ஒப்பனைக்கலை மற்றும் ஒளிப்பதிவின் அறிவியல்: அழகும் யதார்த்தமும் | ஒளி என்பது வெளிச்சமல்ல 41

ஒப்பனைக்கலை மற்றும் ஒளிப்பதிவின் அறிவியல்: அழகும் யதார்த்தமும் | ஒளி என்பது வெளிச்சமல்ல 41
Updated on
3 min read

திரைப்​படத்​தில் ஒப்​பனை (Make-Up) என்​பது வெறும் அழகுபடுத்​தும் கருவி மட்​டுமல்ல. அது ஒரு கதா​பாத்​திரத்தை உரு​வாக்​கும் முக்​கிய​மான கலை. ஒரு நடிகரை இளமை​யாக​வும், வயதான தோற்​றத்​தி​லும், நோயுற்​றவ​ராக​வும், வீர​னாக​வும் வில்​ல​னாக​வும் மாற்​றும் சக்தி ஒப்​பனைக்கு உண்​டு. ஆனால் ஒரு சிறந்த ஒப்​பனை, சரி​யான ஒளிப்​ப​திவு இல்​லாமல் முழு​மையடை​யாது.

அதே​போல், திறமை​யான ஒளிப்​ப​தி​வாள​ரும் ஒப்​பனை​யின் தன்​மை​களைப் புரிந்​து​ கொள்​ளாமல் சிறந்த காட்​சிகளை உரு​வாக்க முடி​யாது. திரைப்பட வரலாற்​றில் ஒப்​பனை​யாள​ரும், ஒளிப்​ப​தி​வாள​ரும் இணைந்து உரு​வாக்​கிய பல அற்​புதங்​கள் இன்​றும் பேசப்​படு​கின்​றன.

ஒப்​பனை​யின் உலகம்

ஒப்​பனை என்​பது மனித முகத்​தி​லுள்ள குறை​பாடு​களை மறைப்​ப​தற்​காக அல்ல; அதி​லுள்ள சிறப்​பம்​சங்​களை வெளிப்​படுத்​து​வதற்​காக​வுமே. ஒவ்​வொரு முக​மும் தனித்​து​வ​மானது. அதற்​கேற்ப ஒப்​பனை​யும் மாற வேண்​டும். திரைப்​படங்களில் பொது​வாக ஒப்​பனை நான்கு முக்​கிய பிரிவு​களாகப் பார்க்​கப்​படு​கிறது.

அவை, ரியலிஸ்​டிக் மேக்​கப் (Realistic Make-Up), கிளாமர் மேக்​கப் (Glamour Make-Up), கேரக்​டர் மேக்​கப் (Character Make-Up), ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மேக்​கப் (Special Effects Make-Up). ஒவ்​வொறு வகை​யான ஒப்​பனைக்​கும் ஒளிப்​ப​தி​வாளரின் அணுகு​முறை​யும் மாறு​படும்.

சரும நிறங்​கள் மற்​றும் ஒப்​பனை

ஒவ்​வொரு மனிதரின் சரும நிற​மும் வேறு​பட்​டது. இந்​தி​யா​வில் மட்​டுமே கோதுமை நிறம் (Wheatish), பழுப்பு நிறம் (Brown), அடர் நிறம் (Dark Tone), வெளிர் நிறம் (Fair Tone) போன்ற பல்​வேறு சரும நிறங்​கள் காணப்​படு​கின்​றன. ஒரு நல்ல ஒப்​பனை​யாளர், நடிகரின் இயல்​பான நிறத்தை மறைக்க முயற்​சிக்க மாட்​டார். மாறாக அந்த நிறத்​தின் அழகை மேம்​படுத்​து​வார்.

ஒளிப்​ப​தி​வாள​ருக்​கும் இது மிக​வும் முக்​கி​யம். ஒரே லைட்​டிங் எல்லா வித​மான சரு​மங்​களுக்​கும் பொருந்​தாது. சில முகங்​கள் மென்​மை​யான ஒளி​யில் அழகாகத் தெரி​யும். சில முகங்​கள் அதிக கான்ட்​ராஸ்ட் (Contrast) கொண்ட ஒளி​யில் உயிர்ப்​புடன் தோன்​றும். அதனால்​தான் இன்று டிஜிட்​டல் சினி​மா​வில் கேமரா டெஸ்ட்​டு​கள் மற்​றும் மேக்​கப் டெஸ்ட்​டு​கள் முக்​கிய​மான கட்​ட​மாக மாறி​யுள்​ளன.

முக வடிவ​மைப்பு மற்​றும் ஸ்கல்ப்​டிங்

ஒப்​பனை​யின் மிக முக்​கிய​மான அம்​சங்​களில் ஒன்று ‘ஸ்​கல்ப்​டிங்’ அல்​லது ‘கான்​டூரிங்’ (Contouring) எனப்​படும். முகத்​தில் ஒளி விழும் பகு​தி​களை​யும் நிழல் விழும் பகு​தி​களை​யும் பயன்​படுத்தி முகத்தை மறு​வடிவ​மைப்பு செய்​வதே இதன் நோக்​கம். கன்ன எலும்​பு​களை உயர​மாகக் காட்​டலாம். மூக்கை மெலி​தாக மாற்​றலாம்.

