

எல்லோரிடமும் எளிதாக பழகி விடுவேன் என்பதால் எனக்கு நண்பர்கள் வட்டம் பெரிது. எங்கு வீடு மாறினாலும் அங்கு எனக்கு நண்பர்கள் கிடைத்து விடுவார்கள். அப்படி சென்னை வளசரவாக்கத்தில் நாங்கள் வசித்த போது எனக்கு நண்பனானவன் ‘ஷீக்கிங் டூடு’. சிறந்த பைக் மெக்கானிக். இருசக்கர வாகனங்களின் காதலன். மெக்கானிக் வேலையை காதலோடு செய்பவன்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவைச் சேர்ந்த அவனுடைய அம்மா அங்கு இருந்தார். அப்பா இல்லை. இங்கு, அவன் சித்தி வீட்டில் வசித்துக்கொண்டு “பாலாஜி ஆட்டோ மொபைல்ஸ்” என்ற மெக்கானிக் ஷாப் நடத்தி வந்தான். நான் அவன் கடையில்தான் எப்போதும் இருப்பேன்.
சரியான சாப்பாட்டுப் பிரியன். மதியம் மட்டும் ஒன்றரை கிலோ இறைச்சி சாப்பிடுவான். கூடவே அதற்கு ஏற்ற மாதிரி சோறும். அடிக்கடி நொறுக்குத் தீனிகளையும் தின்று கொண்டிருப்பான். உடல் நலன் மீது அதிக அக்கறை கொண்ட அவன், வெயிட் லிஃப்டிங் ஆர்வலன். அவனைக் கிண்டல் பண்ணுவது அவனுக்கே ரொம்ப பிடிக்கும்.
நான், பெரிய கிராமம் ரவி, பார்த்திபன், திருநெல்வேலியை சேர்ந்த கணேசன், எனது உறவினர் பாபு என்கிற அசோக்குமார் என்று சில நண்பர்கள் உண்டு. எப்போதும் ஜாலியாக அவனைக் கிண்டல் செய்துகொண்டே இருப்போம். டூடு என்ற பெயரை ஆரம்பத்தில் முத்து என்று தவறாகப் புரிந்து கொண்டேன். பிறகு டூடு என்று புரியும்விதமாகச் சொன்னான்.
அது ஆங்கில கவிஞர் ஒருவரின் பெயராம்.(அவன்தான் சொன்னான்!) அவனது சிறப்பே எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பதுதான். எதைச் சொன்னாலும் அவனிடம் இருந்து ஒரு வெடிச்சிரிப்பு வரும். அதனாலேயே அவனை எல்லோருக்கும் பிடிக்கும். செவ்வாய்க்கிழமை அவனுடைய கடை லீவு.
அதனால் திங்கட்கிழமை இரவே அவனிடம் “நாளைக்கு காலைல நாலரை மணிக்கு ரெடியாயிரு, ஒரு இடத்துக்குப் போறோம்” என்பேன். உடனே “சரி வாத்யாரே” என்பான். (அவன் என்னை ‘வாத்தியாரே’ என்றும், எனது தம்பியை ‘சின்ன வாத்யாரே’ என்றும் அன்போடு அழைப்பான்! என் தம்பி செப்டம்பர் 27, 2016-ல் காலமாகி விட்டார்.) பிறகு காலையில் பைக்கை எடுத்துக்கொண்டு இருவரும் அப்படியே திருப்பதி, திருத்தணி சென்று சுவாமி தரிசனம் செய்து திரும்புவோம்.
