“தேவா உடன் 35 ஆண்டுகள், 29 படங்கள்...” - இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா உருக்கம்

“தேவா உடன் 35 ஆண்டுகள், 29 படங்கள்...” - இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா உருக்கம்
Updated on: 
2 min read

தேவா என்னும் சகோதரரை இழந்துவிட்டதாக அவரது மறைவு குறித்து இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் தேவாவின் மறைவையொட்டி இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, தி.நகரில் உள்ள தேவாவின் வீட்டுக்கு சென்று அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். தேவாவுடனான தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட சுரேஷ் கிருஷ்ணா கூறியது, “தேவா உடன் இணைந்து பயணம் தொடங்கி 35 ஆண்டுகள் ஆகிறது. அவருடன் இணைந்து 29 படங்கள் பணியாற்றி உள்ளேன்.

‘அண்ணாமலை’யில் தொடங்கிய அந்தப் பயணம், ‘ஆஹா’, ‘பாட்ஷா’ என ‘சாருகேசி’ வரை தொடர்ந்தது. அவரின் கடைசி படம், என்னுடைய  ‘சாருகேசி’.

இந்த 35 வருடங்களில் எவ்வளவு பயணங்கள், எவ்வளவு பாடல்கள், எவ்வளவு ஆனந்த காபிகள். என்னைப் பார்க்கும்போதெல்லாம் ஆனந்த காபி சாப்பிட போகலாமா என கேட்பார்.

இந்த திரையரங்கில்தான் உட்கார்ந்து அவ்வளவு காபிகள் குடித்து, அரட்டை அடித்தும், நகைச்சுவைகளை பேசியிருக்கிறோம். அவரைப் போல் நகைச்சுவைகள் சொல்ல முடியாது. உங்களுடைய நகைச்சுவைகளை எல்லாம் வீடியோக்களாக எடுத்து தொகுத்து வையுங்கள் என நான் சொல்லிக் கொண்டே இருப்பேன்.

‘அண்ணாமலை’ படத்துக்காக எங்கள் சந்திப்பு நடந்த முதல் நாளில் தேவா சொன்ன முதல் வார்த்தை ‘வணக்கம் சார் உங்களைச் சந்தித்ததில் ஆனந்தம்’ என்பதுதான். அந்த ஆனந்தம் எங்களுடைய 35 வருட பயணத்திலும் தொடர்ந்தது.

தேவாவுடன் நான் வெறும் இயக்குநராக மட்டும் பழகவில்லை. ஒரு சகோதரனாக, அந்த வீட்டின் ஒரு உறுப்பினராகவே தான் இருந்தேன். மகன் ஸ்ரீகாந்த், மகள் சங்கீதா என எல்லோரும் எனக்குப் பழக்கம்.

இன்று தேவா இறந்துபோவார் என நான் நினைக்கவே இல்லை. எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சி இது. வாழ்க்கையில் பல உணர்வுகளை நான் கடந்து வந்திருக்கிறேன். ஆனால் இந்த உணர்வு என்னை மிகவும் பாதித்துவிட்டது.

திரைத் துறையில் ஒருவருவருக்காக நான் கண்களை முடி அழுதேன் என்றால், அது அவரின் தூய்மையான அன்பு மற்றும் நட்புக்காகதான்.

யாரிடமும் அவருக்கு பகை கிடையாது, யாரிடமும் அவருக்கு சண்டை கிடையாது. முழுமையான அன்புடன் அனைவரையும் அரவணைத்துச் செல்வார்.

மிகவும் திறமையானவர் தேவா. ‘அண்ணாமலை’யில் எல்லா பாடலும் ஹிட். ‘பாட்ஷா’வில் ஒவ்வொரு பாடலும் சூப்பர் ஹிட். பாடல்கள், பின்னணி இசை என அவர் முழுமையான இசையமைப்பாளர் மட்டும் இல்லை. முழுவதும் அன்பால் நிறைந்த ஒரு மனிதர்.

என்னைப் பொறுத்தவரை நான் எனது சகோதரனை இழந்துவிட்டேன். எனக்கு மிகவும் நெருக்கமான ஒருவரை இழந்துவிட்டேன். அவரை இனிமேல் பார்க்க முடியாது என்பது வருத்தமாக இருக்கிறது.

இப்போதும் அவரைப் பார்க்கும்போது தூங்குவது போலத்தான் இருக்கிறது. அவர் இறந்து விட்டதாக தோன்றவில்லை. அவரின் இசையால்,  நினைவுகளால் அவர் நம்முடன் வாழ்ந்து கொண்டே இருப்பார்’’ என்று சுரேஷ் கிருஷ்ணா உருக்கமாக பேசினார்.

கடந்த 1992-ம் ஆண்டு, ‘அண்ணாமலை’ படத்துக்காக முதன்முதலாக சந்தித்துக் கொண்டதில் தொடங்கியது இவர்களின் நட்பு. ரஜினிகாந்தின் திரை ஆளுமைகளில் முதன்மையான சூப்பர் ஸ்டார் லோகோ இந்தப் படத்தில் தான் இடம்பெற்றது. அதற்கு தனது அழியாத இசையால் அடையாளம் கொடுத்திருப்பார் தேவா. 

‘அண்ணாமலை’யில் தொடங்கிய இசையமைப்பாளர் தேவா - இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவின் பயணம் மூன்று தசாப்தங்களைக் கடந்து ‘சாருகேசி’ வரை தொடர்ந்துள்ளது. இந்த நீண்ட பயணத்தில் பல்வேறு மொழிகளில் இருவரும் பல படங்களில் பணியாற்றி உள்ளனர். 

“தேவா உடன் 35 ஆண்டுகள், 29 படங்கள்...” - இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா உருக்கம்
‘தமிழ் இசையின் ஆன்மா...’ – தேவாவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் புகழஞ்சலி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in