

பிரபல இசை அமைப்பாளர் தேவா, சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது திடீர் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தி.நகரில் வசித்து வந்த இசை அமைப்பாளர் தேவா நேற்று காலை நெஞ்சு படபடப்பதாக வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்தார். அடுத்த சில நிமிடங்களிலேயே அவர் மயங்கி சரிந்தார். அவரை உடனடியாக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் உறவினர்கள் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் காப்பாற்ற முடியவில்லை. அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பின்னர் அவர் உடல் மருத்துவமனையில் இருந்து அவர் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு, திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு முதல்வர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவா மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
அமைச்சர் ராஜ்மோகன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தயாநிதி மாறன் எம்.பி, நடிகர்கள் ரஜினிகாந்த், சத்யராஜ், இசை அமைப்பாளர் கங்கை அமரன் உள்பட அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
தேவாவின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் உடல், ஆற்காடு அருகே உள்ள சக்கரமல்லூர் கிராமத்தில் இன்று நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது. மறைந்த தேவாவுக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இவர்கள் மகன் ஸ்ரீகாந்த் தேவா, இசை அமைப்பாளர். இசை அமைப்பாளர்கள் சபேஷ் - முரளி இவர் சகோதரர்கள். இதில் சபேஷ் கடந்த ஆண்டு காலமானார்.
அரசு மரியாதை
இசை அமைப்பாளர் தேவா, இசை உலகுக்கு ஆற்றிய சேவையைக் கவுரவிக்கும் வகையில் அரசு மரியாதையுடன் அவருக்கு இறுதி மரியாதை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இசை அமைப்பாளர் தேவா, 1950-ம் ஆண்டு பிறந்தவர். அவருடைய இயற்பெயர் தேவநேசன். இசை ஆர்வம் கொண்ட அவர், நாடகக் குழுக்களில் பணியாற்றியபோது, ஹார்மோனியம் வாசிக்கத் கற்றுக் கொண்டார்.
பின்னர் இசைக்கலைஞராக மாறிய இவர், இசையமைப்பாளர் சந்திரபோஸுடன் இணைந்து இசைக்குழுவைத் தொடங்கி, இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். பின்னர், தூர்தர்ஷனின் பொதிகை தொலைக்காட்சியில் பணியாற்றிய தேவா, ‘வயலும் வாழ்வும்’ நிகழ்ச்சிக்கு இசை அமைத்தார்.
இளையராஜாவுக்கு இசை கற்றுக்கொடுத்த தன்ராஜ் மாஸ்டரிடம் இசைக் கற்றுக்கொண்ட அவர், 1980-களில் பக்திப் பாடல்களுக்கு இசையமைக்கத் தொடங்கினார். சந்திரசேகர் நடித்த ‘மாட்டுக்கார மன்னாரு’ என்ற படம் மூலம் இசை அமைப்பாளராக 1986-ம் ஆண்டு அறிமுகமான அவர், அடுத்து ‘மனசுக்கேத்த மகராசா’, ‘வைகாசி பொறந்தாச்சு’ திரைப்படங்களுக்கு இசையமைத்தார்.
‘வைகாசி பொறந்தாச்சு’ படத்தின் அனைத்து பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் வரவேற்பைப் பெற்றதை அடுத்து தேவா, தமிழகத்தில் பரவலாக அறியப்பட்டார். முன்னணி நடிகர்களுடன் பணியாற்றும் வாய்ப்புகளை இந்தப் படம் அவருக்குப் பெற்றுத் தந்தது.
1992-ல், ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாமலை’ படத்துக்கு இசை அமைத்த தேவாவின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை, ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. அதைத்தொடர்ந்து ‘பாட்ஷா’, ‘அருணாச்சலம்’ போன்ற படங்களில், ரஜினிகாந்தின் ‘மாஸ்’ பிம்பத்தை மெருகேற்றும் வகையில் அறிமுகப் பாடல்களையும் பின்னணி இசையையும் அமைத்தார் தேவா.
