

பெருமாள் முருகனின் ‘வரகரிசி’ என்கிற சிறுகதையைத் தழுவி, ‘சேத்துமான்’ (2022) என்கிற தமிழ் சினிமாவின் முக்கியப் படைப்புகளில் ஒன்றைக் கொடுத்தார் இயக்குநர் தமிழ். அந்தப் படத்தின் முதன்மை நாயகர்கள் ஒரு தாத்தாவும் அவருடைய பேரனும். அதில் பேரனாக நடித்திருந்த சிறுவன் அஸ்வினை ரசிகர்கள் மறந்தே போய்விட்டனர்.
அவரை மையமாகக் கொண்டு வெற்றிச்செழியன் தன்னுடைய அறிமுகப் படைப்பாக உருவாக்கியிருக்கும் படம் ‘தி கிராண்ட் மாஸ்டர்’. இவர் எஸ்.பி.ஜனநாதன், ஹெச்.வினோத், சீனு ராமசாமி ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர்.
தூய்மைப் பணியாளராகக் குப்பைகளையும் அழுக்கு களையும் அகற்றும் ஒரு பெண், தன்னுடைய மகனைச் சதுரங்க சாம்பியனாக மாற்றும் லட்சியத்துடன் களம் இறங்குகிறாள்.
அப்போது சாதி என்கிற சதுரங்கத்தைப் பயன்படுத்தும் மனிதர்களின் மோசமான புறக்கணிப்புகளுக்கு மத்தியில் எப்படி அம்மாவும் மகனும் வென்று காட்டுகிறார்கள் என்கிற கதையுடன் வெளியாகிறது ‘தி கிராண்ட் மாஸ்டர்’.
அஸ்வினுடைய அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் அபர்ணதி. இவர்களுடன் லிங்கேஷ், சுரேஷ் மேனன், தமிழரசி, அன்பு உள்படப் பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இரண்டு வாரங்களுக்கு முன் ‘மண்டாடி’, இப்போது ’தி கிராண்ட் மாஸ்டர்’ என விளையாட்டுப் படங்களுக்கான வரவேற்பு தொடர்கிறது.