

திரையில் காணும் ஒவ்வொரு ஃபிரேமுக்கும் பின்னால் இயக்குநரின் கற்பனை, ஒளிப்பதிவாளரின் பார்வை, கலை இயக்குநரின் வடிவமைப்பு ஒன்றிணைந்து செயல்படுகின்றன.
ஒரு கதையை வார்த்தைகளால் மட்டுமல்லாமல், ஒளி, நிறம், அமைப்பு, பின்னணி மற்றும் இடவெளி ஆகியவற்றின் மூலம் பார்வையாளரின் மனதில் பதிய வைப்பதே இவர்களது பணி.
திரைக்குப் பின்: ஒளிப்பதிவாளர், கலை இயக்குநரின் கூட்டுப்படைப்பு
ஒளிப்பதிவாளர் கேமரா, லென்ஸ், ஒளியமைப்பு மற்றும் காட்சியின் உணர்வுத் தன்மையை நிர்ணயிக்கிறார். கலை இயக்குநர் கேமராவின் முன்னால் இருக்கும் உலகத்தை உருவாக்குகிறார். சுவர்களின் நிறம் முதல் ஒரு மேஜையின் மீது வைக்கப்படும் மிகச்சிறிய பொருள் வரை அனைத்தும் அவரது கட்டுப்பாட்டில் இருக்கும்.
இந்த 2 துறைகளும் புரிந்துகொண்டு செயல்படும்போது மட்டுமே காட்சிகள் உயிர் பெறுகின்றன. கலை இயக்குநர் உருவாக்கும் நிறத் தொகுப்பு ஒளிப்பதிவாளர் பயன்படுத்தும் ஒளியின் தன்மையுடன் ஒத்துப்போக வேண்டும்.
செட்டுகள் வடிவமைக்கப்படும் போதே கேமரா எவ்வாறு நகரும், ட்ராலி, ஜிப் அல்லது கிரேன் ஷாட்கள் எங்கு செல்லும் என்பவையும் திட்டமிடப்படும். எனவே கலை இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் எப்போதும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.
சிறிய மாற்றம் உருவாக்கும் பெரிய தாக்கம்
கலை இயக்கத்தின் உண்மையான வலிமை எப்போதும் பிரம்மாண்டமான அரண்மனைகளில் மட்டும் இருப்பதில்லை. சில நேரங்களில் சிறிய மாற்றமே ஒரு முழுக் காட்சியையும் மாற்றிவிடக்கூடும்.
ஒரு காலகட்டத் திரைப்படங்களில் படப்பிடிப்பின்போது, பெரிய ஆலமரத்தின் கீழ் நூற்றுக்கணக்கான சிறு கிராம தெய்வச் சிலைகள் இருந்தன. நேரில் பார்க்கும்போது மிகவும் அழகாகவும் ஆன்மீகத் தன்மையுடனும் தோன்றிய இடம், கேமரா வழியாகப் பார்த்தபோது எந்தச் சிலையும் தனித்துவமாகத் தெரியவில்லை.
அப்போது, கலை இயக்குநர் பி.கிருஷ்ணமூர்த்தி ஒரு எளிய யோசனையைச் சொன்னார். சிலைகளின் மீது சிறிதளவு மஞ்சள் தூள் தூவப்பட்டது. உடனடியாக ஒவ்வொரு சிலையும் தனித்தனியாகப் பிரிந்து தெரிந்தது.
மஞ்சள் நிறம் ஒளியைப் பிரதிபலித்ததால் வடிவங்களும், ஆழமும், காட்சியின் அமைப்பும் தெளிவாக வெளிப்பட்டன. பல்வேறு மொழித் திரைப்படங்களில் கலை இயக்குநராகப் பணியாற்றி 5 தேசிய விருதுகளை வென்றவர் இவர்.
பிரம்மாண்டம் முதல் மினிமலிசம் வரை
கலை இயக்கம் என்பது பெரிய செட்டுகளை அமைப்பது மட்டுமல்ல. சில நேரங்களில் வெறுமையும் மிகப் பெரிய கலை வடிவமாக மாறுகிறது. பாகுபலி, பொன்னியின் செல்வன், க்ளேடியேட்டர் போன்ற திரைப்படங்களில் பிரம்மாண்டமான செட்டுகள், பெரிய தூண்கள், அரண்மனைகள் மற்றும் விரிவான பின்னணிகள் மூலம் கதையின் உலகம் கட்டமைக்கப்பட்டது.
பார்வையாளர்கள் அந்த உலகுக்குள் இயல்பாக நுழைந்து விடுகிறார்கள். மாறாக, பல நவீன திரைப்படங்கள் மினிமலிசத்தைத் தேர்ந்தெடுக்கின்றன. வெறும் சுவர்கள், குறைந்த பொருட்கள், அமைதியான நிறங்கள் ஆகியவை கதாபாத்திரத்தின் தனிமையையும் மனநிலையையும் வெளிப்படுத்துகின்றன. ஜப்பானிய மற்றும் கொரியத் திரைப்படங்களில் இந்த அணுகுமுறை அதிகமாகக் காணப்படுகிறது.
லொக்கேஷன் படப்பிடிப்பு, ஸ்டூடியோ செட்
இந்திய சினிமா பெரும்பாலும் இயற்கை லொக்கேஷன்களையே நம்பியுள்ளது. ஆனால் ஹாலிவுட்டில் ஸ்டூடியோ அமைப்புகள் மிகப் பெரிய பங்கு வகிக்கின்றன.
