

பராசக்தி...
சினிமா உலகில் ஒடிஎஸ் (OTS) ஷாட் என்பது பார்வையாளர்களைக் காட்சிக்குள் அமர வைக்கும் நுட்பமான ஆயுதம். ஒரு கதாபாத்திரத்தின் தோளுக்குப் பின்னிருந்து கேமரா மற்றவரைப் பார்க்கும் போது, நாம் வெறும் சாட்சிகளாக இல்லாமல், அந்த உரையாடலின் ஓர் அங்கமாகவே மாறுகிறோம்.
முப்பரிமாண ஆழமும் காட்சி மாயையும் (டெப்த் ஆஃப் ஃபீல்ட்)
ஒடிஎஸ் ஷாட்டின் உயிர் அதன் ஆழத்தில்தான் உள்ளது. முன்னணியில் (ஃபோர்கிரவுண்ட்) இருக்கும் தோள்பட்டை மங்கலாகவும் (அவுட் ஆஃப் ஃபோகஸ்), பின்னணியில் (பேக்கிரவுண்ட்) இருக்கும் முகம் தெளிவாகவும் (இன் ஃபோகஸ்) இருக்கும்போது, அது திரையில் முப்பரிமாணத் தன்மையை உருவாக்கு கிறது. இதனால், “நான் ஒரு படம் பார்க்கிறேன்” என்ற நிலையிலிருந்து “நான் அந்த அறைக்குள் இருக்கிறேன்” என்ற உணர்வுக்குப் பார்வையாளரை நகர்த்துகிறது.
தனிமையிலிருந்து கூட்டு உணர்வுக்கு
முழுமையான பாயின்ட் ஆஃப் வியூ (POV) ஷாட் நம்மை கதாபாத்திரத்தின் கண்களாக மாற்றுகிறது. ஆனால், ஒடிஎஸ்-ல் தெரியும் அந்தச் சிறு தோள்பட்டைப் பகுதி, “நான் பார்க்கிறேன்” என்பதைத் தாண்டி, “நாம் இணைந்து உரையாடுகிறோம்” என்ற பிணைப்பை உருவாக்குகிறது. இந்தச் சிறிய காட்சிச்சான்றுதான் பார்வையாளருக்கும் திரைக்கும் இடையே நெருக்கமான உறவை ஏற்படுத்துகிறது.
பதற்றத்தின் கருவி
த்ரில்லர் திரைப்படங்களில் ஒடிஎஸ் மர்மமான கருவியாகச் செயல்படுகிறது. தோளுக்குச் சொந்தமானவர் யாரென்று தெரியாதபோதும், அல்லது அவர் திடீரெனத் திரும்புவாரோ என்ற அச்சம் நிலவும்போதும், இந்த ஷாட் பார்வையாளரிடம் படபடப்பை உண்டாக்குகிறது. இங்கு தோள் என்பது சில நேரங்களில் உண்மையைத் தடுக்கும் திரையாகவும், சில நேரங்களில் பயத்தின் அடையாளமாகவும் மாறுகிறது.
டைட் ஒடிஎஸ்
தோள், சட்டகத்தின் பெரும்பகுதியை மறைக்கும். இது முகத்தின் நுண்ணிய தசை அசைவுகளையும், கண்களில் மின்னும் உணர்வுகளையும் மிக நெருக்கமாகக் காட்டும்.
இன்க்ளோரியஸ் பாஸ்டர்ட்ஸ் (2009)
இத்திரைப்படத்தின் தொடக்கக் காட்சியில் நாஜி அதிகாரி லண்டா மற்றும் விவசாயிக்கு இடையிலான உரையாடல் இயக்குநர் க்வின்டின் டொரான்டினோ எடுத்த பாடம். இங்கு ‘டைட் ஒடிஎஸ்’ பயன்படுத்தப்பட்டிருக்கும். லண்டாவின் தோள் ஒரு பெரும் நிழல் போல விவசாயியை அழுத்தும். இது வேட்டையாடுபவனுக்கும், இரையாகப் போகிறவனுக்கும் இடையே இருக்கும் உளவியல் ரீதியான அழுத்தத்தை வார்த்தைகள் ஏதுமின்றிக் கடத்தும்.
