‘என்னில் பாதி இந்த தம்பி..!’ - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 25

‘என்னில் பாதி இந்த தம்பி..!’ - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 25
Updated on
3 min read

நான் தேசிய விருது வாங்​கியதும் என் குடும்​பம், பத்​திரி​கை​யாளர்​களைத் தவிர சினிமா துறை​யில் இருந்து எனக்கு வந்த முதல் போன் கமல் அண்​ணா​விடம் இருந்​து​தான். அவர் போனில் வந்​ததும், “என்ன நடந்​துட்டு இருக்​கு?” என்​றார். “கி​ராண்ட் ஃபாதர்​’ங்கற படத்​தோட ஷூட்​டிங்ல இருக்​கேன்; நேஷனல் அவார்டு கிடைச்​சிருக்​கு” என்​றேன்.

அவர், “ஏன்?” என்​றார். “ஏன் எனக்கு கொடுத்​தாங்​கன்னு கேட்​கிறீங்​களா?” என்று கேட்​டேன். “ஏன் இவ்​வளவு லேட்டா கொடுத்​தாங்​கன்னு கேட்​கிறேன்” என்​றார். “இப்​ப​தான் என்​னை​யும் நடிகன்னு ஒப்​புக்​கிட்​டாங்க. உங்​களோட சேர்ந்து நடிச்​ச​தால பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்ங்கற மாதிரி...” என்​றேன்.

அவர், “நானும் நார்​தான். பூவுன்னா சீக்​கிரம் வாடி போயிரும். நார்னா கடைசி வரை எதை​யா​வது கட்டி கூட எடுத்​துக்​கிட்டு போகலாம்” என்​றார். என்ன ஒரு கற்​பனை என்று வியந்​தேன். அவருடன் ‘பாப​நாசம்’ படத்​தில் நடிக்​கும் வாய்ப்பு கிடைத்​தது. அது எப்​படி கிடைத்​தது என்​றால், ஏவி.எம் கார்​டன் தியேட்​டரில் அண்​ணாவை பார்க்க இயக்​குநர் ஜீத்து ஜோசப் வந்​தார்.

அவரிடம் என்னை காட்டி ‘இவரு திருநெல்​வேலி ஸ்லாங் நல்லா பேசு​வார்” என்று சொன்​னதும் அண்​ணா​வின் அந்த ஒரே சொல்​லுக்​காகவே அந்​தப் படத்​தில் டீ ​கடை பாய் கேரக்​டரில் நடிக்​கும் வாய்ப்பு கிடைத்​தது. தொடு​புழா​வில் போய் நடித்​தோம். அங்கு கமல் அண்ணா வந்​து​விட்​டால் நான் போய் கார் கதவைத் திறப்​பேன்.

கீழே இறங்​கியதும் வணங்​கு​வேன். படப்​பிடிப்பு முடிந்து அவர் செல்​லும்​போது கார் கதவை நான்​தான் மூடு​வேன். வேண்​டாம் என்று யார் சொன்​னாலும் கேட்க மாட்​டேன். இது நான் நேசிக்​கக் கூடிய மிகப்​பெரும் கலைஞனுக்​கு, கலை​ஞானிக்கு நான் செய்​யும் பணி​விடை என்று எடுத்​துக்​கொள்​ளலாம்.

‘பாப​நாசம்’ படத்​தில் பாய் கதா​பாத்​திரத்​துக்​காக அது போன்ற கெட்​டப்​பில் நான் நின்​றதும் என்னை அப்​படியே பார்த்​தார், “சலாம் அலைக்​கும்” என்​றார். நான் உடனே “வாஹ் அலைக்​கும் சலாம்” என்​றேன். “ஓஹோ... பாய் கேரக்​டர்னா எல்​லாத்​தை​யும் படிச்​சிரு​வி​யா?” என்று சொன்​னார்.

