எஸ்டாபிளிஷிங் ஷாட் (EST): ஒரு புதிய உலகத்துக்கான திறவுகோல் | ஒளி என்பது வெளிச்சமல்ல 20

ப்ளேடு ரன்னர், த சவுண்ட் ஆஃப் மியூசிக்

ப்ளேடு ரன்னர், த சவுண்ட் ஆஃப் மியூசிக்

Updated on
3 min read

ஒரு நாவலைத் திறந்ததும் அதன் முதல் சில வரிகள் எப்படி அந்த உலகத்தின் காலத்தையும், சூழலையும் நமக்கு அறி முகப்படுத்துகிறதோ, அப்படியே ஒரு திரைப்படத்தின் அல்லது ஒரு காட்சியின் முதல் பார்வையாக அமைவது ‘எஸ்டாபிளிஷிங் ஷாட்’ (Establishing Shot - EST). இது, ஓர் இடத்தைக் காட்டுவதோடு, பார்வையாளருக்கும் இயக்குநரின் கற்பனை உலகுக்கும் இடையிலான முதல் கைகுலுக்கலாக இருக்கிறது.

எஸ்டாபிளிஷிங் ஷாட்: அடிப்படை வரையறை: தொழில்நுட்ப ரீதியாக, ஒரு காட்சியின் தொடக்கத்தில் அந்த இடம், காலம் மற்றும் சூழலை நிறுவுவதற்காக வைக்கப்படும் அகலமான காட்சி (வைட் ஷாட்) இது. ஒரு படம் நேரடியாக க்ளோஸ்-அப்பில் தொடங்கினால், பார்வையாளருக்கு ஒருவித ‘காட்சித் திசைதிருப்பல்’ ஏற்படும். ‘நாம் எங்கே இருக்கிறோம்?’ என்ற குழப்பத்தைத் தீர்த்து வைத்து, தெளிவான நிலப்பரப்பை உருவாக்குவதே இதன் முதன்மைப் பணி. இது கதையின் அடித்தளத்தை அமைக்கும் ஒரு கருவி.

கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் விதம்: எஸ்டாபிளிஷிங் ஷாட்டை வெறும் கட்டிடங்கள் அல்லது இயற்கைக் காட்சிகளைக் காட்ட மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்று பரவலாக நினைக்கிறார்கள். ஆனால், நுட்பமான இயக்குநர்கள் ஒரு கதாபாத் திரத்தின் தன்மையை (கேரக்டரைசேஷன்) அறிமுகப்படுத்த இந்த ஷாட்டைப் பயன்படுத்துகின்றனர்.

சூழல் மூலம் பண்புக்கூறு: ஒரு கதாபாத்திரத்தின் முகத்தைக் காட்டும் முன்பே, அவனது அறையை ஒரு எஸ்டாபிளிஷிங் ஷாட்டில் காட்டலாம். அந்த அறை, குழப்பமாக இருக்கிறதா? புத்தகங்கள் குவிந்து கிடக்கின்றனவா? அல்லது மிகச் சுத்தமாக அடுக்கப்பட்டிருக்கிறதா? இது அந்த மனிதன் யார் என்பதை அவன் முகத்தை திரையில் காட்டும் முன்பே சொல்லிவிடும்.

அதிகாரத்தை நிறுவுதல்: ஒரு நீண்ட படிக்கட்டின் உச்சியில் அல்லது பிரம்மாண்டமான மேஜைக்குப் பின்னால் ஒரு கதாபாத்திரம் அமர்ந்திருப்பதை வெகு தொலைவில் இருந்து (லாங் ஷாட்) காட்டும்போது, அந்தக் கதாபாத்திரத்தின் அதிகாரமும் (பவர்), செல்வாக்கும் காட்சி ரீதியாக உறுதி செய்யப்படுகிறது.

தனிமையைக் காட்டுதல்: ஒரு முடிவற்ற பாலைவனத்திலோ அல்லது வெறிச்சோடிய நகரத்தின் தெருவிலோ ஒரு மனிதன் புள்ளி போலத் தெரிவது, அவனது மனதின் தனிமையை அல்லது அவன் எதிர்கொள்ளும் சவாலின் பிரம்மாண்டத்தை இந்த எஸ்டாபிளிஷிங் ஷாட் மூலம் உணர்த்துகிறது.

உலகக் கட்டமைப்பும் தொனியும்: அறிவியல் புனைவு மற்றும் சரித்திரப் படங்களில் இந்த ஷாட் மிகவும் முக்கியம்.

ப்ளேடு ரன்னர்: இந்தத் திரைப்படத்தின் தொடக்கக் காட்சிகளில், புகை மண்டலங்கள் எழும் தொழிற்சாலைகள் மற்றும் அடர்ந்த கட்டிடக் கூட்டங்களைக் காட்டி, இந்த உலகம் மனிதர்களுக்கானது அல்ல என்பதை ஒரே நொடியில் இந்த ஷாட் புரியவைக்கிறது.

த சவுண்ட் ஆஃப் மியூசிக்: ஆல்ப்ஸ் மலைத்தொடரின் விரிவான ஏரியல் ஷாட், அந்தக் கதையின் சுதந்திரமான, வெளிச்சம் நிறைந்த சூழலைப் பார்வையாளர் உணர வழி செய்கிறது.

ஹாரி பாட்டர் அண்ட் தி ப்ரிசனர் ஆஃப் அஸ்கபான்: இயக்குநர் அல்பான்சோ க்யூரான், ஹாக்வார்ட்ஸ் கோட்டையை இத்திரைப்படத்தில் ஓர் அங்கமாகவே மாற்றினார். பனிமூடிய கோட்டை, அசைந்தாடும் கிளைகள் என பருவநிலை வாரியாக அவர் காட்டிய எஸ்டாபிளிஷிங் ஷாட்டுகள், அச்சுறுத்தும் தொனியை அழகாக நிறுவின.

