

ஓடிடி ரிலீஸ் விவகாரம் வலுத்துள்ள நிலையில், செப்டம்பர் 1-ம் தேதி முதல் புதிய தமிழ்த் திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்றும், படப்பிடிப்பு பணிகள் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நிறுத்தப்படும் என்றும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆகஸ்ட் 22-ம் தேதி தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் கலந்துகொண்ட கூட்டத்தில், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தாரிப்பாளர்களை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக எடுத்துள்ள முடிவு பற்றி பேசப்பட்டது.
தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் கூட்டி, தமிழகத்தில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களை 8 வார காலம் கழித்துதான் ஓடிடி-யில் வெளியிடுவோம் என தயாரிப்பாளர்கள் கடிதம் கொடுத்தால்தான் அந்தப் படங்களை திரையரங்குகளில் திரையிட அனுமதிக்க முடியும் என்று முடிவெடுத்துள்ளனர்.
இந்த மாதிரியான முடிவு தென்னிந்திய மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா, கேரளா மற்றும் கர்நாடகாவில் நடைமுறையில் இல்லாதபோது, வேண்டுமென்றே தமிழகத்தில் மட்டும் தன்னிச்சையாக இந்த புதிய நடைமுறையை புகுத்துவது கண்டிக்கத்தக்கது. இவ்வாறான முடிவுகளை எடுக்கும் போது, தயாரிப்பாளர்களையும் அழைத்து பேசி யாருக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு முடிவுகளை அறிவிக்க வேண்டும்.
ஆனால், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தயாரிப்பாளர்களை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக எடுத்த முடிவை தயாரிப்பாளர்களான எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
வருடத்துக்கு 250 திரைப்படங்கள் வெளியாகின்றன. அதில் பெரும்பாலான திரைப்படங்களில் தயாரிப்பாளர்களுக்கு முதலீடு செய்த தொகையில் பாதி அளவு கூட வராமல், ரூ.700 கோடிக்கு மேல் ஆண்டுதோறும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.
எனவே, தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தன்னிச்சையான முடிவைக் கண்டித்து, வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் புதிய திரைப்படங்களை வெளியிடுவது இல்லை என்றும், படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் உள்ளிட்ட அனைத்து பணிகளை நிறுத்துவது என்றும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கமும், தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கமும் இணைந்து முடிவெடுத்துள்ளோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், இந்தப் பிரச்சினையை தமிழக முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று, சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் எடுத்துரைத்து, அரசு மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண உள்ளோம்’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.