

நடிகை கேய்லி ஹாட்டில்
‘காட்ஸில்லா வெர்சஸ் காங்’ மற்றும் ‘காட்ஸில்லா x காங்: த நியூ எம்பயர்’ திரைப்படங்களில் ஜியா என்ற காது கேளாத சிறுமி கதாபாத்திரத்தில் நடித்தவர் கேய்லி ஹாட்டில். இப்படங்களின் மூலம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்த இவர், பிறவியிலேயே காது கேளாதவர்.
அவரது தந்தையின் குடும்பத்தில் 4 தலைமுறைகளாக காது கேளாதவர்கள் இருந்ததால், சைகை மொழி அவரது வாழ்க்கையின் இயல்பான அங்கமாக இருந்தது. சிறுவயதிலிருந்தே தன்னம்பிக்கை மிக்கவராக வளர்ந்த அவர், காது கேளாதோருக்கான பிரதிநிதித்துவத்தை ஹாலிவுட்டில் வலுப்படுத்திய நடிகைகளில் ஒருவராகக் கருதப்பட்டார்.
கடந்த 2021-ல் வெளியான ‘காட்ஸில்லா வெர்சஸ் காங்’ திரைப்படத்துக்காக, காது கேளாத சிறுமி கதாபாத்திரத்தில் நடிக்க உண்மையிலேயே அப்படியான ஒரு நடிகையைத் தேடிய படக்குழு, கேய்லியைத் தேர்ந்தெடுத்தது. பின்னர், 2024-ல் வெளியான ‘காட்ஸில்லா x காங்: த நியூ எம்பயர்’ படத்திலும் அதே கதாபாத்திரத்தில் நடித்தார். திரைப்படங்களுடன் சேர்த்து, விளம்பரங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அவர் தோன்றியுள்ளார்.
இந்நிலையில் அமெரிக்காவின் மேரிலாண்ட் பகுதியில் நடந்த கார் விபத்தில் அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 18. சாலையை விட்டு விலகிய அவரது கார் மோதி நொறுங்கியதாகவும், அதிக வேகம் காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மறைவுக்கு ஹாலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.