மச்சான் மயில்சாமி - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 20

மச்சான் மயில்சாமி - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 20
Updated on
3 min read

இந்த வாரம் நான் பார்த்த கர்ணனை பற்றிச் சொல்கிறேன். வள்ளல் குணத்துக்கு கர்ணனைச் சொல்வார்கள். அவன் இருப்பதை அள்ளிக் கொடுப்பவன் என்பதை கேள்விபட்டிருப்போம். நேரில் யாரும் கண்டதில்லை. ஆனால் நேரில் நான் கண்ட கர்ணனை நினைத்து இப்போதும் வியந்து கொண்டிருக்கிறேன்.

நான் டப்பிங் ஆர்ட்டிஸ்டாக இருந்த போது அண்ணன் சத்யராஜ், அம்பிகா, ராஜேஷண்ணன் நடித்து 1987-ம் ஆண்டு வெளியான ‘மக்கள் என் பக்கம்’ படத்தில் சின்ன ரோலில் நடித்தேன். விஜயா கார்டனில் அதன் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. கே.கண்ணன் வில்லனாக நடித்தார். அவரை 'கவர்ச்சி வில்லன்' கண்ணன் என்று சொல்வார்கள். படத்தில் அவருக்கு அசிஸ்டென்டாக நான் வருவேன். எனக்கு மொத்தமே நான்கைந்து டயலாக்தான் வரும்.

அப்போது அங்கு எங்கோ பார்த்த முகம் போல ஒரு பையன் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தான். துறுதுறுவென்று சுற்றிக் கொண்டிருந்தவனிடம், “என்னப்பா இங்க என்ன பண்றே?” என்று கேட்டேன். “நான் ஜூனியர் ஆர்டிஸ்டா வந்தேன்” என்று சந்தோஷமாக சொன்னான்.

இதை இவ்வளவு சந்தோஷமாக சொல்கிறானே? என்று எனக்கு அவன் மீது வியப்பு வந்தது. அப்போதிருந்து பழக ஆரம்பித்து, ‘வாடா, போடா’ என்று அழைக்கும் அளவுக்கு நெருக்கமாகி, பிறகு ‘மாமா, மச்சான்’ என்று அழைத்துக்கொள்ள தொடங்கினோம். ஒரு நாள் படப்பிடிப்பில் நான் காலை டிபன் சாப்பிடவில்லை. “காலையில நீ சாப்பிடலையே, எங்க சாப்பிட்டுட்டு வந்தே?” என்று கேட்டான்.

வடபழனியில் உள்ள ஒரு ஓட்டல் பெயரை சொல்லி அங்கு சாப்பிட்டதாக சொன்னேன். “அந்த ஓட்டல்ல தான் சர்வராக நான் வேலை பார்த்தேன்” என்று பெருமையாக சொன்னான். அப்போது அவனுக்கு திருமணமாகவில்லை. நூறு ரூபாய் சம்பளமாக கிடைத்தால், அதில் 70, 80 ரூபாயை தானமாக கொடுத்துவிடுவான்.

பிறகு ஓரளவு நல்ல நிலமைக்கு வந்தபிறகு மழை காலங்களில் சாலையோரத்தில் வசிப்பவர்களுக்குச் சாப்பாடு வழங்குவான். யாருக்கும் உடல் நிலை சரியில்லை என்றால் அவனால் தாங்க முடியாது. அவர்களுக்கு உதவி செய்யாமல் அவனால் இருக்கவும் முடியாது. தன்னிடம் பணமே இல்லை என்றாலும் கடன் வாங்கியாவது அவர்களிடம் கொடுத்து விட்டு வருவான்.

அவன்தான் என் நண்பன் மயில்சாமி! “எனக்கு படிக்கத் தெரியாது” என்பான். ஆனால், தானம் தர்மம் பண்ணுவதில் அவன் கற்றோரை மிஞ்சியவன். கோடி கோடியாக பணம் இருந்து தான, தர்மம் பண்ணுவது என்பது வேறு. ஒன்றுமே இல்லாமல் கையில் அவ்வளவுதான் இருக்கிறது என தெரிந்தும் கொண்டே அதை கொடுப்பதற்கு பெரிய மனது வேண்டும். அது எல்லோருக்கும் இருக்காது.

ஒரு நாள் ஒரு படப்பிடிப்புக்கு சென்றுவிட்டு ரயிலில் திரும்பிக் கொண்டிருக்கும்போது, “பசிக்குதுடா” என்றேன். “கொஞ்சம் பொறு” என்று சொல்லிவிட்டு யாருக்கோ போன் செய்து, “ரெண்டு சாப்பாடு ரெடி பண்ணி கொண்டு வந்து வெயிட் பண்ணு, டிரெய்ன்ல வந்துட்டே இருக்கேன்” என்று சொன்னான்.

“யாருக்கு போன் பண்ணின?” என்று கேட்டேன். “சும்மாயிரு, பசிக்குதுன்னு சொன்னேல்ல, சாப்பாடு வரும்” என்று சொல்லிவிட்டு அமர்ந்தான். அடுத்த ஸ்டேஷன் வரும்போது ஒரு தம்பி சாப்பாட் டோடு காத்திருந்தான். அவனிடம் அதை வாங்கிவிட்டு, “இந்தா வச்சுக்கோ” என்று பாக்கெட்டில் இருந்த மொத்த பணத்தையும் எண்ணிப்பார்க்காமல் கொடுத்தான்.

