

அப்போது சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தேன். கூடவே தொடர்ந்து வாய்ப்பு தேடுவதை வேலையாக வைத்திருந்தேன். ஆரம்பகால நடிகனுக்கு அதுவும் ஒரு வேலைதானே. என் மேல் அசோசியேட் இயக்குநர் ஒருவர் அக்கறை கொண்டவராக இருந்தார். அவர் எனக்கு அண்ணன் மாதிரி. அவர் எந்த படத்தில் பணியாற்றினாலும் என்னை அழைப்பார். வாய்ப்புகள் கிடைக்கும். அதை செய்து வந்தேன்.
அவர் முன்னணி இயக்குநர் ஒருவரின் படத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது டப்பிங்கிற்கு என்னை அழைத்திருந்தார். அந்த இயக்குநர் டப்பிங் தியேட்டருக்கு வந்திருந்த போது அவரிடம் “எனக்கு நடிக்க ஒரு வாய்ப்பு வேணும்” என்று கேட்டேன். என்னை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு, “ஏம்பா... நாங்கலாம் படம் எடுத்து பொழைக்கறது உனக்கு புடிக்கலையா?” என்று கிண்டலாக கேட்டார்.
எனக்கு அது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. நான் புன்னகைத்தபடி நின்று கொண்டிருந்தேன். அப்போது அந்த அசோசியேட், “அவனை பத்தி உங்களுக்கு தெரியல. அவன் திறமை என்னங்கறதை நான் அளந்து வச்சிருக்கேன். ஒரு காலத்துல அவன் பெரிய நடிகனா வருவான். அப்ப நீங்க அவன்கிட்ட கால்ஷீட் கேட்கும் போது அவன் இல்லைன்னு சொல்லுவான். வேணா பாருங்க” என்று சொன்னார்.
அதற்கு பிறகு அந்த அசோசியேட் காலமாகி விட்டார். ஆனால், அவர் சொன்னது பலித்தது. நான் படங்கள் மற்றும் சீரியலில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த போது, அந்த இயக்குநரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அவர் ஒரு சீரியலை இயக்கிக் கொண்டிருந்தார். என்னிடம் சம்பிரதாயமாக நலம் விசாரித்துவிட்டு, தனது தொடரில் நடிக்க வேண்டும் என்று கால்ஷீட் கேட்டார். அப்போது எனக்கு நிற்கவே நேரமில்லை. பகல், இரவு என ஓடிக் கொண்டிருந்தேன். என்னால் கால்ஷீட் கொடுக்க முடியாத நிலையை சொன்னேன். இப்போது அவர் பழைய விஷயங்களை நினைவுபடுத்தி பார்த்துவிட்டு, “அந்த அசோசியேட் சொன்ன மாதிரியே, இப்ப நீ பிசியாயிட்டே, வாழ்த்துக்கள்” என்று சொல்லி விட்டு போனை வைத்தார்.
அதே போல டப்பிங் பட வசனகர்த்தா ஒருவர் இருந்தார். பெயர் வேண்டாம். நான் ஒரு படத்துக்கு டப்பிங் பேசிக் கொண்டிருக்கும்போது, இப்படித்தான் இந்த மாடுலேஷனில் தான் பேச வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தேன். அவர், “நீங்க பேசறது சரியில்லை. வேற மாதிரி, நான் சொல்ற மாதிரி வரணும்” என்றார். நான் அந்த காட்சியை பார்த்துவிட்டு, “இல்ல சார், இதுக்கு இந்த மாடுலேஷன்தான் சரியா வரும். எனக்கு தெரிந்த அனுபவத்தில் சொல்றேன், இதுதான் சரி” என்றேன். அவருக்கு ஜிவ்வென்று கோபம் தலைக்கேறியது.
“இல்ல, நான் சொல்றதுதான் சரி. அது மாதிரி பேச உனக்கு வராதுயா, வரவே வராது” என்றார். நான் சொன்னதை அவரால் ஏற்கமுடியவில்லை. இதனால் அந்த வாய்ப்பை எனக்கு கொடுக்கவில்லை. சரி என்று நானும் வந்து விட்டேன். அதை நான் சவாலாகவும் எடுத்துக் கொண்டேன்.
அதற்கு பிறகு சில வருடங்கள் கழித்து சென்னை வர்த்தக மையத்தில் நடந்த விழா ஒன்றுக்காக சென்றிருந்தேன். அவர் என் கையை பிடித்துக் கொண்டு, “நல்லா நடிக்கிறீங்க பாஸ்கர். அருமையான நடிப்பு. நீங்க டப்பிங் பேசும் போதே பிரமாதமா நடிப்பீங்கன்னு உங்களை சரியா கணிச்சேன்” என்றார். அப்போது அவர் ஏற்கெனவே என்னிடம் சொன்ன வார்த்தை மனதுக்குள் வந்து நின்றது. நான் சிரித்துக் கொண்டே, “நன்றி ஐயா” என்றேன்.
இதே போல பலர் என்னை அவமானப்படுத்தி இருக்கிறார்கள். அவர்கள் சொன்னார்கள் என்பதற்காக நான் சோர்ந்து போனதில்லை. என்னால் ஜெயிக்க முடியும் என்ற உந்துதல் எனக்குள் இருந்து என்னை தூண்டிக் கொண்டே இருந்தது. அதுதான் என்னை தேசிய விருதுவரை கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.