அது ஜாலியான பயணமாக இருக்கும். திடீரென்று ஏதாவது ஒரு இடத்தில் பைக்கை நிறுத்தி, “இப்ப நீ வண்டிய ஓட்டு” என்பான். அப்படியென்றால் அவன் பின்னால் உட்கார்ந்து நொறுக்குத்தீனி சாப்பிடப்போகிறான் என்று அர்த்தம். சரி என்று நான் ஓட்டிக்கொண்டு வருவேன். எப்போதும் நாங்கள் ஒன்றாகவே சுற்றுவதால், அவனைப்பற்றி என்னிடமும் என்னைப்பற்றி அவனிடமும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் விசாரிப்பார்கள். அந்தளவுக்கு நெருக்கமாக இருப்போம்.
அப்போது நான் டப்பிங் பேசிக் கொண்டிருந்ததால், “அவரை போல பேசு, இவரைப் போல பேசு, இப்படிப்பேசு. அப்படிப்பேசு” என்று கேட்டுக் கொண்டே வருவான். நானும் பேசிக்கொண்டு வருவேன். அடிக்கடி சோகமாக அமர்ந்து விடுவான். என்ன என்று விசாரித்தால், “வாழ்க்கையே வெறுத்து போகுது, மெக்கானிக் ஷாப் சரியா ஓடலை. பேசாம தற்கொலை பண்ணிக்கலாம்னு தோணுது” என்பான்.
நான், “டேய், அந்த மாதிரி நினைப்பெல்லாம் வரவே கூடாது. எனக்கு கூடத்தான் டப்பிங் வாய்ப்பு அதிகமா வர்றதில்லை. அதுக்கு என்ன பண்ண முடியும். அதையெல்லாம் தாண்டிதான் முன்னேறணும்” என்று நம்பிக்கை அளிப்பேன். அப்போது அவனுக்கு ஊரில் பெண் பார்த்திருந்தார்கள். நான் டப்பிங்கில் பிசியாக இருந்ததால் திருமணத்துக்கு போக இயலவில்லை. அவனும் புரிந்து கொண்டான். பிறகு கேரளா சென்று திருமணம் செய்துகொண்டு வந்தான்.
டூடுவுக்கு இரவு நேரத்தில் மதுகுடித்து விட்டு வருபவர்களைக் கண்டால் பிடிக்காது. எரிச்சலடைவான். ஒரு நாள் இரவில் அவன் கடைக்கு எதிரில் ஒருவர் போதையில் உளறியபடி நிற்க முடியாமல் நின்றிருக்கிறார். “யாருப்பா நீ. இங்க வந்து கத்திக்கிட்டு இருக்கே!” என்று சொல்லிவிட்டு அவரை அருகில் சென்று பார்த்தவனை அந்த குடிகாரர், முகத்திலேயே குத்தி விட்டார்.
வலி தாங்க முடியாத டூடு, அவரை நையப்புடைத்திருக்கிறான். குடிகாரர் கீழே விழுந்ததைப் பார்த்ததும் அவர் இறந்ததாக நினைத்து கடைக்கு ஓடி வந்து மறைந்து கொண்டிருக்கிறான் டூடு. யாரும் பார்த்திருப்பார்களோ என்ற பயம் வேறு. குடிகாரர் எழுந்து கொள்கிறாரா என்று கடையில் இருந்து பார்த்துக்கொண்டே இருந்திருக்கிறான். சிறிது நேரத்துக்கு பிறகு அவர் எழுந்து சென்றதும்தான் இவனுக்கு உயிரே வந்திருக்கிறது.
இப்படியான நண்பன், இரண்டு மூன்று நாள் ஒரு மாதிரியாக ‘மூட் அவுட்’டில் இருந்தான். முகமே, அவனுக்கு ஏதோ பிரச்சினை என்பதை காட்டிக் கொடுத்தது. விசாரித்தால், “ஒன்றுமில்லை” என்றான். “வீட்டுல ஏதும் பிரச்சினையா? என்னன்னு சொல்லுடா?” என்று கேட்டும் “ஒன்றுமில்லை, நார்மலாதான் இருக்கேன்” என்று சொல்லிவிட்டான்.
