

விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடித்துள்ள ‘ஒன்ஸ் மோர்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் அதிதி சங்கர், சோனா ஒலிக்கல் நாயகிகளாக நடித்துள்ளனர். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்து இருக்கிறார்.
‘தன்னுடைய பிறந்தநாள் எப்போது’ என ரகுவிடம் கேட்டு அஞ்சலி மூக்குடைபடுவதில் இருந்து தொடங்குகிறது ட்ரெய்லர். கைவிட்டுப் போன முதல் காதலை சுமந்து திரியும் ரகு அஞ்சலியிடம் மாற்றாந்தாய் மனம் காட்டுகிறான்.
முடிந்த காதலை சுமந்து திரியும் அவன் வாழ்வில் வரும் அஞ்சலி, தன்னிடம் இருக்கும் அத்தனை அன்பையும் ரகுவுக்கு கொடுத்து விடும் பேரார்வதில் அவனைத் துரத்தி பிரியத்தை பொழிகிறாள்.
குழம்பித் திரியும் ரகுவின் முடிவை வெள்ளித் திரையில் பார்க்க தூண்டுகிறது ட்ரெய்லர். 2.34 நிமிடங்கள் ஓடும் ரகுவின் காதல் குழப்பத்தை அழகாக கைப்பிடித்து அழைத்து வந்து நமக்கு அறிமுகப்படுத்துகிறது ஹேஷம் அப்துல் வஹாப்பின் இசை. படம் ஆகஸ்ட் 28-ம் தேதி திரைக்கு வருகிறது.