

நயன்தாரா, கவின் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள படம், ‘ஹாய்’.
பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ், சத்யன், ‘ஆதித்யா’கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்துக்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். விஷ்ணு எடவன் இயக்கி இருக்கிறார்.
ஜீ ஸ்டுடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ், செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் நயன்தாரா, விக்னேஷ் சிவன், எஸ்.எஸ்.லலித்குமார் இணைந்து தயாரித்துள்ளனர். வினோத் சி.ஜே. மற்றும் கே.எஸ்.மயில்வாகனன் இணை தயாரிப்பு செய்துள்ளனர்.
இப்படத்தின் பாடல் ஏற்கெனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆக.14-ல் இந்தப் படம் வெளியாகிறது.
விஷ்ணு எடவன் கூறும்போது, “இந்தப் படம் எளிமையான, இனிமையான திரைப்படம். ரசிகர்கள் தங்களுடைய குடும்பத்துடன் ஜாலியாக பார்க்கும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகி இருக்கிறது.
சென்னை, கோவை, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் படத்தின் கதை நடக்கிறது. ’டார்லிங் டார்லிங் டார்லிங்’, ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’, ‘யாரடி நீ மோகினி’ படங்களைப் போல் வில்லன்களே இல்லாத படமாக இது உருவாகி இருக்கிறது” என்றார்.