இயற்கை லொக்கேஷன்கள் யதார்த்தமான உணர்வை வழங்கினாலும் ஒளி, வானிலை மற்றும் சுற்றுப்புறச் சூழலை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஸ்டூடியோவில் அமைக்கப்படும் செட்டுகள் முழுமையான கட்டுப்பாட்டை வழங்குகின்றன.
சுவர்களை அகற்றலாம், கூரைகளை மாற்றலாம், கேமராவை எங்கு வேண்டுமானாலும் நகர்த்தலாம். டைட்டானிக், தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ், பென்ஹர் போன்ற திரைப்படங்கள் ஸ்டூடியோ உலகங்கள் எவ்வளவு வலிமையானவை என்பதை நிரூபித்துள்ளன.
ஒரே லொக்கேஷன் – பல இடங்களின் மாயை
சினிமாவில் நாம் பார்க்கும் பல வீடுகள் உண்மையில் ஒரே வீடாகவும் இருக்கலாம். ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் பல கொள்ளைச் சம்பவங்கள் வெவ்வேறு வீடுகளில் நடப்பது போலத் தோன்றும்.
ஆனால் படப்பிடிப்புக்காக ஒரே வீட்டின் பல பகுதிகள், மாற்றியமைக்கப்பட்ட பொருட்கள், வண்ணங்கள் மற்றும் கேமரா கோணங்கள் பயன்படுத்தப்பட்டு பார்வையாளர்கள் இதை உணர முடியாத அளவுக்கு கலை இயக்கமும் ஒளிப்பதிவும் இணைந்து செயல்பட்டன.
வெளிப்புறம் ஓர் இடம் – உட்புறம் வேறொரு இடம்
படங்களில் ஒரு வீட்டின் வெளிப்புறம் மற்றும் உட்புறம் பல நேரங்களில் வெவ்வேறு இடங்களில் படமாக்கப்படுகின்றன. வெளிப்புறக் காட்சிகள் ஒரு பாரம்பரிய வீட்டில் படமாக்கப்பட்டாலும், உட்புறக் காட்சிகள் செட்டில் உருவாக்கப்படலாம்.
காரணம், ஒளியமைப்பு, கேமரா இயக்கம் மற்றும் நடிகர்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவது ஸ்டூடியோவில் எளிது. இந்த நடைமுறை ஹாலிவுட் முதல் இந்திய சினிமா வரை பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
பிரம்மாண்டமான வரலாற்றுப் பின்னணி: இருவர் (1997)
தமிழ்நாட்டின் 30 ஆண்டுகால அரசியல் மற்றும் சினிமா வரலாற்றை விவரிக்கும் இத்திரைப் படத்துக்கு, காலமாற்றத்தைக் காட்டும் நெகிழ்வான காட்சி மொழியை இவர்கள் உருவாக்கினர். முற்காலத்து கருப்பு- வெள்ளை கால ஸ்டூடியோ செட்டுகள் முதல் அரசியல் மேடைகள் வரை அனைத்தையும் கலை இயக்குநர் சமீர் சந்தா வடிவமைத்தார்.
சந்தோஷ் சிவன் ‘வைட்-ஆங்கிள்’ லென்ஸ்ஸுகள் மற்றும் நகரும் கேமரா அசைவுகள் மூலம் இந்த செட்டுகளின் பிரம்மாண்டத்தை முழுமையாகப் படம் பிடித்தார். பளிங்குத் தரைகளும், பிரம்மாண்டமான தூண்களும் கதாபாத்திரங்களின் அரசியல் அதிகாரத்தையும், தனிமையையும் பிரதிபலிக்கும் கருவிகளாக மாறின.
அந்தமான் சிறையின் கொடூரம்: காலாபாணி (1996)
சுதந்திரப் போராட்டக் கைதிகள் அடைக்கப்பட்ட அந்தமான் ‘செல்லுலார் ஜெயில்’ கொடுமைகளை திரையில் தத்ரூபமாகக் கொண்டுவர கலை இயக்குநர் சாபு சிரிலும் சந்தோஷ் சிவனும் இணைந்து பணியாற்றினர்.
அந்தமானின் நிஜ சிறைச்சாலை சிதிலமடைந்திருந்ததால், அதே அளவீடுகளுடன் சென்னை மற்றும் சில இடங்களில் பிரம்மாண்டமான சிறை செட்டுகள் உருவாக்கப்பட்டன.
ஒரு சிறிய மர வேலி, ஒரு ஜன்னல், ஒரு சுவற்றின் நிறம், கொஞ்சம் மஞ்சள் தூள், ஒரு வெற்று அறை அல்லது ஒரு பிரம்மாண்ட அரண்மனை—இவை அனைத்தும் கதையைச் சொல்லும் கருவிகளாக மாறுகின்றன.
கலை இயக்குநர் உருவாக்கும் உலகத்துக்கு ஒளிப்பதிவாளர் உயிர் ஊட்டுகிறார். இந்தக் கூட்டணியே திரையில் நாம் வியக்கும் ஒவ்வொரு காட்சிக்கும் காரணம்.
(புதன்தோறும் ஒளிகாட்டுவோம்)
cjrdop@gmail.com