

கடந்த ஆண்டு ‘டிராகன்’, ‘ட்யூட்’ என இரண்டு மாபெரும் வெற்றிகளைக் கொடுத்த பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், விக்னேஷ் சிவன் எழுத்து, இயக்கத்தில் இன்று வெளியாகும் படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK).
‘96’ படப் புகழ் கௌரி கிஷன் முதல் முறையாகக் கவர்ச்சிக் கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கும் இதில், கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார்.
படத்தின் முன்வெளியீட்டு நிகழ்ச்சியில் இயக்குநர்கள் ராம், மிஷ்கின், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோருடன் படக்குழுவினரும் திரண்டு வந்திருந்தனர் (நாதக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அவர் ஆப்சென்ட்).
பிரதீப் ரங்கநாதன் நிகழ்ச்சியில் பேசும்போது: “நான் காலேஜ் படிக்கும்போது என் முன்னாள் காதலியுடன் பார்த்த படம் ‘நானும் ரௌடிதான்’.
அப்போதிலிருந்து விக்னேஷ் சிவன் சாருக்கு நான் ரசிகன். அவர் என்னை வைத்துப் படம் எடுக்கிறார் என்பது, எனக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ்.
‘இது இளைஞர்களின் எதிர்காலத்தை இப்போதே காட்டும் கதை. இதுபோன்ற கதைகள் இந்திய சினிமாவில் மிகக் குறைவு. கதையைக் கேட்டதுமே சூப்பர் என்று துள்ளிக்குதித்தேன்” என்றார்.