

சதீஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பத்துநாள் ராஜா’ படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் டீசரை நடிகர் விஜய் சேதுபதி அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
கடன் வழங்கும் செயலி நடத்தும் கருடன் ராமை ‘டிஜிட்டல் டெவில்’ என அறிமுகப்படுத்துவதுடன் தொடங்குகிறது இந்த டீசர். கடன் செயலிகள் எப்படி மாதச் சம்பளக்கார சாமானியர்களைக் குறிவைத்து கடன் வழங்கி, அவர்களை வாழ்வின் எல்லைக்கு தள்ளுகிறது என வேகமாக நகரும் காட்சிகள் விளக்குகின்றன.
கடன் வாங்கி தவிக்கும் சாமானியராக சதீஷும், கடன் கட்டாதவர்களிடம் கறாராக அதை வசூலிக்கும் அடியாளாக தெலுங்கு நடிகர் ஆதி சாய்குமாரும் நடித்துள்ளனர். காட்சிகளின் பரபரப்புக்கும், துயரத்துக்கும் ஜிப்ரானின் இசை கைகோத்திருக்கிறது. படம் எதைப் பேச போகிறது என்கிற மையச்சரடை வேகமாக விளக்கி, எப்படி பேசப் போகிறது என்கிற எதிர்பார்ப்பை உண்டாக்குகிறது இந்த 1.33 நிமிடங்கள் ஓடும் டீசர்.
சதீஷ், ஆதி சாய்குமார் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படம் ‘பத்துநாள் ராஜா’. தெலுங்கில் நடித்து வரும் ஆதி சாய்குமார், இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இவர்களுடன் இப்படத்தில் ஆதியா பிரசாத், சரண்யா ராமச்சந்திரன், கருடா ராம், ஆடுகளம் நரேன், பருத்திவீரன் சரவணன், ‘ஆதித்யா’ கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
குரு சரவணன் இயக்கி இருக்கும் இந்தப் படத்தை எஸ்ஜிஎஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜி.சுரேஷ் தயாரித்திருக்கிறார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார்.