‘பாட்ஷா’ படத்தின் தீம் மியூசிக்கும் அந்தப் படத்தின் ‘நான் ஆட்டோகாரன் ஆட்டோகாரன்’ பாடலும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இப்போது வரை ரஜினியின் படங்களில் வரும் ‘சூப்பர் ஸ்டார் ரஜினி’ என்ற டைட்டில் இசை, தேவா அமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசனின் ‘அவ்வை சண்முகி’, ‘பம்மல் கே சம்பந்தம்’, ‘பஞ்சதந்திரம்’ ஆகிய படங்களுக்கும் இசை அமைத்துள்ளார்.
ஒரே ஆண்டில் 36 படங்கள்
1990-களில், தமிழ் சினிமாவில் அதிகமான திரைப்படங்களுக்கு தேவா இசையமைத் தார். 1996-ல் மட்டும் 36 திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். அஜித்தின் ‘ஆசை’, ‘காதல் கோட்டை’, வாலி’ உள்ளிட்ட படங்களுக்கும் விஜய்யின், ‘நேருக்கு நேர்’, ‘நினைத்தேன் வந்தாய்’, ‘பிரியமுடன்’, ‘குஷி’ போன்ற படங்களுக்கும் இசை அமைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ‘கானா’ இசை வகையைப் பிரபலப்படுத்தியதில் தேவாவுக்கு முக்கியப் பங்குண்டு. வட சென்னையில் புழக்கத்தில் இருந்த கானா பாடல்களைத் திரைப்பாடல்களில் புகுத்திய இவர், பல கானா பாடல்களை எழுதி, இசை அமைத்துப் பாடியுள்ளார். பிற இசை அமைப்பாளர்களின் இசையிலும் கானா பாடல்களை பாடியுள்ளார்.
அவர் இசை அமைப்பில் வெளியான ‘சலோமியா...’, ‘கவலைப்படாதே சகோதரா’, ‘கொத்தவால் சாவடி லேடி’, ‘காத்தடிக்குது காத்தடிக்குது’, ‘அண்ணாநகரு ஆண்டாளு...’ என்பது உள்பட அவருடைய பல கானா பாடல்கள் சூப்பர் ஹிட்டாயின. ஒரு பக்கம் கானா பாடலில் ஆட வைத்தாலும், ‘தூதுவளை இலை அரைச்சு...’, ‘கூவுற குயிலு’ ‘அவள் வருவாளா?’, ‘கொஞ்ச நாள் பொறு தலைவா’, ‘ஒரு மணியடித்தால்’, ‘மீனம்மா...’ ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து...’ உள்பட பல காலத்தால் மறக்க முடியாத மெலடி பாடல்களுக்கும் இசை அமைத்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.
வஞ்சகம் இல்லாத சொக்கத்தங்கம்: ரஜினி
என் அருமை நண்பர், தேவாவின் திடீர் மறைவு அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவர் என்னுடைய ‘அண்ணாமலை’, ‘பாட்ஷா’, ‘அருணாச்சலம்’ படங்களுக்கு இசை அமைச்சிருக்கார். கள்ளம் கபடம், பொய், வஞ்சகம் இல்லாத ஒரு சொக்கத்தங்கம்.
இரண்டரை வருஷம் முன்னால ‘எல்லோரும் இசை நிகழ்ச்சி பண்றாங்க, நானும் பண்ணப் போறேன், நீங்கதான் தொடங்கி வைக்கணும்’னு சொன்னார். சந்தோஷமாக நான் கலந்து கொண்டேன். அது மிகப்பெரிய வெற்றி. வெளிநாடுகளுக்கு போய் சுற்றுப் பயணம் செய்து விட்டு என்னைச் சந்தித்தார்.
‘எனக்கே ஆச்சரியமா இருக்கு. இளைஞர்கள் பாடலை நல்லா வரவேற்கிறாங்க. இதே சந்தோஷத்துல இன்னும் 10, 15 வருஷம் வாழ்ந்துட்டு போயிருவேன்’னு சொன்னார். ஆண்டவன், ‘நீ ரொம்ப நல்லவம்பா. சந்தோஷமா இருக்கும் போதே வந்துடு’ன்னு கூட்டிட்டு போயிட்டான் போலிருக்கு. அவர் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.