இன்க்ளோரியஸ் பாஸ்டர்ட்ஸ்...
வைடு ஒடிஎஸ்
கதாபாத்திரத்தோடு சேர்த்துச் சுற்றியுள்ள சூழலும் பேசத் தொடங்கும்.
பராசக்தி (1952) – அதிகாரத்தின் முன் சாமானியன்
இத்திரைப்படத்தின் புகழ்பெற்ற நீதிமன்றக் காட்சியில் ஒளிப்பதிவாளர் எஸ்.மாருதி ராவ் மற்றும் இயக்குநர் கிருஷ்ணன் - பஞ்சு ஆகியோர் இணைந்து ஒடிஎஸ் நுட்பத்தை மிக வலிமையாகப் பயன்படுத்தி இருப்பார்கள்.
நீதிபதியின் தோளுக்குப் பின்னிருந்து குணசேகரனைக் (சிவாஜி கணேசன்) காட்டும் போது, அது சட்டத்தின் பிரம்மாண்டத்தையும் அதன் முன் நிற்கும் தனிமனிதனின் பரிதாப நிலையையும் உணர்த்தும். அதேநேரம், சிவாஜியின் தோளுக்குப் பின்னிருந்து நீதிபதியைக் காட்டும் போது, அது அதிகாரத்திடம் சாமானியன் கேள்வி கேட்கும் தைரியத்தைப் பிரதிபலிக்கும்.
உலக சினிமா (ஸ்கார்சிஸி மற்றும் நோலன் பாணி)
‘தி டிபார்டட்’ படத்தில் கதாபாத்திரங்களுக்கு இடையே நிலவும் அவநம்பிக்கையை வெளிப்படுத்த இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்சிஸி, ஒடிஎஸ்-ஐ ஒரு தடையாகப் பயன்படுத்துவார். ஓப்பன்ஹைமர் படத்தில் விசாரணையின் போது நிலவும் அழுத்தமான அமைதியைப் படம்பிடிக்க இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன், தோளுக்கு அருகாமையில் கேமராவை வைத்து ஒருவித ‘க்ளாஸ்ட்ரோஃபோபிக்’ உணர்வை உருவாக்கினார்.
மணிரத்னத்தின் கவித்துவக் காட்சி
இந்திய சினிமாவில் ஒடிஎஸ்-ஐ கலையாக மாற்றியவர் மணிரத்னம். அவர், தோளை முழுமையாகக் காட்டாமல், அதன் விளிம்பை மட்டும் மென்மையாக (சாஃப்ட் ஃபோகஸ்) வைத்திருப்பார். உரையாடலின் தொடக்கத்தில் ஒடிஎஸ்-ல் ஆரம்பித்து, உணர்ச்சி மேலோங்கும் போது மெதுவாக புஷ்-இன் செய்து, தோளை நீக்கிவிட்டு முகத்தை மட்டும் காட்டும் க்ளோசப் ஷாட்டுக்கு நகர்வார்.
இது, ஒரு கதாபாத்திரத்தின் வெளிப்படையான பேச்சிலிருந்து, அந்தரங்க உணர்வுக்குள் பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் மென்மையான பயணம். ஓவர்-தி-ஷோல்டர் ஷாட் என்பது ஒரு கோணம்.
அதோடு, அது இரு மனிதர்களுக்கு இடையே கட்டப்படும் உணர்ச்சிப் பாலம். வார்த்தைகளால் விவரிக்க முடியாததை, ஒரு தோளின் விளிம்பும் அதற்குப் பின்னால் தெரியும் முகத்தின் உணர்வும் சொல்லிவிடும். உண்மையில், சினிமா மொழியின் ஆணிவேர் இந்த ஒடிஎஸ் ஷாட்களில்தான் ஒளிந்திருக்கிறது.