“நீ எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருக்கிறவன், இப்ப அதை உன் முகத்துல பார்க்க முடியல. என்னன்னு சொல்ல மறுக்கிற?” என்று நான் கேட்டபோது, “ஒரு பிரச்சினையு மில்ல வாத்யாரே... நார்மலாகத்தான் இருக்கேன்” என்றான்! அப்போது அவன் மனைவி மூன்று மாத கர்ப்பமாக இருந்தார்.
பிறகு ஒரு நாள் காலையிலேயே டப்பிங்குக்கு சென்றுவிட்டேன். மதியம் இரண்டு, மூணு மணி இருக்கும், என் மனைவி ஃபோன் செய்து, “டூடு விஷம் குடிச்சுட்டானாம்” என்று சொன்னார்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. எதுக்கு இப்படி செய்தான் என்று தெரியவில்லையே என அவன் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு பதறியபடி சென்றேன். அவனுடைய சித்தி மரணமடையும் போது, எந்த மருத்துவமனையில், எந்த படுக்கையில் படுத்திருந்தாரோ, அதே மருத்துவமனையில், அதே படுக்கையில் அவனை படுக்க வைத்திருந்தார்கள்.
நான் டாக்டரிடம் விசாரித்தேன். “வயலுக்கு அடிக்கிற பூச்சி மருந்தை ஒன்றரை பாட்டில் குடிச்சிருக்கார்” என்றார். குடிகாரர்களை வெறுக்கிற அவன், மதுவில் பூச்சி மருந்தை கலந்து குடித்திருக்கிறான். என்னால் அதைத்தாங்க முடியவில்லை. நான் வீட்டுக்குப் போய் விட்டு மீண்டும் வருவதற்குள் அவன் இறந்திருந்தான். கதறியபடியே அவன் உடலை ஆம்புலன்ஸில் கேரளாவுக்கு அனுப்பி வைத்தேன்.
அருமையான நண்பன், எதற்காகத் தற்கொலை செய்து கொண்டான் என்று இன்றுவரை எனக்கு தெரியவில்லை. ஒரு துண்டு சீட்டில், ‘என் மரணத்துக்கு யாரும் காரணமில்லை’ என்று மலையாளத்தில் எழுதி வைத்து விட்டு விஷம் குடித்திருக்கிறான்.
பிறகு அவன் அம்மா சென்னை வந்தபோது, என்னை கட்டிப்பிடித்து கொண்டு கண்ணீர் விட்டார். பிறகு, “ஏதாவது சொன்னானாப்பா?” என்று கேட்டார். இல்லை என்று சொல்லிவிட்டு அவன் எழுதி வைத்திருந்த சீட்டை அம்மாவிடம் கொடுத்து கண்ணீர் விட்டேன்.
அவன் இறந்தது பிப்ரவரி 15, 1997. இப்போது அவன் மறைந்து, இருபத்தி ஒன்பது வருடங்கள் ஓடி விட்டன! ஆனால் இன்னும் என் மனதுக்குள்ளே இருக்கிறான். அவன் சிரித்தவாறே அவ்வப்போது என் முன் வந்து நின்று ‘வாத்யாரே’ என்று அழைப்பது போல் உணர்கிறேன்.
சமீபத்தில் படப்பிடிப்புக்காக கேரளா சென்றிருந்த போது, அவன் வீட்டை கண்டுபிடித்து அவன் குடும்பத்தாரை பார்த்து பேசிவிட்டு வரலாமா என்று நினைத்தேன். ஆனால், இத்தனை வருடங்களுக்கு பிறகு அவனை அந்த ஊரார் நினைவு வைத்திருப்பார்களா? என்று தெரியாமல் வந்துவிட்டேன்.
அதிகமாக சாப்பிடும் யாரையாவது கண்டால் இன்றும் எனக்கு அவன் நினைவு வரும். அது எனது இறுதி மூச்சு வரை வரும்.
(திங்கள்தோறும் பேசுவோம்)