நான் ஒரு சீரியலில் நடிக்கும்போது ஒரு புகழ் பெற்ற நடிகை அதில் நடித்தார். அவர் வேற்று மொழியை தாய்மொழியாகக் கொண்டவர். அவர் ஷூட்டிங்கில் நான் பேசிய வசனத்தைக் கேட்டு “நீங்க இப்படி பேசக்கூடாது, வேற மாதிரி பேசணும்” என்றார். “நீங்க சொல்றது, உங்க தாய்மொழிக்கு சரியா வரும். இது தமிழுக்கு அவ்ளோ சரியா வராது” என்றேன்.
அவர், என்னை முறைத்து, “அப்ப என்ன விட உங்களுக்குத் தமிழ் நல்லா தெரியுமா?” என்று கேட்டார். “தெரியும்ன்னுதான் சொல்றாங்க... பரவாயில்ல. நான் என் மாடுலேஷன்ல பேசறேன். நீங்க உங்க மாடுலேஷன்ல பேசுங்க” என்றேன். ஸ்கிரிப்ட் என்ன மாதிரி கான்செப்ட் என்பதை தெரிந்து கொண்டு என் ஸ்டைலில் பேசுவதுதான் என் வழக்கம். பிறகு, “நீங்க பேசறது இந்த எபிஸோட்ல வராது” என்றார். நான், “எங்கிட்ட ஏன் அதை சொல்றீங்க?” என்றேன்.
“நான் சொன்ன மாதிரி நீங்க பேசலை. நான் டப்பிங் பேசுனாதான் இது வரும்” என்றார். “சரிம்மா, அது இயக்குநர், தயாரிப்பாளர் கவலைப்பட வேண்டிய விஷயம். நான் எதுக்கு அதுல தலையிடப்போறேன்? இந்த சீன் இருக்குங்கறதாலதான் என்னை டப்பிங் பேசக் கூப்பிட்டிருக்காங்க. மற்றபடி அது வருது, வரலைங்கறதுல எனக்குப் பிரச்சினை இல்லை” என்றேன். கூடவே, “அது ஒரு முக்கியமான காட்சி.
கண்டிப்பாக இது வரதுக்கு வாய்ப்பிருக்கு” என்றும் சொன்னேன். “எங்கிட்ட சவால் விடறீங்களா?” என்று கேட்டார். “இல்ல, நம்பிக்கையோட சொல்றேன், சவால்னு எடுத்துக்கிட்டா எடுத்துக்குங்க” என்றேன். டப்பிங்கிற்கு அசோசியேட் டைரக்டர் வந்தார். அவரிடம், “பாஸ்கர் பேசிய டயலாக் எல்லாம் கட் பண்ணிட்டு என்னை கூப்பிடுங்க. நான் பேசறேன்” என்று சொன்னார்.
பிறகு இப்பிரச்சினை இயக்குநரிடம் சென்றது. அவர் போன் செய்து, “மேடம் உங்களுக்கு என்ன சிக்கல்?” என்று கேட்டார். என் வசனங்களை நீக்கச் சொன்னார் நடிகை. டைரக்டர் இதுபற்றி தயாரிப்பாளரிடம் சொன்னார். அவர், அந்த நடிகைக்கு போன் பண்ணி, “என்னம்மா பிரச்சினை?” என்று கேட்டார். “பாஸ்கர் பேசியது சரியில்லை, அது அப்படி பேசக்கூடாது. அது மட்டுமில்லாம, ஸ்கிரிப்ட்ல இருக்கறதையே அவர் பேசலை. சொந்தமா பேசியிருக்காரு” என்றார். “அப்படிப் பேசணும்னு சொல்லித்தான் அவரை நாங்க புக் பண்ணியிருக்கோம். அவரு இயல்பா பேசுறது எல்லாருக்கும் புடிச்சுருக்கு. அப்படிதான் பேசணும் அவர்” என்றார்.
“அதெல்லாம் இல்ல. அவர் டயலாக்கை கட் பண்ண சொல்லுங்க” என்று அடம் பிடித்தார். பிறகு தயாரிப்பாளர், “இல்லம்மா, அதை கட் பண்ண முடியாது. நீங்க முடிஞ்சா பேசுங்க, இல்லைனா, இவருக்கு பதில் இவர்னு உங்களுக்கு பதிலா வேற ஒருத்தரை போட்டுக்குறோம்” என்றார். அதற்கு பிறகுதான் அவர் போய் டப்பிங் பேசிவிட்டு வந்தார். பிறகு அதே படப்பிடிப்பில் அந்த நடிகையை சந்தித்த போது, நான் வழக்கம் போல வணக்கம் என்றேன். அவர், “உங்க வணக்கத்துல ஒரு எகத்தாளம் தெரியுது. சவால்ல ஜெயிச்சிட்டீங்கன்னு நினைப்பா?” என்றார். “நான் அப்படி நினைக்கலை, உங்களை விரோதியாகவும் பார்க்கலை, வாங்க வேலையை பார்ப்போம்” என்றேன்.
இதே போல பல பேர் நிறைய சவால்களை எனக்கு கொடுத்திருக்கிறார்கள். அதை எல்லாம் என் தன்னம்பிக்கையாலும் திறமையாலும், இறையருளாலும் சமாளித்திருக்கிறேன். ஒரு முறை ஜோசியர் ஒருவர், “உனக்கெல்லாம் இரும்பு தொழில்தான் சரியா வரும். சினிமாவுல நீ பெருசா வர்றதுக்கு வாய்ப்பே இல்லை” என்றார். அவர் சொன்னதை பொய்யாக்குவோம் என்றே கடுமையாகப் போராடினேன்.
இப்போது இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன். அதுக்கு பிறகு அந்த ஜோசியரை நான் சந்திக்கவே இல்லை.
(திங்கள்தோறும் பேசுவோம்...)