கேப்டன் என் அம்மா - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 18

கேப்டன் என் அம்மா - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 18
Updated on
2 min read

​நான் சென்னை பச்​சையப்​பன் கல்​லூரி​யில் பி.​காம் முடித்து வெளியே வந்​த​போது, கல்​லூரி தந்த மகிழ்ச்​சி, ஜாலி, கிண்​டல், விளை​யாட்டு எல்​லாம் ஒரே நாளில் என் பின்​னால் மறைந்து கொண்​டு, என்னை ஒரு சூனி​யத்​தின் முன் நிறுத்​தி​யது போல உணர்ந்த ஆண்டு 1982. நான் படிப்​பில் கெட்​டிக்​கார மாணவன் இல்​லை. பலமுறை பரீட்​சை​யில் தோல்வி அடைந்​திருக்​கிறேன்.

கல்​லூரி முடிந்​ததும் என்ன செய்​வது என்று புரிய​வில்​லை. என் அக்கா ஹேம​மாலினி டப்​பிங் பேச செல்​லும் போது நானும் உடன் செல்​வேன் என்று ஏற்​கெனவே சொல்​லி​யிருக்​கிறேன். அப்​போது எனக்கு சரி​யான வாய்ப்​பு​கள் வரவில்​லை. நாங்​கள் வசித்த வீட்​டின் கீழே, சைனுதீன் என்​பவர் இருந்​தார். அவர்​தான் என்னை பினாக்கா பற்​பசை நிறு​வனத்​தில் சேர்த்​து​விட்​டார்.

நாங்​கள் சின்ன போரூரில் வசித்​தோம். அங்​கிருந்து வேலைக்​காக சைக்​கிளில் வில்​லி​வாக்​கம், அயனாவரம், பாரிஸ் கார்​னர் என்று செல்​வேன். பிறகு திரும்​புவேன்.

தின​மும் குறைந்​தது இருபத்து ஐந்​திலிருந்து ஐம்​பது கிலோமீட்​டர் சைக்​கிள் மிதிப்​பது வழக்​கம். அப்​போது எனக்கு வேலை​யில் சின்ன பிரச்​சினை இருந்​தது. வெளியூர் சென்று வேலை பார்க்க வேண்​டும் என்று அந்​நிறு​வனம் சொன்​னது. என் குடும்​பத்​தில் அதற்​கான சூழல் அமைய​வில்​லை.

அதனால் மறு​படி​யும் டப்​பிங் பேசுவதற்கு முயற்சி செய்து கொண்​டிருந்​தேன். ராயப்​பேட்​டை​யில் உள்ள கவுடியா மடம் அரு​கில் மெட்​ராஸ் சினி லேப் என்ற டப்​பிங் தியேட்​டர் இருந்​தது. அங்கு இயக்​குநர் கே.​விஜயன் அவர்​கள் இயக்​கிய ‘தூரத்து இடி முழக்​கம்’ படத்​தின் டப்​பிங் நடந்து கொண்​டிருந்​தது. அப்​படத்​தின் நாயகிக்கு என் சகோ​தரி பின்​னணி குரல் கொடுத்​தார்.

நானும் அக்கா​வுடன் செல்​வேன். அப்​போது அங்கு பைக்​கில் வாட்​ட​சாட்​ட​மான இளைஞர் ஒரு​வர் வந்​தார். நீள​மான தலை​முடி. அவர் வண்​டியி​லிருந்து இறங்​கியதே ஸ்டைலாக இருந்​தது. ஆள் யாரும் பழக்​கமில்லை என்​றாலும் எல்​லோரிட​மும் நலம் விசா​ரித்​தார். சிரித்​த​படி பேசிக் கொண்​டிருந்​தார்.

அவர்​தான் அந்​தப் படத்​தின் ஹீரோ, என் அண்​ண​னாக​வும் அம்மாவாகவும் இருந்த, இருக்​கிற, கேப்டன் விஜய​காந்த்! அந்​தப் படத்​தில் விஜய​காந்​துக்கு டாடி சாமி என்று நான் அழைக்​கிற, தீனரட்​சகன் என்ற வி.டி.ரட்​சகன் டப்​பிங் பேசி​னார். அங்கு அவர் அடிக்​கடி வரும்​போது, நான் அவருக்கு அறி​முக​மானேன். பிறகு என் தம்​பி​யின் நண்​பர் மணி என்​பவர் இருந்​தார். அவரும் விஜய​காந்த் அண்​ணா​வும் நண்​பர்​கள்.

அவர் மூல​மாக அவர் இன்​னும் நன்​றாகப் பழகி​னார். அப்​போது அவரை நான் அண்ணா என்று அழைப்​பேன். மதுரை வழக்​கில்​தான் அவர் பேச்சு இருக்​கும். அதற்​குப் பிறகு ‘சட்​டம் ஒரு இருட்​டறை’ படத்​தி​லும் அண்​ணன் கதா​நாயக​னாக நடித்​தார்.