தாடையை வலிமை​யான​தாகத் தோற்​றமளிக்க செய்​ய​லாம். கண்​களை ஆழமாகக் காட்​டலாம். இதனை நிறங்​கள் மூலம் மேக்​கப் கலைஞர் செய்​கிறார். ஒளிப்​ப​தி​வாளர் ஒளி மற்​றும் நிழல்​களால் அதை மேலும் வலுப்​படுத்​துகிறார். பழைய ஹாலிவுட் நட்​சத்​திரங்​களான மார்​லன் பிராண்​டோ, எலிசபெத் டெய்​லர், கிரி​கரி பெக் ஆகியோரின் முக அமைப்​பு​களை ஒளிப்​ப​தி​வாளர்​கள் மிகச் சிறப்​பாக வெளிப்​படுத்​தி​யதற்கு இந்த ‘ஸ்​கல்ப்​டிங்’ முறை​களும் ஒரு காரணம் எனலாம்.

ரியலிஸ்​டிக் மேக்​கப்: உண்​மை​யின் அழகு

இன்​றைய உலக சினி​மா​வில் மிகப் பெரிய மாற்​றம் ரியலிஸ்​டிக் மேக்​கப்​பில்​தான் ஏற்​பட்​டுள்​ளது. முன்​பெல்​லாம் அதிக பவுடர், அதிக அடித்​தளம் (Foundation), அதிக ஒப்​பனை பயன்​படுத்​தப்​பட்​டன. ஆனால் இன்று பார்​வை​யாளர்​கள் இயல்​பான தோற்​றத்தை விரும்​பு​கிறார்​கள்.

கொரிய, ஈரானிய மற்​றும் ஐரோப்​பி​யத் திரைப்​படங்​களில் நடிகர்​கள் ஒப்​பனை இல்​லாதது போலவே தோன்​று​வார்​கள். ஆனால் உண்​மை​யில் மிக​வும் நுட்​ப​மான மேக்​கப் பயன்​படுத்​தப்​பட்​டிருக்​கும்.

சரு​மத்​தின் இயல்​பான அமைப்​பு, வியர்​வை, சின்​னச் சின்ன சுருக்​கங்​கள் போன்​றவை பாது​காக்​கப்​படு​கின்​றன. இந்த வகை ஒப்​பனைக்கு ஒளிப்​ப​தி​வாள​ரும் மிக​வும் கவன​மாக இருக்க வேண்​டும்.

அதிக ஒளி பயன்​படுத்​தி​னால் முகம் செயற்​கை​யாகத் தோன்​றி​விடும். கிளாமர் மேக்​கப் மற்​றும் திரை அழகு விளம்​பரங்​கள், பாடல் காட்​சிகள் மற்​றும் நட்​சத்​திர மையப்​படுத்​தப்​பட்ட திரைப்​படங்​களில் கிளாமர் மேக்​கப் மிக முக்​கியப் பங்கு வகிக்​கிறது.

இதில், மென்​மை​யான சரு​மம், பிர​காச​மான கண்​கள், உதட்​டின் நிறம், வலிமை, முகத்​தின் ஒளிர்வு ஆகியவை முக்​கி​யத்​து​வம் பெறுகின்​றன. இத்​தகைய மேக்​கப்​புக்​குப் பொது​வாக மென்​மை​யான ஒளி (Soft Lighting), பெரிய டிஃப்​யூஷன் (Diffusion), பியூட்டி லைட்​டிங் (Beauty Lighting) ஆகியவை பயன்​படுத்​தப்​படு​கின்​றன.

ஃபேஸ் லிஃப்​டிங் மற்​றும் வயதுக் கட்​டுப்​பாடு

ஒளிப்​ப​தி​வாளர்​கள் பல நேரங்​களில் ஒப்​பனை​யாளர்​களு​டன் இணைந்து நடிகர்​களை இளமை​யாகக் காட்​டும் முயற்​சி​யில் ஈடு​படு​கின்​றனர்.

சில நேரங்​களில் அதிக ஒளி தேவை​யில்​லை. சிறிய எக்​ஸ்​போசர் மாற்​றம், சரி​யான கேமரா கோணம், மென்​மை​யான டிஃப்​யூஷன் ஃபில்​டர் ஆகிய​வற்​றின் மூலம் முகத்​தில் ஒளிர்வை அதி​கரிக்​கலாம்.

சில முகங்​களுக்கு மேலும் ஒளி விளக்​கு​களைச் சேர்ப்​ப​தை​விட, ஒரு டோன் பிரைட்​னஸ் (Tone Brightness) மாற்​றமே போது​மான​தாக இருக்​கும். இதனால் சரு​மத்​தின் இயல்​பும் காக்​கப்​படு​கிறது.

ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மேக்​கப்

திரைப்​படங்​களில் கதா​பாத்​திரங்​களுக்கு ஏற்​படும் உடல் காயங்​கள், வெட்​டுத் தழும்​பு​கள், தீக்​கா​யங்​கள், ரத்​தம், உடல் சிதைவு​கள் போன்​றவை அனைத்தும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மேக்​கப்​பின் பகு​தி​களாகும்.

இன்​றைய திரைப்​படங்​களில், செயற்கை ரத்​தம், லேடெக்ஸ் காயங்​கள், சிலி​கான் காய அமைப்​பு​கள், உடல் மாற்​றங்​கள் போன்​றவை பயன்​படுத்​தப்​படு​கின்​றன. இவை கேம​ரா​வில் உண்​மை​யாகத் தோற்​றமளிக்க ஒளிப்​ப​தி​வாளர் மிக​வும் கவன​மாக செயல்பட வேண்​டும். தவறான ஒளி​யில் அவை பொம்மை போன்ற தோற்​றத்தை அளித்​து​விடும்.

புரோஸ்​தெடிக் மேக்​கப்

புரோஸ்​தெடிக் (Prosthetic) மேக்​கப் என்​பது ஒப்​பனை​யின் மிக உயர்ந்த வடிவங்​களில் ஒன்​று. ஒரு நடிகரை முற்​றி​லும் வேறு மனித​ராக மாற்​று​வதற்​காக சிலி​கான், ரப்​பர் மற்​றும் பல்​வேறு செயற்​கைப் பொருட்​கள் பயன்​படுத்​தப் படு​கின்​றன.

இந்த வகை ஒப்​பனைக்கு அதிக வெப்​பம் ஆபத்​தானது. அது ஒட்​டும் பொருட்​களை பலவீனப்​படுத்​தலாம். எனவே ஒளிப்​ப​தி​வாளர்​கள், குளிர்ச்​சி​யான LED விளக்​கு​கள், குறைந்த வெப்ப உமிழ்வு கொண்ட லைட்​டிங், வேக​மான படப்​பிடிப்பு முறை ஆகிய​வற்​றைப் பயன்​படுத்துகின்​றனர்.

ஹாலிவுட்​டில் டார்க்​கஸ்ட் ஹவர், த க்யூரியஸ் கேஸ் ஆஃப் பெஞ்​சமின் பட்​டன் போன்ற திரைப்​படங்​கள் இதற்கு மிகச்​சிறந்த உதா​ரணங்​கள்.

ஒளிப்​ப​தி​வாள​ருக்​கான மேக்​கப் அறிவு

ஒரு சிறந்த ஒளிப்​ப​தி​வாளர் லென்​ஸ்​ஸுகள், கேம​ராக்​கள் மற்​றும் ஒளி​விளக்கு களை மட்​டும் அறிந்​திருந்​தால் போதாது. அவர் ஒப்​பனை​யின் அடிப்​படைகளை​யும் அறிந்​திருக்க வேண்​டும். ஏனெனில், எந்த சரும நிறம் எந்த ஒளி​யில் சிறப்​பாகத் தெரி​யும்?, எந்த மேக்​கப் எவ்​வளவு ஒளியைப் பிர​திபலிக்​கும்?, எந்த வகை பவுடர் முகத்​தில் பிர​காசத்தை ஏற்​படுத்​தும்?, எந்த வகை காய ஒப்​பனை எந்த லென்​ஸில் உண்​மை​யாகத் தெரி​யும்? என்​பனவற்றை அறிந்​திருப்​பது அவசி​யம்.

திரைப்​படத்​தில் ஒப்​பனை​யும் ஒளிப்​ப​தி​வும் ஒன்​றுக்​கொன்று எதி​ரானவை அல்ல; அவை ஒன்​றையொன்று பூர்த்தி செய்​யும் கலைகள். ஒப்​பனை​யாளர் முகத்தை சிற்​ப​மாக வடிவ​மைக்​கிறார். ஒளிப்​ப​தி​வாளர் அந்​தச் சிற்​பத்​துக்கு உயிர் கொடுக்​கிறார். இரு​வரின்​ கூட்​டு முயற்​சி​யால்​தான்​ நடிகர்​ மறக்​க​முடி​யாத கதா​பாத்​திர​மாக திரை​யில்​ மாறுகிறார்​.

(புதன்​தோறும்​ ஒளி​காட்​டுவோம்​)

ஒப்பனைக்கலை மற்றும் ஒளிப்பதிவின் அறிவியல்: அழகும் யதார்த்தமும் | ஒளி என்பது வெளிச்சமல்ல 41
ஒளிப்பதிவாளரும் கலை இயக்குநரும்: ஒரு படைப்புக் கூட்டணி | ஒளி என்பது வெளிச்சமல்ல 40

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in