

இயக்குநர் சோமிதரன்
நவீன் சந்திரா நடித்துள்ள திரைப்படம், ‘நீளிரா’. சனந்த், ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, ‘கயல்’ வின்சென்ட், விது, ரோஹித் கோகாட்டே, நவயுகா என பலர் நடித்துள்ளனர். செல்வரத்னம் பிரதீபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு கே இசையமைத்திருக்கிறார். ஸ்டோன் பெஞ்ச் ஸ்டூடியோ சார்பில் கார்த்திகேயன் சந்தானம் தயாரித்துள்ளார். சோமிதரன் இயக்கியுள்ள இப்படம் ஏப்.3-ல் வெளியாகிறது.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போர் சூழலில் திருமணத்துக்காக மணமக்கள் வீட்டார், உறவினர்கள், நண்பர்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் பின்னணியாகக் கொண்டு தயாராகி இருக்கும் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
படத்தின் இயக்குநர் சோமிதரன் கூறும்போது, “நிறைய போர் படங்களை பார்த்திருக்கிறோம். அதில் இருதரப்பினரும் துப்பாக்கியால் சுடுவதையும் சுடப்படுவதையும் பார்த்திருக்கிறோம். இன்றைக்கு உலகம் போர் சூழலில் இருக்கிறது. தினம் போர் பற்றிய செய்திகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த செய்திகளில், குண்டுகளின் எண்ணிக்கையைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இதற்குப் பின்னால், குண்டு விழுகின்ற இடத்தில், அது இஸ்ரேலாக இருந்தாலும் சரி, ஈரானாக இருந்தாலும் சரி, அங்கும் மக்கள் இருப்பார்கள்.
அவர்களுக்கென்று ஒரு வாழ்க்கை இருக்கும். குண்டு விழுகின்ற அந்த நேரத்தில் அவர்கள் ஒரு பிறந்த நாளை கொண்டாடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம், அவர்கள் ஒரு கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்திருக்கலாம். அங்கு குண்டு விழுந்த பிறகு என்னவாகும் ? அந்த சூழ்நிலையை எப்படி மாற்றும் ? அந்த பதற்றமான வாழ்க்கை இருக்கிறதல்லவா, அப்படிப்பட்டதொரு வாழ்க்கையைச் சொல்லும் படம் தான் இது.
பிறந்ததில் இருந்து என்னுடைய முழு இளமைக்கால வாழ்க்கையும் போருக்குள் தான் இருந்தது. அந்த போருக்குள் தான் படித்தோம். அதற்குள்தான் தான் எங்களுடைய சிறு வயது விளையாட்டுகள் இருந்தன; எங்களின் காதலும் இருந்தது. போர் எங்களுடைய வாழ்க்கையில் ஒரு பகுதியாக மாறிவிட்டது. அதைத்தான் இந்தப் படத்தில் சொல்லி இருக்கிறோம்” என்றார்.