அந்​தப் படத்​தின் டப்​பிங், ஆழ்​வார்​பேட்​டை​யில் இருந்த இயக்​குநர் ஏ.பி.​நாக​ராஜன் ஐயா​வின் ஏபிஎன் டப்​பிங் தியேட்​டரில் நடந்​தது. விஜய​காந்​துக்கு எஸ்​.என்​.சுரேந்​தர் டப்​பிங் பேசி​னார். அப்​படத்​தில் வரும் மூன்று வில்​லன்​களில் ஒரு​வருக்கு நான் பேசினேன்.

அந்த கதா​பாத்​திரத்​துக்கு பாஸ்​கர்​ தான் பேசவேண்​டும் என்று என்​னைப் பிடி​வாத​மாக அதில் பேச​வைத்​தது, நான் மாமா என்று அன்​போடு அழைக்​கிற திரு. எஸ்​.ஏ.சந்​திரசேகர். அப்​போது அங்கு வரும் விஜய​காந்த் என்​னிடம் நலம் விசா​ரிப்​பார். ஒரு படம் ஹீரோ​வாக நடித்து விட்​டாலே மற்​றவர்​களிடம் பேசுவதைக் குறைத்​துக்​கொள்​கிற சினிமா உலகில் அவர் இயல்​பாக, எல்​லோரிட​மும் சகஜ​மாக, உண்​மை​யாக பேசிக் கொண்​டிருந்​தது எனக்கு பிடித்​திருந்​தது. அவர் பாண்​டிபஜார் ராஜா பாதர் தெரு​விலிருந்த ரோகிணி லாட்​ஜில் தங்கி இருந்​தார்.

நான் அந்​தப் பக்​க​மாக எப்​போது சென்​றாலும் அண்​ணன் இருக்​கிறா​ரா? என்று அவரைப் பார்க்​கச் செல்​வது வழக்​கம். அப்​படிச் செல்​லும்​போது அறை​யில் கீழே ஒரு தலை​யணை போட்டு தரை​யில் படுத்​திருப்​பார். என்​னைக் கண்​டால், “வா பாஸ்​கர், எங்க போயிட்டு வர்​றே?” என்​பார். “டப்​பிங் பேசிட்டு அப்​படியே வர்​றேண்​ணே” என்​பேன்.

“சாப்​டியா “? என்று கேட்​பார். “இல்ல, வீட்​டுக்கு போயி சாப்​பிட​ணும்” என்று சொல்​வேன். அப்​போதே அங்கு எல்​லோருக்​கும் சாப்​பாடு உண்​டு. சுமார் 12, 13 பேருக்கு தின​மும் சாப்​பாடு கொடுப்​பது வழக்​கம். என்​னை​யும் விட​மாட்​டார். அங்​கேயே சாப்​பிடு​வேன். பிறகு வீட்​டுக்​குக் கிளம்​பு​கிறேன் என்​பேன். “அங்க போய் என்ன பண்ண போற?” “இல்​லண்ணே தூங்​கு​வேன்” “இந்தா தலை​யணை. இதை வச்சு இங்​கயே தூங்​கு” என்​பார்.

விழித்​ததும் ஒரு காபி வரும். குடித்​து​விட்​டு, “இப்ப வீட்​டுக்கு போ” என்​பார். “இந்த மனசு யாருக்கு வரும்?” என்று வியப்​பேன். அப்​போது நான் ஸ்கூட்​டர் வைத்​திருந்​தேன். அவரிடம் பேசி​விட்டு வீட்​டுக்கு வந்து விடு​வேன். பிறகு எப்​போது அந்​தப் பக்​கம் போனாலும் அண்​ணன் இருக்​கா​ரா? என்று பார்ப்​ப​தை​யும் அவருடன் சாப்​பிடு​வதை​யும் வழக்​க​மாக வைத்​திருந்​தேன்.

எனக்கு அவர் செய்​திருந்த உதவி​கள், எனக்​காக அவர் பல கம்​பெனிகளில்​ பரிந்​துரைத்​தது, என்​னிடம்​ விளை​யாடியது, என்​னைக்​ கிண்​டல்​ செய்​தது, நடிகர்​ சங்​கத்​தில்​ எனக்​கு ஆயுட்​​கால உறுப்​பினர்​ ​கார்​டு கொடுத்​தது என பல விஷ​யங்​கள்​ என்​னுள்​ இருக்​கின்​றன. அதை அடுத்​தடுத்​த ​வாரங்​களில்​ பேசுகிறேன்​.

(திங்​கள்​தோறும்​ பேசுவோம்​)

கேப்டன் என் அம்மா - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 18
ஷீக்கிங் டூடு எனும் மெக்கானிக் நண்பன் - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 17

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in