

எனக்கு 14, 15 வயது இருக்கும் போது சென்னை அருகிலுள்ள கோவளத்துக்குச் சென்றோம். அங்கு ‘அன்னை வேளாங்கண்ணி’ என்ற படத்தின் படப்பிடிப்பு. அதில் ஒரு பாடலுக்கு நடனமாட இளம்பெண் தேவை என்று நடன இயக்குநர் தங்கப்பன் மாஸ்டர் கேட்டிருந்தார்.
அதில் ஆடுவதற்கு என் அக்கா ஹேமமாலினி தேர்வாகி இருந்தார். அதன் படப்பிடிப்புக்கு நாங்களும் சென்றோம். நான், என் தம்பி இன்னும் சிலரும் அங்குள்ள பீச்சில் விளையாடிக் கொண்டிருக்கும் போது, பளிச்சென்று மின்னல் மாதிரி ஓர் உருவம் கடந்து சென்றது.
அந்த இருட்டிலும் பளீர் என்று தெரியக் கூடிய அளவில் அவருடைய கலர் இருந்தது. அவர் யாரென்று தெரியாது. அவர் கமல் அண்ணா என்பதும் தங்கப்பன் மாஸ்டரிடம் உதவி நடன இயக்குநராக பணியாற்றுகிறார் என்பதும் பிறகுதான் தெரிந்தது.
படப்பிடிப்பு முடிந்து வந்துவிட்டோம். பிறகு என் சகோதரி டப்பிங் கலைஞர் ஆகிவிட்டார். அப்போது கமல் அண்ணாவின் ‘விக்ரம்’ படத்தின் ‘வனிதாமணி...’ பாடலுக்கு முன் வரும் ‘கண்ணே தொட்டுக்கவா, கட்டிக்கவா’ என்ற வசனத்துக்குக் குரல் கொடுத்தது கமல் அண்ணாவும் என் அக்காவும். அங்கு நானும் சென்றிருந்தேன். அப்போது அவர் பெரிய நடிகராகிவிட்டார் என்ப தால் நாங்கள் பார்ப்போம், பேசிக்கொள்ளமாட்டோம்.
நான் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என்பதால் என்னை அவரிடம் அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை. பிறகு ஒரு நாள், நாங்கள் டப்பிங் படங்களுக்குப் பேசிக் கொண்டிருந்தபோது, அவர் ஏதோ ஒரு படத்துக்கு டப்பிங் பேசுவதற்காக வந்தார். என்னை பார்த்துட்டு, “என்ன நீ டப்பிங்லாம் பேசறியா?” என்று கேட்டார்.’ ஆமாண்ணா’ என்றேன்.
பிறகு சென்றுவிட்டார். அதற்குப் பிறகு நாச்சியப்பன் என்ற ஒரு புரொடக்சன் மானேஜர் அழைத்தார். ‘தேவர் மகன்’ படத்தில் ராமு மச்சானுக்குப் பேச வேண்டும் என்றார். “மதுரை ஸ்லாங்ல பேசணும்” என்றார். அப்போது என் பங்காளி வீரமணிதான் டப்பிங் பொறுப்பாளர். நான் சபரிமலைக்கு மாலை போட்டிருந்ததால் பெரிய மீசை வைத்திருந்தேன். ஆளும் முரட்டுத்தனமாக இருந்தேன். நான் போய் டப்பிங் பேசிவிட்டு வந்தேன்.
கமல் அண்ணா பாராட்டினார். இதையடுத்து ‘மகாநதி’ படத்தில் வாட்ச்மேன் கதாபாத்திரத்துக்கு பேசினேன். அதையும் பாராட்டினார். இப்படி அவரிடம் பாராட்டு வாங்கிக் கொண்டிருக்கும் போது, நான் கொஞ்சம் கொஞ்சமாக நடிக்க ஆரம்பித்தேன். ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ தொடரில் நடித்துக் கொண்டிருந்த போது ஒரு எபிசோடில் மருந்து குடித்ததும் என் உடல் தங்கமாகிவிடுவது போல காட்சி. அதற்காக உடல் முழுவதும் கோல்டு பெயின்ட் அடித்தார்கள்.
அப்படி நடித்ததால் எனக்கு மூன்று நாட்கள் வியர்க்கவே இல்லை. வியர்வை துவாரங்கள் பெயின்டால் அடைபட்டுவிட்டது. ஸ்டீம் பாத் எடுக்க நேரமில்லாத காரணத்தால் ஏதோ ஒரு எஸ்டிடி பூத்துக்குள் சென்று அந்த வெக்கைக்குள் அதிக நேரம் நின்று வியர்வையை வரவைத்து சரி செய்தேன். இப்படித் தங்க பெயின்ட் அடித்து நடித்த எபிசோடை எதேச்சையாக, கமல் அண்ணா பார்த்திருக்கி றார். என்னை அவர் ஆபீஸுக்கு வரச் சொன்னார்கள்.
ஆழ்வார்பேட்டை அலுவலகத்துக்கு சென்றேன். அவர் வந்ததும் வணக்கம் வைத்தேன். அவர் என்னைப் பார்த்துவிட்டு ஒன்றும் பேசாமல் போய்விட்டார். பிறகு அவர் அறைக்கு அழைத்தார்கள். போனேன். உள்ளே நுழைந்த தும் மறுபடியும் வணக்கம் வைத்தேன். திரும்பிப் பார்த்தவர், “திமிரா?” என்று கேட்டார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. கை,கால்கள் நடுங்க ஆரம்பித்துவிட்டன. “நாம ஒரு தப்பும் பண்ணலையே?” என்று நினைத்தேன்.