“இதெல்​லாம் உங்​களைப் பார்த்து கத்​துக்​கிட்​டது​தான்” என்​றதும் என்​னைத் தட்​டிக் கொடுத்​துக்​கொண்டு சென்​றார். இப்​படி அவருக்​கும் எனக்​கு​மான நெருக்​கம் வளர்ந்து கொண்​டிருந்​தது. ‘உத்தம வில்​லன்’ படத்​தில் கமல் அண்​ணா, என் குரு​நாதர் கே.​பாலசந்​தர் சார், கே.​விஸ்​வ​நாத் சார், தங்கை ஊர்​வசி...

இவர்​களின் காம்​பினேஷனில் நான் நடித்​தது எவ்​வளவு பெரிய பாக்​கி​யம்? அதன் படப்​பிடிப்​பில் கே.​பாலசந்​தர் ஐயா​விடம் “ஒழுங்கா நடிக்​கிறே​னா?” என்று கேட்​டேன். முதுகில் தட்​டி, “போடா படவா” என்​றார். கே.​விஸ்​வ​நாத் சாரும் டப்​பிங் தியேட்​டரில் பார்த்​து​விட்​டு, தெலுங்​கில் பேசி பாராட்​டி​னார்.

இது​போல கமல் அண்​ணா​வால் எனக்​குக் கிடைத்த பெயரும் பெரு​மை​யும் அவரையே சேரும். அவரின் தமிழ் மொழி புலமை​யும் வளமை​யும் எப்​போதும் என்னை வியக்க வைக்​கும். ‘உத்​தம​வில்​லன்’ டப்​பிங் நடக்​கும்​போது என் மகள் ஐஸ்​வர்யா அதில் ஒரு கதா​பாத்திரத்​துக்கு பேசி​யிருந்​தார்.

அவர், கமல் அண்​ணாவைப் பார்த்​ததும் நமஸ்​காரம் செய்​தார். “இருக்​கட்​டும் இருக்​கட்​டும்” என்​றார் அண்​ணா! “என்​னண்ணா இருக்​கட்​டுங்​கறீங்க. சின்ன வயசுல இருந்தே பெரியப்​பான்னு சொல்லி வளர்த்​திருக்கேன். இது என் பொண்​ணு” என்​றதும் “அப்​படியா வா வா” என்று அரு​கில் அழைத்​தார்.

அப்​போது மகள், “அப்பா ஒரு போட்டோ எடுங்க” என்​றார். நான் எடுத்​தேன். மகள், “இன்​னொரு முறை எடுங்க. ஷேக்​காகி​விட்​டது” என்​றதும், ‘நீங்க போனை கையாடல் (கை ஆடல்) பண்​ணிட்​டீங்க” என்​றார் கமல் அண்​ணா. கையாடல் என்​பது திருட்டு என்ற ஒரு பொருளைத் தரு​கிறது.

கை ஆடு​கிறது என்ற பொருளும் இருக்​கிறது. இப்​படி அவர் பேசுவதை ரசித்​துக் கொண்டே இருக்​கலாம். அவருடன் நடிக்​கும்​போது நிறைய சந்​தேகங்​கள் கேட்​கலாம். அதன் மூலம் கற்​றுக் கொள்​ளலாம். ஒரு​முறை ஒரு தனி​யார் தொலைக்​காட்​சி​யில் அவர் பேட்​டிக்​கொடுத்​துக் கொண்​டிருந்தார். அது லைவ் டெலி​காஸ்ட்.

அவரிடம் நேயர்​கள் கேள்வி கேட்​கலாம். நான் அந்த எண்​ணுக்​குப் போன் பண்​ணினதும் கிடைத்​து​விட்​டது. “நான் பாஸ்​கர் பேசறேன்” என்​றதும், “சொல்லு பாஸ்​கர்” என்​றார். “எப்​போதுமே இளமை​யாகவே இருக்​கீங்​களே எப்​படி?” என்று கேட்​டேன்.