இதே போல ஒரு படப்பிடிப்பில் ஷாட் முடிந்து அமர்ந்திருக்கும்போது, ஒரு வயதான அம்மா, வெள்ளரிக்காய் விற்றுக்கொண்டு வந்தார். “எவ்வளவு?” என்று கேட்டான். “ஒரு வெள்ளரிக்காய் இரண்டு ரூபா” என்று சொன்னார் அந்த அம்மா. ”இல்லம்மா. நீங்க வச்சிருக்கிற மொத்த வெள்ளரிக்காய் விலையை கேட்டேன்” என்றான்.

“அது என்ன இருநூற்றி ஐம்பது ரூவாய்க்கு வாங்கினேன்” என்று அந்த அம்மா சொன்னதும் ஐநூறு ரூபாயை கொடுத்தான். “நிறைய ரூவாயை கொடுத்திட்டீங்களே, இந்தாங்க” என்று அந்தம்மா பாக்கியை திருப்பிக் கொடுத்தபோது, “அதை வச்சுக்கோங்க. இங்க இருக்கிற எல்லாருக்கும் வெள்ளரிக்காயை கொடுங்க” என்றான் மயில்சாமி. அப்படியொரு தர்மவான்.

அதே போல எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடியவன் அவன். நான் விருகம்பாக்கத்தில் குடியிருந்தபோது, அவன்வீட்டு வழி யாகத்தான் ஏதாவது பொருட்கள் வாங்குவதற்கா செல்வேன். என்னைக் கண்டால், டேய் என்று சத்தம் வரும். அவன் மிமிக்ரியில் மன்னன். என்னைப் போலவே பேசுவான். நான் சிரித்துக்கொண்டே செல்வேன்.

ஆங்கிலம் தெரியாது என்று சொல்கிற அவன், ஆங்கில படங்களில், ஜாக்கிசான் படங்களில் வரும் சண்டைக்காட்சிகளை சவுண்ட் எபெக்ட்டோடு அற்புதமாக பேசுவான். அது ரசிக்கும் படியாக இருக்கும். சில நேரம் வெகுளித்தனமாகவும் நடந்து கொள்வான். அவனுக்கு கருப்பு நிறம் பிடிக்கும். அடிக்கடி கருப்பு சட்டையையே அணிவான். அவன் கார் கூட கருப்புதான்.

ஒரு முறை காரை எடுத்துக் கொண்டு எங்கோ சென்று வந்தான். அவன் வீட்டருகே என்னை பார்த்தவன் 'மாமா இந்த கார் சரியில்லைடா” என்றான். “என்னாச்சு? டிரைவர் ஓட்டிட்டு போகலையா?” என்று கேட்டேன். “ஒரு அவசரம். அதான் நானே ஓட்டிட்டு போனேன். வண்டி ஃபிரியாவே ஓட மாட்டேங்குது” என்றான். “அதெப்படி ஃபிரியா ஓடாம இருக்கும்? எங்க போய்ட்டு வர்றே"? என்று கேட்டேன்.

“மவுண்ட் ரோடு வரைக்கும் போனேன்! கார் சரியா ஓடலை” என்றான். என்ன என்று பார்ப்பதற்காக காருக்குள் ஏறினேன். பார்த்தால், ஹேண்ட் பிரேக்கை எடுக்காமலேயே சென்று வந்திருக்கிறான். “இப்படி ஹாண்ட் பிரேக் ரிலீஸ் பண்ணாம போயிட்டு வந்தன்னா, வண்டி என்னத்துக்காகும்” என்றேன்.

“அப்படியா? அது எனக்கென்ன தெரியும். சரி விடு, அதை டிரைவர் பாத்துக்குவான்” என்று சொல்லிவிட்டு சென்றான். இப்படிப்பட்ட அவன், யாருக்கும் தீங்கு நினைக்காத பண்பாளன். எனக்குத் தெரிந்து, ஏழ்மையில் இருந்தாலும் கொடை தன்மை அவனிடம் அதிகம் இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் முன் ‘பார்க்கிங்’ படத்தில் நான் நடித்துக்கொண்டிருக்கும் போது, போன் செய்தான்.

“மாமா சிவராத்திரிக்கு கோயிலுக்கு போறேன், வரியா?” என்று கேட்டான். “இல்லடா, எனக்கு ஷூட்டிங் இருக்கு. நீ போயிட்டு வந்துடு. அடுத்த முறை நான் வர்றேன்" என்றேன். சரி என்று போய்விட்டு வந்தவன் நெஞ்சு வலி என்று சிவராத்திரி அன்று ஒரேடியாக போய் சிவனோடு கலந்து விட்டான். அவன் மறைந்த பின் சிவபக்தர்கள் எல்லோரும் வந்து அவனுக்காக மந்திரங்கள் சொல்லி அவனை அப்படி அனுப்பி வைத்தார்கள்.

"அடுத்த பிறப்பிலும் என் நண்பனாக வாடா மச்சான்" என்று கதறலோடு அவனை அனுப்பினேன்! அந்த கொடை மனம் கொண்டனின் மறைவை என்னால் தாங்க முடியவில்லை. என்னை ஏங்க வைத்துக்கொண்டிருக்கும் மரணங்களில், மச்சான் மயில்சாமியுடையதும் ஒன்று. எப்போதும் என் நினைவுகளுடன் அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான் அமரனான அந்த அப்பாவி!

(திங்கள்தோறும் பேசுவோம்)

மச்சான் மயில்சாமி - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 20
கேப்டனுடன் பழகியது என் பாக்கியம் - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 19

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in