எஸ்டாபிளிஷிங் ஷாட்டுகளின் வகைகள்:

வான்வழிப் பார்வை (ஏரியல் / டிரோன் ஷாட்): நகரத்தின் வடிவம், பயணப் பாதை ஆகியவற்றை மேலிருந்து காட்டும் ‘அனைத்தையும் அறியும் பார்வை’ (காட்ஸ் ஐ வியூ) இது.

மைக்ரோ எஸ்டாபிளிஷிங் ஷாட்: ஒரு பெரிய நகரத்தைக் காட்டாமல், ஒரு மேஜையில் இருக்கும் ரத்தக் கறை படிந்த கத்தியை மட்டும் காட்டி அந்த இடத்தின் ‘உணர்வை’ அல்லது முந்தைய நிகழ்வை நிறுவுவது இவ்வகை ஷாட்.

தலைகீழ் எஸ்டாபிளிஷிங் (தி ரிவீல்): காட்சியின் இறுதியில் அந்த இடம் எங்கே இருக்கிறது என்பதை உடைத்து ஆச்சரியப்படுத்துவது.

உலக சினிமாவின் உன்னத உதாரணங்கள்:

தி ஷைனிங்: மலைப்பாதையில் ஒரு கார் மெதுவாகச் செல்வதை மேலிருந்து நீண்ட நேரம் காட்டும் காட்சி, அந்தக் குடும்பம் மெல்ல மீள முடியாத தனிமைக்குள் (ஐசொலேஷன்) நுழைகிறது என்பதை அச்சுறுத்தலோடு சொல்கிறது.

கேண்டிமேன் (2021): சிகாகோ நகரைத் தலைகீழாக (அப்சைட் டவுன்) மூடுபனிக்குள் காட்டியது சிறந்த உதாரணம். இது அந்த உலகத்தின் ஒழுங்கின்மையையும், அமானுஷ்யத் தன்மையையும் பார்வையாளரின் ஆழ்மனதில் விதைத்தது.

செவன் (Se7en): இப்படத்தில் எஸ்டாபிளிஷிங் ஷாட்கள் எப்போதும் இருட்டாகவும், மழையில் நனைந்த ஈரமான தெருக்களாகவுமே இருக்கும். இது அந்த நகரமே, நரகமாக மாறிவிட்டதைச் சித்தரிக்கிறது.

தொழில்நுட்ப நுணுக்கங்கள் மற்றும் திரையின் வடிவம்:

4:3 அஸ்பெக்ட் ரேஷியோ:

இதில் மேல்கீழ் இடம் அதிகமாக இருப்பதால், கட்டிடங்களின் உயரத்தையும், மனிதர்களுக்கும் அந்த இடத்துக்குமான செங்குத்தான (வெர்டிகல்) அழுத்தத்தையும் காட்டலாம்.

சினிமாஸ்கோப் (வைட் ஸ்க்ரீன்): இது ஒரு ‘காட்சி வரைபடம்’ போலச் செயல்படும். ஒரே காட்சியில் பல தகவல்களை, நிலப்பரப்புகளை விரிவாகக் காட்ட இது உதவும்.

லாங் ஷாட்: முன்புறமும் பின்னணியும் தெளிவாகத் தெரியும் ஆழத்தைக் கொடுப்பதன் மூலம், பார்வையாளரின் கண் அந்த உலகுக்குள் சுற்றிப் பார்க்கத் தொடங்கும்.

எஸ்டாபிளிஷிங் ஷாட்- க்ளோஸ்-அப்: ஓர் உரையாடல் - சினிமாவின் உண்மையான ரகசியம் இந்த இரு கோணங்களுக்கு இடையே உள்ள சமநிலையில் தான் உள்ளது. எஸ்டாபிளிஷிங் ஷாட் ‘நாம் எங்கே இருக்கிறோம்?’ என்ற கவலைத் தருகிறது. க்ளோஸ்-அப் ‘அந்த கதாபாத்திரத்தின் உள்ளே என்ன நடக்கிறது?’ என்ற உணர்வைத் தருகிறது.

எஸ்டாபிளிஷிங் ஷாட் இல்லாமல் ஒரு காட்சியைத் தொடங்கினால் பார்வையாளர் குழம்பிப் போவார்; க்ளோஸ்-அப் இல்லாமல் காட்சியைக் காட்டினால் பார்வையாளர் கதாபாத்திரத்தோடு உணர்வுப்பூர்வமாக இணைய முடியாது. எஸ்டாபிளிஷிங் ஷாட் என்பது அந்த உலகத்தின் ‘கட்டமைப்பு’ என்றால், க்ளோஸ்-அப் அதன் ‘உள்மன உணர்ச்சி’.

சினிமா எனும் உலகம்: சுருக்கமாகச் சொன்னால், எஸ்டாபிளிஷிங் ஷாட் என்பது ஒரு திரைப்படத்தின் முகவுரை. ஓர் உலகத்தை உருவாக்கி, அதற்குள் பார்வையாளரை அமர வைப்பது. இந்த ஷாட் இல்லை என்றால் சினிமா அதன் ‘முகவரியை’ இழந்துவிடும்.

- cjrdop@gmail.com

(புதன்தோறும் ஒளிகாட்டுவோம்)

<div class="paragraphs"><p>ப்ளேடு ரன்னர்,&nbsp;த சவுண்ட் ஆஃப் மியூசிக்</p></div>
க்ளோஸ்​-அப்: மனதைத் தொடும் உத்தி | ஒளி என்பது வெளிச்சமல்ல 19

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in