்களில் தகவல் தரும்; ஆனால் ப்ரோவ்வைல் ரியாக் ஷன் உணர்ச்சியைத் துல்லியமாக உருவாக்கும்.

எக்ஸ்ட்ரீம் க்ளோஸ்-அப்பின் சக்தி: எக்ஸ்ட்ரீம் க்ளோஸ்-அப் என்பது ரியாக்‌ஷன் ஷாட்டின் உச்ச வடிவம். கண்கள், உதடுகள் அல்லது சிறிய தசை அசைவுகள் மட்டுமே திரையை நிரப்பும்போது, பார்வையாளர் வெளிப்புற உலகை மறந்து அந்த மன நிலைக்குள் இழுக்கப்படுகிறார். ஒரு கண் ஈரமாக மாறும் தருணம், உதட்டின் நுண் நடுக்கம், மூச்சின் மெல்லிய மாற்றம்...

இவை அனைத்தும் ‘மைக்ரோ-எக்ஸ் பிரஷன்ஸ்’ ஆகச் செயல்படுகின்றன. பெரிய நடிப்புத் தேவையில்லை; கேமராவே உணர்ச்சியைப் பெரிதாக்குகிறது. இதனால்தான் பெர்க்மன், குரோசவா, மணிரத்னம் போன்ற இயக்குநர்கள் முக்கிய உணர்ச்சி தருணங்களில் வைட் ஷாட்லிருந்து திடீரென இந்த எக்ஸ்ட்ரீம் க்ளோஸ்-அப் ஷாட்டுக்கு நகர்கிறார்கள். அந்த மாற்றமே பார்வையாளரின் உள்ளுணர்வை அதிரச் செய்கிறது.

நீண்ட ரியாக் ஷன் ஷாட்கள் மற்றும் இசையின் மாயாஜாலம்

ஒரு ரியாக் ஷன் ஷாட் நீண்ட நேரம் திரையில் நிற்கும்போது, அங்கே வசனங்களின் தேவை இருப்பதில்லை. அந்த மவுனத்தை நிரப்பி, உணர்ச்சியின் தீவிரத்தை உச்சத்துக்குக் கொண்டு செல்வது பின்னணி இசை மட்டுமே. தமிழ் சினிமாவில் இதற்கு மிகச்சிறந்த உதாரணம் இளையராஜா.

உதிரிப்பூக்கள் (1979): இயக்குநர் மகேந்திரனின் இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் ஒரு காவியம். தந்தை ஆற்றில் அடித்துச் செல்லப்படுவதைப் பார்க்கும் அந்த குழந்தைகளின் முகங்களில் கேமரா நீண்ட நேரம் நிலைக்கும். அங்கே குழந்தைகள் அழவில்லை, கத்தவில்லை.

ஆனால் இளையராஜாவின் அந்த வயலின் இசை, அந்தச் சிறுவர்களின் மனதுக்குள் இருக்கும் சொல்லொணாத் துயரத்தையும் குழப்பத்தையும்பார்வையாளனின் இதயத்தில் பதிக்கும். இசை இங்கே ஒரு கதாபாத்திரமாக மாறி, அந்த நீண்ட ரியாக் ஷன் ஷாட்டுக்கு உயிர்மூச்சை அளிக்கிறது.

எப்போது தவிர்க்க வேண்டும்?

சினிமாவில் ‘மவுனம்’ எவ்வளவு முக்கியமோ, அதேபோல எதைக் காட்டக் கூடாது என்பதும் முக்கியம். ரியாக் ஷன் ஷாட்கள் வலிமையானவை என்பதால் அவற்றை மிக கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.

நாடகத்தன்மை: ஒவ்வொரு சிறிய வசனத்துக்கும் அல்லது சாதாரண தகவலுக்கும் எதிர்வினையைக் காட்டிக் கொண்டே இருந்தால், அது ஒரு திரைப்படத்துக்கான தன்மையை இழந்து தொலைக்காட்சித் தொடர் போன்ற உணர்வைத் தரும். இது பார்வையாளரின் கவனத்தைச் சிதறடிக்கும்.

வசனத்தின் வீச்சைத் தடுத்தல்:

ஒரு கதாபாத்திரத்தின் வசனம் மிகவும் கூர்மையாகவும், உணர்வுப்பூர்வமாகவும் இருக்கும்போது, திடீரெனக் கேட்பவரின் முகத்தைக் காட்டுவது அந்த வசனத்தின் வேகத்தைக் குறைத்துவிடும். அங்கே பேசுபவரின் முகத்தில் இருக்கும் தீவிரமே முக்கியம்.

