

விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடித்து 2016-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தெறி’. கலைப்புலி எஸ். தாணு தயாரித்த இப்படம் சிறந்த வெற்றியைப் பெற்றது. இந்நிலையில் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் சென்சார் பிரச்சினையில் இருப்பதால் ‘தெறி’ படத்தைப் பொங்கலன்று மறு வெளியீடு செய்ய தயாரிப்பாளர் தாணு முடிவு செய்திருந்தார். இந்நிலையில் சில பிரச்சினைகள் காரணமாக அப்படத்தின் வெளியீட்டுத் தேதியை ஜன.23-ம் தேதிக்கு மாற்றுவதாக அறிவித்திருந்தார்.
அதே தேதியில் ‘திரவுபதி 2’, ‘ஹாட் ஸ்பாட் 2’ ஆகிய படங்கள் வெளியாக இருப்பதால், ‘தெறி’ வெளியீட்டுத் தேதியைத் தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, ‘தெறி’ படத்தின் மறுவெளியீட்டுத் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி கலைப்புலி எஸ்.தாணு, “திரவுபதி 2, ‘ஹாட் ஸ்பாட் 2’ திரைப்படங்களின் தயாரிப்பாளர்களின் கோரிக்கையை ஏற்று, வளரும் இயக்குநர்கள், புதிய தயாரிப்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் “தெறி” திரைப்பட வெளியீடு தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார். ‘திரவுபதி 2’ இயக்குநர் மோகன் ஜி வெளியிட்டுள்ள பதிவில், தாணுவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.