

நான் டப்பிங் தொழிலுக்கு வந்ததில் இருந்து எனக்குப் பழக்கமானவர் காரை கணேசண்ணன். கருப்பான உருவம். எப்போதும் வேஷ்டி, சட்டை. ஒரு சைக்கிள். இதுதான் அவர் அடையாளம். மயிலாப்பூரில் ஆஞ்சநேயர் கோயிலுக்கு அருகில் உள்ள தெருவில் குடியிருந்தார்.
அவருக்கு 5 குழந்தைகள். காலையிலேயே சைக்கிளில் ஸ்டூடியோக்களுக்கு கிளம்பிவிடுவார். ஒவ்வொரு ஸ்டூடியோவாக சென்று வாய்ப்பு தேடுவார். நாள் முழுவதும் வேலை பார்த்தால் நூறு ரூபாய் கிடைக்கலாம். இதில் அவர், வீட்டு வாடகை கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு படிப்பு செலவை பார்க்க வேண்டும். குடும்ப செலவையும் ஓட்ட வேண்டும். ஒரு கஷ்ட ஜீவனம் நடத்திக் கொண்டிருந்தார்.
நான் அவரை அண்ணா என்று அழைப்பேன். நகைச்சுவையாக பேசுவதில் வல்லவர். டைமிங் காமெடி என்கிறார்களே, அது அவருக்கு மிகவும் இயல்பாக வரும். அவர் இருக்கும் இடம் எப்போதும் கலகலப்பாக இருக்கும். எவ்வளவு கஷ்டம் என்றாலும் முகம் காட்டிக் கொடுக்காது. அவராக சொன்னால்தான் உண்டு. தன்னுடைய அனுபவங்களை அவர் அதிகம் கூறியிருக்கிறார். ஒரு முறை அவர் தந்தைக்கு பாம்பு கடித்த அனுபவத்தை சொன்னார்.
காரைக்குடி அருகில் உள்ள அவர் சொந்த ஊரில் இரவில் சாமான் வாங்குவதற்காக கடைக்குச் சென்றிருக்கிறார், அவர் அப்பா. அப்போது ஏதோ ஒன்று காலை கடித்திருக்கிறது. வீட்டுக்கு வந்தால் உடல் முழுவதும் மயிர்க்கால்களில் வியர்வை போல பொட்டு பொட்டாக ரத்தம். அதிர்ச்சி அடைந்த கணேசண்ணன் உடனடியாக சைக்கிளின் பின்னால் அவரை அமர வைத்து நாட்டு வைத்தியரிடம் கூட்டிச் சென்றிருக்கிறார்.
பார்த்துவிட்டு, “ரத்தவிரியன் பாம்பு கடிச்சிருக்கு” என்று வைத்தியர் சொன்னதாக கூறினார். அப்படியொரு பாம்பு வகையை நான் கேள்விப்பட்டதே இல்லை. “கண்ணாடி விரியனாக இருக்கும்” என்றேன். “இல்லை ரத்தவிரியன்தான்” என்றார். பிறகு மருந்து கொடுத்து காப்பாற்றி விட்டார்கள் அவரை. இப்படி கேள்விப்படாத பல விஷயங்களை அவர் பேசுவார்.
ஒரு நாள் டப்பிங் தியேட்டருக்கு வந்தவர் இறைவனை திட்டிக் கொண்டிருந்தார். “உன்னைய கும்பிட்டு எதுக்கு? உன்னைய ஏன்யா நான் கும்பிடணும்?” என்று திட்டிக்கொண்டிருந்தார். “நான் என்னண்ணே, என்னாச்சு?” என்றேன். “ஒண்ணுமில்ல, போயா” என்றார்.
பிறகு மீண்டும் கேட்கும்போது, அப்போது அதிகமாக டப்பிங் படங்கள் பண்ணிக் கொண்டிருந்த தயாரிப்பாளர் ஒருவரின் பெயரைச் சொல்லி அவரைப் பார்த்ததாக சொன்னார். “ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது பார்த்து பண்ணுங்கன்னு கேட்டேன். சரி, அடுத்த மாசம் ரெண்டு டப்பிங் படம் ஆரம்பிக்கிறேன். 15 நாள் ஒரு படம், 15 நாள் இன்னொரு படம்.