“உடம்பு முரட்டுத்தனமா இருக்கிற திமிரா?” என்று மீண்டும் கேட்டார். நான், “என்ன அண்ணா, நான் என்ன பண்ணினேன்?” என்றேன். “என்ன பண்ணுனியா? அந்த எபிசோடை பார்த்தேன். உடம்பெல்லாம் பெயின்டு. கைய தூக்கும் போது ஒட்டுது. இப்படியா ரிஸ்க் எடுக்கறது? இது எவ்வளவு பெரிய டேஞ்சர் தெரியுமா, ஒனக்கு?” என்று கோபமாகச் சொன்னார்.
“ஆமா. மூணு நாளா வியர்க்கவே இல்லை” என்று சொன்னேன். “எப்படி வியர்க்கும்?” என்றவர், நடிகர் ஒருவரின் பெயரைச் சொல்லி, அவருக்கு இப்படி பெயின்ட் அடிச்சுவிட்டாங்க, அவர் இறந்தே போயிட்டார் தெரியுமா, உனக்கு. இனிமே இந்த வேலையெல்லாம் செய்யாத” என்றார். “சரிங்கண்ணா” என்றேன். “காபி சாப்டுட்டு போ” என்றார். சரி என்று வந்தேன்.
வெளியில் வந்ததும் அவர் கோபப்பட்டது எனக்குத் தெரியவில்லை. அவர் நான் நடித்த அந்த எபிசோடை பார்த்தது, என் மீது அவ்வளவு அக்கறை கொண்டு, அழைத்து கண்டித்த அந்த அன்பு எனக்கு பெரிதாகத் தெரிந்தது. அதற்குப் பிறகு அவர் மீதான பாசம் பல மடங்கு அதிகமாகி விட்டது. பிறகு ‘தசாவதாரம்’ படத்தில் அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. டி.ஆர்.கார்டனில் படப்பிடிப்பு.
பொன். குமரன் என்ற அசோசியேட்டிடம் நான் பேசிக்கொண்டிருந்தபோது, “சார் வர்றார்” என்றார் அவர். திரும்பிப்பார்த்தால் அச்சு அசலாக வெள்ளைக்காரர் போல வந்தார் ஒருவர். அந்த பிளட்சர் கேரக்டர். எனக்கு ஆச்சரியமாக இருந்தது, எப்படி இப்படி அச்சு அசலாக வெள்ளைககரராகவே மாறினார் என்று.
அவருக்கு வழக்கம்போல வணக்கம் வைத்துவிட்டு நின்றேன். “எப்ப வந்த?” என்று கேட்டுவிட்டுச் சென்றுவிட்டார். படத்தில் அவருக்கு ஜீப் ஓட்டும் கதாபாத்திரம் எனக்கு.நான் ஜீப் ஓட்டுகிறேன். என் அருகில் கமல் அண்ணா வெள்ளைக்காரர் தோற்றத்தில் இருக்கிறார்.
பின்னால் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் இருந்தார். முன்னால் செல்லும் வண்டியில் கேமரா இருக்கி றது. இப்போது வண்டியை போரூர் சாலையில் ஓட்டிக்கொண்டு சென்றேன். “இன்னைக்கு உனக்குதான் ஃபேன்ஸ்” என்றார் கமல் அண்ணா. “சும்மாருங்க... நீங்க இருக்கும் போது எப்படி?” என்று சொல்லிவிட்டு ஜீப் ஓட்டிக் கொண்டிருந்தேன்.
“நீ பாரு” என்று சொல்லிவிட்டு ஜீப்பில் அமர்ந்து கொண்டார். போரூர் ரவுண்டானா வரை சென்று யு-டர்ன் பண்ணி போகும்போது, ஒரு இடத்தில் நிறுத்தி னோம். அப்போது சைக்கிளில் வந்த ஒருவர் என்னைப் பார்த்துவிட்டு, “இதோடா பட்டாபி” என்று சொல்லிவிட்டுப் போனார். இன்னும் சிலரும் அப்படியே சொல்லிவிட்டுப் போனார்கள். மேக்கப்பில் இருந்த கமல் அண்ணாவை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை.
“நான் சொன்னேன்ல” என்றார் அவர். அந்தளவுக்குத் தனது ஒப்பனை மீது அவருக்கு நம்பிக்கை இருந்தது. சரியாக நடித்துவிட்டால் அப்படி பாராட்டுவார். நாடக நடிகர்களை எல்லாம் அழைத்து நடிக்க வைப்பார். அதற்கு உதாரணம், கள்ளபார்ட் நடராஜன் அண்ணன். ‘தேவர் மகன்’ படத்தில் அவரை நடிக்க வைத்தார். அவரை போல பலரை நடிக்க வைத்திருக்கிறார்.
சமீபத்தில் ‘தேவர் மகன்’ படத்தை ரீ ரிலீஸ் செய்வதற்காக மெருகேற்றும் போது கள்ளபார்ட் நடராஜன் கேரக்டருக்கு என்னைப் பேச வைத்தார்கள். “ஏற்கெனவே ராமு மச்சானுக்கு பாஸ்கர் பேசியிருக்காரே” என்று யாரோ கமல் அண்ணாவிடம் சொன்னதும், “பரவாயில்லை, அது யங் பாஸ்கர் பேசினது, இது வேற பாஸ்கர்” என்று வேடிக்கையாகச் சொன்னார். ஆம்.அது 1991ம் ஆண்டு.
(திங்கள்தோறும் பேசுவோம்)