அதற்​கு, “உங்​களை மாதிரி இருக்​கிறங்க கொடுக்​கிற ஆதர​வும் அன்​பும்​தான் காரணம்” என்று சொன்​னார். அடுத்த கேள்வி என்​றதும், “அதற்கு முன்​னால், உன்​னைப் பற்​றிச் சொல்​வதற்கு இந்த மேடையை பயன்​படுத்​திக் கொள்​கிறேன். இந்த பாஸ்​கர் என்​கிற தம்​பியை, அவருக்கு 15 வயதாக இருக்​கும்​போ​திருந்தே தெரி​யும்.

பிறகு தொடர்​பில் இல்​லை. டப்​பிங் ஆர்ட்​டிஸாகி, என் படங்​களி​லும் பேசி​யிருக்​கிறார். தசாவ​தா​ரம் படத்​தில் என்​னுடன் நடிக்க ஆரம்​பித்​தார். ஒரு நாள் செட்​டில், தெலுங்​கில் பேசிக்​கொண்​டிருந்​தார். அவருக்​குத் தெலுங்கு தெரி​யும் போலிருக்கு என்று நினைத்​தேன்.

சிறிது நேரத்​தில் சுத்​த​மான மலையாளத்​தில் பேசிக்​கொண்​டிருந்​தார். தென்​னிந்​திய மொழிகள் தெரி​யும் என்று நினைத்​தேன். பிறகு ‘தசாவ​தா​ரம்’ இந்தி டப்​பிங்​கிலும் அவரே போய் பேசி​விட்டு வந்​தார். எனக்​குப் பெரு​மை​யாக இருந்​தது. சுருக்​க​மாகச் சொல்ல வேண்​டும் என்​றால் என்​னில் பாதி இந்த தம்​பி” என்​றார்.

எனக்கு கண் கலங்​கி​விட்​டது. பிறகு ஒரு பத்​திரி​கை​யிலும் என்னை பற்றி சொல்லி இருந்​தார். “ரங்​கா​ராவ் இல்​லை, சுப்பையா இல்​லைன்னு வருத்​தப்​படறோமே இன்​னைக்​கு. இந்த எம்​.எஸ்​.​பாஸ்​கர் இருக்​கார். எந்த வேடத்​தில் வேண்​டு​மா​னாலும் நடிப்​பார்.

ஒரு கலைஞனை இருக்​கும்​போதே நல்ல வேடங்​கள் கொடுத்து கவுர​வித்​தால், அவர் இறப்​புக்​குப் பிறகு வருத்​தப்பட வேண்​டிய அவசி​யமில்​லை” என்​றார். அவரை நேராகச் சந்​தித்​த​போது, “என்​னைப் பற்றி இப்​படி சொல்​லிருக்​கீங்​களே, ரொம்ப நன்​றிண்​ணா” என்​றேன். “உண்​மை​யை​தான சொல்​லிருக்​கேன்​” என்​றார்.

எப்​போது என்​னைப் பார்த்​தா​லும் வாஞ்​சையோடு பேசு​வார், அன்​பாக விசா​ரிப்​பார். தொழிலை எப்​படிச் செய்ய வேண்​டும் என்​பதை அவரிடம் கற்​றுக்​கொள்ள முடி​யும். அவருக்​கும் எனக்​கு​மான பந்​தம் தொடர்​கிறது. நான் நேசிக்​கிற மிகச்​சிறந்த கலை​ஞானி. நான் கண்ட கலைக்​கட​வுள் அவர்.

அவருடன் இணைந்து தொடர்ந்து நடிக்க வேண்​டும் என்ற ஆசை எனக்கு இருக்​கிறது. சிவாஜி அப்பா மீது நான் எவ்​வளவு பெரிய வெறியனோ, அந்​தளவுக்கு கமல் அண்​ணா​வும் சிவாஜி அப்பா மீது வெறியர். சிவாஜி அப்​பா, கமல் அண்ணா மீது நானும் வெறிய​னாக இருக்​கிறேன். இருப்​பேன்.

(திங்கள்தோறும் பேசுவோம்)

‘என்னில் பாதி இந்த தம்பி..!’ - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 25
கண்​டேன் கலை​ஞானியை! - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 24

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in