கூப்பிடறேன்னு சொன்னார். ஒரு நாளைக்கு 15 ரூபா கன்வேயன்ஸ் கிடைச்சா, ரெண்டு மாசம் குடும்பத்தை ஓட்டிரலாம்னு நினைச்சேன்யா! சரின்னு கிளம்பும் போது ‘பிலிம் சேம்பர்ல நம்ம படம் புரொஜக் ஷன் இருக்கு, சாயங்காலம் வந்துரு கணேசன்னு அவர் கூப்பிட்டார். சரி, அடுத்த மாசம் வேலை கொடுக்க போற புண்ணியவான், கூப்பிடறாரேன்னு போயிட்டேன். படம் முடிஞ்சு வெளிய வந்தேன். அவர் நாலஞ்சு விநியோகஸ்தர்கள்கிட்ட பேசிட்டிருந்தார்.
நான் அவர் கவனிக்காத மாதிரி ஓரமா ஒதுங்கி போயிட்டிருந்தேன். அப்ப ‘இங்க வா கணேசா”ன்னு கூப்பிட்டார். போனேன். ‘படம் எப்டியிருக்குன்னு சொல்லவே இல்லையே?’ என்று கேட்டார். அங்கதான்யா என் வாயில சனி சம்மணம் போட்டு உட்கார்ந்திருந்தான். ‘என்னைக் கூப்பிட்டு படம் எப்படியிருக்குன்னு ஏன்யா அந்தாளு கேட்டாரு? நல்லாருக்கா, நல்லாயில்லையான்னு திரும்பவும் கேட்டார்.
‘நல்லா இல்லைனா நீங்க திட்டுவீங்க, நல்லாயிருக்குன்னா ஆண்டவன் திட்டுவான்? நான் என்ன பண்றதுன்னு தெரியல’னு சொன்னேன். அவ்வளவுதான். அடுத்த மாசம் இருக்கிறதா சொன்ன இரண்டு பட வேலையும் எனக்கு இல்லாம போச்சு” என்றார். அவருக்குப் பொய் சொல்லத் தெரியாது. வெள்ளந்தியான மனிதர்.
அப்போது தேவநாராயணன் சார் என்று டப்பிங் ரைட்டர் இருந்தார். அவர் குரூப்பில் கணேசண்ணன் வழக்கமாகப் பேசிக் கொண்டிருந்தார். ஒரு நாள், “தாஸ் அண்ணன் கூப்பிட்டால் வருமானம் பரவாயில்லாம இருக்கும்” என்று சொன்னார்.
தாஸ் அண்ணன் என்று அவர் சொன்னது பிரபல வசனகர்த்தா ஆரூர்தாஸ் ஐயாவை. பிறகு அவரிடம் பலநாள் கேட்டு, ஆரூர்தாஸ் ஐயா ஒருநாள் வரச் சொல்லிவிட்டார். ‘அப்பாடா ஆண்டவன் கண்ணைத் திறந்துட்டான்யா!’என்று சந்தோஷப்பட்டார். அன்று, சுரேஷ் மகாலில் டப்பிங். கணேசண்ணனும் வந்துவிட்டார்.
நாங்கள் ஆரம்பகாலத்தில் குரூப் வாய்ஸ் பேசுவது, பிட் வாய்ஸ் கொடுப்பதைத்தான் செய்துகொண்டிருந்தோம். ஒரு 25 டப்பிங் ஆர்டிஸ்ட் இருப்போம். எங்கள் எல்லோருக்குள்ளும் அருமையான உறவு இருந்தது. முறை சொல்லி அழைத்துக்கொள்வோம். ஆண், பெண் எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்போம்.
சாயங்காலம் ஆறு மணி வரை டப்பிங் என்று சொல்லிவிட்டார்கள். திடீர் என்று தேவநாராயணன் மகன் மோகன் போன் செய்து, “மாலை ஆறு மணிக்கு ஆனந்த் ஹவுஸில் டப்பிங். வந்துருங்க” என்று சொன்னார் கணேசண்ணனிடம். இதைக் கேட்டதும் அவருக்குச் சந்தோஷம்.
ஆறு மணிக்கு இங்கு முடிந்தால், 15 ரூபாய் கன்வேயன்ஸ் கிடைக்கும். பிறகு அங்கு சென்றால் 15 ரூபாய் கன்வேயன்ஸ் கிடைக்கும். 30 ரூபாய் கிடைத்தால் மகிழ்ச்சி என்று நினைத்துக்கொண்டார். இப்போது ஆரூர்தாஸ் ஐயா கம்பெனியில் 9 மணி வரை டப்பிங் என்று சொல்லிவிட்டார்கள். இதைக் கேள்விப்பட்டதும் அவருக்கு ஒரு மாதிரியாகிவிட்டது. உடனே இறைவனைத் திட்ட ஆரம்பித்து விட்டார்.
பிறகு தேவநாராயணன் சார் மகன் மோகனுக்கு போன் பண்ணி, “9 மணிக்கு மேல் வருகிறேன்” என்று சொன்னார், அவர் கேட்கவில்லை. கண்டிப்பாக 6 மணிக்கு வரச் சொல்லி விட்டார்.
