மகள் + மருமகன் கொடுத்த எங்கள் உயிர் - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 37

மகள் + மருமகன் கொடுத்த எங்கள் உயிர் - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 37
Updated on
2 min read

எனது திரு​மணம் 1993-ம் ஆண்டு நவ.19-ல் நடை​பெற்​றது. 1994-ம் ஆண்டு செப்​.6-ல் எனக்கு மகள் பிறந்​தார். எங்​களின் முதல் வருட திருமண நாளை குழந்​தை​யுடன்​தான் கொண்​டாடினோம். மகப்​பேறு மருத்​து​வ​மனை​யில் பிறந்த மகளை தூக்​கியது​மே, “அம்​மா, மாமா பாருங்க” என்​று​தான் சொன்​னேன்.

ஏனென்​றால், என் அக்கா குழந்​தைகளைத் தூக்​கித் தூக்கி அப்​படி சொல்​வது வழக்​கம் என்​ப​தால் என் மகளை​யுமே வாய்​தவறி அப்​படிச் சொல்லி விட்​டேன். பிறகு சுதா​ரித்​து, “அப்பா பாருங்க” என்​றேன். அப்​போது பார்க்​கும் போது பொம்மை மாதிரி இருந்​த​தால், இப்​போது வரை மகளை பொம்மை என்​று​தான் அழைப்​பேன்.

அப்​போது நான் டப்​பிங் ஆர்ட்​டிஸ்ட்​டு​தான். நடிப்பு பக்​கம் வரவில்​லை. குழந்​தைக்கு சிறு​வய​திலேயே நடனத்​தில் விருப்​பம். மூன்​று, நான்கு வயதிலேயே நன்​றாக ஆடு​வார். நாங்​கள் கைதட்​டு​வோம். பிறகு ஸ்கூலில் சேர்த்​தோம். நன்​றாகப் படித்​தார். அவர் படிக்​கும் ஸ்கூலில் நடக்​கும் கலை நிகழ்ச்​சிகளில் அவர்​தான் கோரியோகி​ராபர்.

அவர் பத்​தாம் வகுப்பு படிக்​கும்​போது, என் முன்​னால் அங்​கும் இங்​கும் ஏதோ குழப்​பத்​தோடு அலைந்து கொண்​டிருந்​தார். எதையோ என்​னிடம் சொல்ல வரு​கிறார் என்​பது புரிந்​தது. உடனே அழைத்​து, “என்ன விஷ​யம்? உங்​களை யார் லவ் பண்​றாங்​க?” என்று கேட்​டேன். அவர் அதிர்ச்​சி​யாகப் பார்த்​தார்.

அப்பா உன் வயதை கடந்​து​தான் வந்​திருக்​கிறேன் என்று சொன்​னேன். “அது என் ஃபிரண்​டு, என்னை பிடிச்​சிருக்​குன்னு சொன்​னான்” என்று சொல்​லும்​போதே, அழு​வது போல முகம் மாறியது. “இதுக்கு ஏன் அழணும்? ஒரு ஆணுக்​குப் பெண்​ணைப் பிடிப்​பதும் பெண்​ணுக்கு ஆணைப்​பிடிப்​பதும் சிவன் காலத்​தில் இருந்தே நடக்​குது.

இதில் வருத்​தப்பட ஏது​மில்​லை” என்​றேன். பிறகு, “இதெல்​லாம் இந்த வயசுல வரு​வது​தான்; விடும்​மா” என்று சொல்லி விட்​டேன். பிறகு அந்​தப் பேச்சை எடுக்​க​வில்​லை. நன்​றாகப் படித்​தார். நீச்​சல், குதிரையேற்​றம் போன்ற பயிற்​சிகளைப் பெற்​றார்.

நான் நடித்த ‘பயணம்’ படம் வெளி​யாகி இருந்த நேரத்​தில், லயோலா கல்​லூரி யில் மகளை விஸ்​காம் சேர்ப்​ப​தற்​காகச் சென்​றிருந்​தேன். அப்​போதைய சபா​நாயகர் ஜெயக்​கு​மார், சிபாரிசு கடிதம் கொடுத்​திருந்​தார். அதைக் கொடுத்​ததும் உள்ளே வரச் சொன்​னார்​கள். நானும் என் மகளும் சென்​றோம்.