உணர்ச்சிக் குறைவான தருணங்கள்: காட்சிக்கு வலுசேர்க்காத சாதாரண உரையாடல்களின் போது தேவையற்ற ரியாக்‌ஷன் ஷாட்கள் எடிட்டிங் தாளத்தை (Rhythm) பாதிக்கும். ஒரு மர்மம் உடையும்போதோ அல்லது ஒரு மாற்றம் நிகழும்போதோ மட்டுமே ரியாக்‌ஷன் ஷாட், தன் முழு வீரியத்தைப் பெறும்.

பார்வையாளரின் கற்பனைக்கு இடம் விடாமை:

சில நேரங்களில் அதிர்ச்சிகரமான செய்தியை ஒருவர் கேட்கும்போது, அவர் முகத்தைக் காட்டாமல் முதுகுப் புறத்தைக் காட்டுவது அல்லது நிழலைக் காட்டுவது அதிகப் பாதிப்பை ஏற்படுத்தும். எல்லாவற்றையும் நேரடியாகக் காட்டிவிடுவது ரியாக்‌ஷன் ஷாட்டின் மதிப்பைக் குறைத்துவிடும்.

<div class="paragraphs"><p>தி யூஸுவல் சஸ்பெக்ட்ஸ்</p></div>

தி யூஸுவல் சஸ்பெக்ட்ஸ்

தொழில்நுட்ப விதிகள் மற்றும் உலக சினிமா:

ரியாக்‌ஷன் ஷாட்டை அமைக்கும்போது ஐ லைன் மேட்ச் (Eye Line Match) மிகவும் முக்கியம். பேசுபவர் பார்க்கும் திசையும், எதிர்வினை ஆற்றுபவர் பார்க்கும் திசையும் நேர்க்கோட்டில் இருக்க வேண்டும். அதேபோல், கண்களில் ஒளி அவசியம்.

ஜூராஸிக் பார்க்: டி-ரெக்ஸ் முதன்முதலில் தோன்றும்போது, டைனோசரைக் காட்டுவதற்கு முன் மருத்துவர்களின் முகத்தையே கேமரா காட்டும். அவர்கள் கண்களில் தெரியும் அந்த மலைப்பும் பயமும், அந்த மிருகம் எவ்வளவு பிரம்மாண்டமானது என்பதைப் பார்வையாளருக்கு முன்கூட்டியே உணர்த்திவிடும்.

தி யூஸுவல் சஸ்பெக்ட்ஸ்: படத்தின் இறுதியில் வரும் புகழ்பெற்ற ட்விஸ்ட், உண்மையை உணரும்போது துப்பறியும் அதிகாரியின் முகத்தில் மாறும் அந்த ரியாக்‌ஷன் ஷாட்டுகள் மூலமே கதையை மறுவரையறை செய்கிறது. அங்கே கேமரா நகர்வும், அதிகாரியின் முகபாவனையும் மட்டுமே பார்வையாளரை இருக்கையின் நுனிக்குக் கொண்டு வரும்.

ரியாக்‌ஷன் ஷாட் என்பது திரையில் உள்ள கதாபாத்திரத்துக்கும் பார்வையாளருக்கும் இடையிலான கண்ணுக்குத் தெரியாத பாலம்.

இது வெறும் ‘பார்வை’ அல்ல; அது ஒரு ‘பதில்’. நிகழ்வைக் காட்டுவதை விட, ஒரு மனிதன் அந்த நிகழ்வை அனுபவிக்கும் தருணத்தைப் பதிவு செய்வதே அதன் உண்மையான கலை.

இயக்குநர் மகேந்திரனின் மவுனம், மணிரத்னத்தின் நெருக்கம், இளையராஜாவின் இசை - இவை அனைத்தும் இணையும்போது ரியாக்‌ஷன் ஷாட் என்பது சினிமாவின் மிக உயரிய கவிதையாக மாறுகிறது.

(புதன்தோறும் ஒளிகாட்டுவோம்)

<div class="paragraphs"><p>ஜூராஸிக் பார்க்</p></div>
ஓவர்​-​தி-ஷோல்​டர் ஷாட் (OTS): திரைமொழி​யின் உளவியல் ஊடுரு​வல் | ஒளி என்பது வெளிச்சமல்ல 21

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in