இதனால் ஆருர்தாஸ் டப்பிங்கில் இருந்து 6 மணிக்கு அங்கு சென்று விட்டார். 6 மணிக்கு மேல் குரூப் சவுண்ட் கொடுப்பதற்கு எல்லோரையும் அழைத்தார்கள். கணேசண்ணன் இல்லை. “அவர் எங்கே?” என்று கேட்டதும் விஷயத்தைச் சொன்னார்கள். “இனிமேல் அவரைக் கூப்பிட வேண்டாம்” என்று சொல்லிவிட்டார் ஆருர்தாஸ்.
பிறகு நாங்கள், ‘ஜீசஸ் ஆஃப் நாசரேத்’ டெலிபிலிமுக்காக டப்பிங் பேசச் சென்றிருந்தோம். அங்கு கணேசண்ணன் வந்திருந்தார். அப்போது அவரிடம் ஒருவர், “தாஸ் அண்ணன் கம்பெனியில உங்களுக்குப் பிரச்சினையா? கூப்பிடறதில்லையாமே?” என்று கேட்டார்.
“தாஸ் அண்ணன் கூப்பிடலைன்னா என்ன? ஏசண்ணேன் கூப்டிருக்கார்ல, போயா” என்று டைமிங்காகச் சொன்னார். எல்லோரும் சிரித்துவிட்டோம். வைரமுத்து சார் டப்பிங் படங்கள் பண்ணிக் கொண்டிருந்தபோது, கணேசண்ணன் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினார். அப்போது யாரோ ஒருவர், ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டை வைரமுத்துவிடம் பரிந்துரை செய்திருக்கிறார்.
அவரின் பெயரைச் சொல்லி, ‘ஆள் எப்படி?’ என்று கணேசனிடம் கேட்டிருக்கிறார். ‘நல்ல மனுஷன்’ என்று சொல்லியிருக்கிறார் கணேசண்ணன். உடனே அவரை கூப்பிட்டு டப்பிங் பேசச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அவர் சரியாக பேசவில்லை. பலமுறை எடுத்துப் பார்த்தும் சரியில்லை.
“என்ன கணேசன், நல்ல மனுஷன்னு சொன்னீங்க?” என்று வைரமுத்து கேட்டார். “இப்பவும் சொல்றேன், நல்ல மனுஷன்னுதான் சொன்னேன், நல்லா பேசுவாருன்னு சொல்லவே இல்லியே” என்று சொன்னார் அவர். இப்படி ஜாலியாக இருக்கும் அவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் திடீரென செயலிழந்து விட்டன! அடையாறு அருகே உள்ள மருத்துவமனை ஒன்றில் அவரை சேர்த்திருந்தார்கள்.
அவரை பார்க்க இன்னொரு டப்பிங் இன்சார்ஜ் ஆன லட்சுமணன் சென்றார். அங்கிருந்த நர்ஸ், “யாருங்க நீங்க? அவருக்கு சாப்பிடறதுக்கு எதுவும் கொடுக்கக் கூடாது. வேணும்னா இட்லி மட்டும் கொடுங்க” என்று சொல்லி விட்டார்! இவர் போய் வெறும் நான்கு இட்லியை மட்டும் வாங்கி வந்து கொடுத்து விட்டு சென்று விட்டார்! கணேசண்ணன், பார்சலைப் பிரித்தார், உள்ளே சட்னி, சாம்பார் எதுவம் இல்லை.
அப்போது கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்காக ஒரு புரோக்கர் அவரை வந்து பார்த்தார். “அண்ணே உங்களுக்கு கிட்னி கொடுக்க ஆள் ரெடி, வேலூரில் ஆபரேஷன் பண்ணணும்.
உங்களுக்கு கிட்னி கிடைச்சிரும். 25 ஆயிரம் ரூபாய் இருந்தா பிரச்சினை முடிஞ்சிரும்” என்று பேரம் பேசினார். அப்போது, “யோவ், இட்லிக்கு சட்னி வாங்கவே முடியாம இருக்கேன். இந்த நேரத்துல வந்து கிட்னிக்கு, 25 ஆயிரம் ரூபா கேட்கிறே?” என்று கிண்டலாகச் சொன்னார்.
இப்படி எப்போதும் ஜாலியாக பேசிக் கொண்டிருந்தவர் பிறகு காலமாகி விட்டார். அவர் மறைவு என்னால் மறக்க முடியாதது. என்னுடைய நகைச்சுவை நடிப்பு மேம்படுவதற்கு அவரும் முக்கியமான காரணம்.
(திங்கள்தோறும் பேசுவோம்)