மகாநதி (1994) – உணர்ச்சிகளின் உச்சம்
சிறையில் தனது மகளைப் பல வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் சந்திக்கும் காட்சி. மகளின் தோளுக்குப் பின்னிருந்து கமலையும், கமலின் தோளுக்குப் பின்னிருந்து மகளையும் காட்டும் போது, அந்தத் தோள்கள் அவர்கள் இருவருக்கும் இடையே இத்தனை காலம் இருந்த “கால இடைவெளியை” உணர்த்தும்.
விக்ரம் வேதா (2017) – கண்ணாமூச்சி ஆட்டம்
மாதவனும் விஜய் சேதுபதியும் நேருக்கு நேர் அமர்ந்து பேசும் “புலி-ஆடு” கதைக் காட்சிகள். இதில் கேமரா அடிக்கடி ஒருவரின் தோளுக்குப் பின்னால் இருந்து அடுத்தவர் முகத்துக்குத் தாவும்.
இது நாம் ஒரு “டென்னிஸ் மேட்ச்” பார்ப்பது போன்ற விறுவிறுப்பைத் தரும். ஒருவரின் தோள் மற்ற வரைப் பாதி மறைப்பது, இருவருமே ஏதோ ஒரு ரகசியத்தை ஒளித்து வைத்திருக்கிறார்கள் என்ற பிம்பத்தை உருவாக்கும்.ஒரு சுவாரஸ்யமான நுட்பம்.
டர்ட்டி ஓடிஎஸ் / க்ளீன் ஓடிஎஸ்
டர்ட்டி ஓடிஎஸ் - முன்னால் இருப்பவரின் தோள் அல்லது தலையின் ஒரு பகுதி திரையில் தெளிவாகத் தெரிந்தால் அது ‘டர்ட்டி ஷாட்’. இது இருவருக்கும் இடையே இருக்கும் நெருக்கத்தைக் காட்டும்.
வட சென்னை / அசுரன்
இயக்குநர் வெற்றிமாறன் – ஒளிப்பதிவாளர் ஆர்.வேல்ராஜ் கூட்டணியில் ஒடிஎஸ் என்பது யதார்த்தத்தின் அடையாளம். வட சென்னை சிறைச்சாலைக் காட்சிகளில், ஒருவரின் தோள் சட்டகத்தின் பெரும்பகுதியை மறைக்கும் ‘டர்ட்டி ஒடிஎஸ்’ முறையை வேல்ராஜ் கையாண்டிருப்பார். இது பார்வையாளர்களுக்கு ஒரு ரகசியத்தை ஒட்டுக்கேட்கும் உணர்வைத் தரும்.
அசுரன் படத்தில் அதிகாரியின் தோளுக்குப் பின்னிருந்து சிவசாமியைப் பார்க்கும் கோணம், அவர் ஒடுக்கப்பட்டிருப்பதை காட்சி ரீதியாகவே உறுதிப்படுத்தும் இந்த ஷாட்டுகள் கதை சொல்லும் கருவியாகி, பார்வையாளர்களைக் காட்சியின் ஆழத்துக்கு அழைத்துச் செல்கின்றன.
க்ளீன் ஓடிஎஸ்
தோள் மிகக் குறைவாக அல்லது விளிம்பில் மட்டும் தெரிந்தால் அது ‘க்ளீன் ஷாட்’. இது அந்தக் கதாபாத்திரம் தனிமையில் இருப்பதைப் போன்ற அல்லது அவர் மீது மட்டும் முழு கவனம் செலுத்துவதைப் போன்ற உணர்வைத் தரும். ஒடிஎஸ் என்பது மேடை நாடகங்களில் சாத்தியமில்லாத, சினிமாவுக்கே உரித்தான நுணுக்கம். மேடையில் பார்வையாளர்கள் நிலையான தூரத்தில் இருந்து காட்சியைக்காண்கிறார்கள்.
ஆனால், சினிமாவில் ஒரு கதாபாத்திரத்தின் தோள்பட்டைக்குப் பின்னால் கேமராவை வைப்பதன் மூலம், அது திரையில் வலுவான ஆழத்தை உருவாக்கி, பார்வையாளர்களைக் கதை நிகழும் இடத்துக்குள்ளேயே கொண்டு செல்கிறது.
- cjrdop@gmail.com
(புதன்தோறும் ஒளிகாட்டுவோம்)