

‘சீன்’ பட வெற்றி குறித்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள சூர்யாவும் ஜோதிகாவும், “இந்த அன்பு எங்களுக்கு மதிப்பு வாய்ந்தது” என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.
சூர்யா நடிப்பில் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவான ‘சீன்’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6 அன்று வெளியானது. பலராலும் பாராட்டப்பட்டு வரும் இந்தப் படம், வெளியான முதல் வாரத்தில் ரூ.100 கோடி வசூலைக் கடந்துள்ளது. இதன்மூலம், ‘கருப்பு’, ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படங்களைத் தொடர்ந்து இந்த ஆண்டு மூன்றாவது வெற்றியை சூர்யா ருசித்துள்ளார்.
இந்த நிலையில் ‘சீன்’ பட வெற்றி குறித்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து சூர்யாவும், ஜோதிகாவும் கூட்டாக பதிவிட்டுள்ளனர்.
அந்தப் பதிவில் அவர்கள், “எங்கள் இதயம் நன்றியால் நிரப்பி வழிகிறது. மொழி மற்றும் எல்லைகளைக் கடந்து சீன் படத்தின் மீது நீங்கள் காட்டும் அன்பும் அரவணைப்பும் எங்கள் குழுவுக்கும், எனக்கும் ஜோவுக்கும் மிகவும் மதிப்பு வாய்ந்தது.
மிகுந்த நம்பிக்கையுடன் திரையரங்குகளுக்கு வந்ததற்கு நன்றி. உங்கள் அன்பு எங்களின் எல்லைகளை இன்னும் விரிவுபடுத்துவதற்கான தைரியத்தை வழங்குகிறது. என்றென்றும் நன்றி” என்று தெரிவித்துள்ளனர்.
‘சீன்’ படத்தை ழகரம் ஸ்டூடியோஸ் சார்பில் சூர்யாவும் ஜோதிகாவும் தயாரித்துள்ளனர். ஜெய்ஸ்ரீ தாமோதரன் இணைந்து தயாரித்துள்ளார். படத்துக்கு வினீத் அகஸ்டின் ஒளிப்பதிவும், அஜ்மல் சாபு படத் தொகுப்பும் செய்துள்ளனர். சுஷின் ஷியாம் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் சூர்யாவுடன் பிரேமலு நஸ்லென், நஸ்ரியா, ஜான் விஜய், ஆனந்த ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சூர்யாவின் நடிப்பில் இந்த தாண்டில் வெளியான 3-வது படம் இது. ஆக்ஷன் காமெடி த்ரில்லராக இருக்கும் இப்படம் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.