என்​னைப் பார்த்​ததும் அங்​கிருந்த ஃபாதர், “ஸ்​தோத்​திரம் ஃபாதர்” என்று சொன்​னார். நானும் அப்​படியே சொன்​னேன். “பயணம் படத்​துல உண்​மை​யிலேயே ஃபாதரா வாழ்ந்​திருந்​தீங்க. அந்த பிரேயர் எல்​லாம் அவ்​வளவு அழகா சொல்லி இருக்​கீங்க. நல்லா இருந்​தது” என்​றவர், “உங்க மகளுக்​காக வந்​தீங்​களா?” என்று கேட்​டார்.

ஆமா என்​றேன். உடனே இடம் கொடுத்​தார்​கள். அங்கு படித்​தார். பிறகு அவரும் டப்​பிங் ஆர்ட்​டிஸ்ட் ஆனதை ஏற்​கெனவே சொல்​லியிருக்​கிறேன். ஒரு நாள், வெளி​யில் சென்​று​விட்டு வீட்​டுக்​குப் போன​போது, என் மனை​வி, “அகுல் வந்​தார். மகள் ஐஸுவை திரு​மணம் பண்​ணிக்​கிறதா கேட்​கிறார்” என்​றார்.

நான் யோசிக்​கவே இல்​லை, சரி என்று சொல்​லி​விட்​டேன். சின்ன வயதில் என் மகள், தன்​னைப் பிடித்​திருக்​கிறது என ஒரு ஃபிரண்ட் சொன்​ன​தாக சொன்​னாரே, அதே பையன்​தான் அகுல். அவர்​களின் நட்​பு, காதலாக மாறி​யிருக்​கிறது. அவர்​கள் வீட்​டிலும் பேசினோம். எல்​லோரும் தங்​க​மான மனிதர்​கள்.

திரு​மணம் செய்து வைத்​தோம். மனம் ஒற்ற தம்​ப​தி​ய​ராக வாழ்ந்து வரு​கிறார்​கள். இன்று என் மாப்​பிள்ளை என்ன சொன்​னாலும் நான் மறுப்​பின்றி சம்​ம​திப்​பேன். மிக பொறுப்​பானவர். நான் என் மகளிடம் எப்​போதும் எனக்கு பேத்​தி​தான் வேண்​டும் என்​பேன்.

நான் ஷீர்டி பாபா​விட​மும் வேண்​டினேன். பிறகு இயக்​குனர் தம்பி ஏ.எல்​.​ விஜய்​யின் படத்​துக்​காக வெளி​நாடு சென்று திரும்​பிய​போது, என் மகள் தாய்மை அடைந்​திருந்த செய்தி கிடைத்​தது. எல்​லை​யற்ற மகிழ்​வடைந்​தேன். பேத்​தி​தான் பிறப்​பார் என்று எதிர்​பார்ப்​பில் இருந்​தேன்.

பிறகு நாட்​கள் செல்ல செல்ல என் எதிர்​பார்ப்பு கூடு​தலானது. 2024-ம் ஆண்டு அக்​டோபர் 31-ம் தேதி, தீபாவளி அன்று மகளை மருத்​து​வ​மனை யில் சேர்த்​தோம். மதி​யம் 12 மணிக்கு ஒரு நர்​ஸ், “உங்​களுக்கு பேத்தி பிறந்​திருக்​கார்” என்று சொன்​னார்.

எனக்கு வானத்​தில் பறப்​பது போல இருந்​தது. அவருக்கு அகிரா என்று பெயர் வைத்​துள்​ளோம். அவர்​தான் இப்​போது எங்​கள் அனை​வரின் உயிர். என் பேத்தி தினம் காலை மாலை வீட்​டில் இருக்​கும் பாபா சிலை முன்பு நின்று கும்​பிட்டு விட்டு வரு​வார்.

நான் பா​பா​விடம் வேண்​டிக்​கேட்டு பிறந்​த​தால் பா​பா​விடம் பக்​தி​யாக இருக்​கிறார் என நினைத்​துக்​கொள்​கிறேன். இப்​படி எங்​கள் வாழ்க்​கை, மகள் + மரு​மகன்= எங்​கள் உயிர்​ பேத்​தி என்​ற நிலை​யில்​ நல்​லபடி​யாகச்​ சென்​று​கொண்​டிருக்​கிறது.

(திங்​கள்​தோறும் பேசுவோம்)

மகள் + மருமகன் கொடுத்த எங்கள் உயிர் - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 37
எனக்​காக வந்​தவர் - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 36

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in