

கடந்த ஜூன் மாதம் வெளியான ‘பாலன்’ படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். மொழி கடந்து விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றது. அந்தப் படத்துக்கான திரைக்கதையை எழுதியவர் ஜித்து மாதவன். கதையைக் கேட்டு, ஃபகத் ஃபாசில் தயாரித்து நடித்த ‘ஆவேசம்’ படத்தை எழுதி இயக்கியவரும் ஜித்து மாதவன்தான்.
அவருடைய எழுத்து, இயக்கத்தில் சூர்யா காதும் காதும் வைத்த மாதிரி நடித்து முடித்திருக்கும் அதிரடி ஆக்ஷன் திரைப்படம் ‘சீன்’ (SCENE). இதில் நஸ்ரியா நஸீம், நஸ்லென், ஆனந்தராஜ், லால், ராஜ் பிரியன் உள்படப் பலர் நடித்திருக்கிறார்கள். வினித் அகஸ்டின் ஒளிப்பதிவு செய்ய, சூஷின் ஷியாம் இசையமைத்திருக்கிறார்.
நகைச்சுவை கலந்த ஆக்ஷன் பொழுதுபோக்கு படமாக உருவாகிவரும் இப்படத்தை ழகரம் ஸ்டுடியோஸ் - 2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் சார்பில் ஜோதிகா - சூர்யா இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
‘கறுப்பு’, ‘விஸ்வநாத் & சன்ஸ்’ என அடுத்தடுத்து இரண்டு பிளாக்பஸ்டர் வெற்றிகளைக் கொடுத்த சூர்யா, தனது 47வது படமான இதை, தீபாவளி ரேஸில் களமிறக்குவதாக அறிவித்திருக்கிறார்.
நவம்பர் 6ஆம் தேதி படம் ரிலீஸாக இருக்கும் நிலையில் படத்தில் சூர்யா ஏற்றுள்ள கதாபாத்திரம் குறித்து இயக்குநரிடம் கேட்டபோது: “சூர்யாவுக்கு காவல் அதிகாரி வேடம் புதிதல்ல, ஆனால், இதில் அவர் ஏற்றுள்ள டி.எஸ்.பி. இன்பராஜ் ஐபிஎஸ் கதாபாத்திரத்தின் நக்கலும் நையாண்டியும் அவருடைய வேட்டையும் ரசிகர்களைச் சிரிக்கவும் வைக்கும், சிலிர்க்கவும் வைக்கும்.
எப்போதெல்லாம் தேவையோ அப்போது நகைச்சுவை நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார் சூர்யா” என்கிறார். ‘சீன்’ படத்தின் வெளியீட்டுக்கு இன்னும் 45 நாள்களே இருப்பதால் டைட்டில் டீசரையும் வெளியிட்டு சூர்யாவின் ரசிகர்களைக் குஷிப்படுத்தியிருக்கிறது படக்குழு.