‘Mr X’ விமர்சனம் - ஆர்யாவின் ஸ்பை த்ரில்லர் எப்படி?

‘Mr X’ விமர்சனம் - ஆர்யாவின் ஸ்பை த்ரில்லர் எப்படி?
Updated on
2 min read

தனது முந்தைய படமான ‘எஃப்ஐஆர்’ மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மனு ஆனந்த் தற்போது ஆர்யா, கவுதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர் ஆகியோரை இணைத்து ‘மிஸ்டர் எக்ஸ்’ என்ற ஸ்பை த்ரில்லர் படத்தை தந்திருக்கிறார். ‘துரந்தர்’ படத்தின் மூலம் ஸ்பை த்ரில்லர் படங்களுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் சூழலில் இந்த படம் அதை பூர்த்தி செய்ததா என்று பார்க்கலாம்.

1965 காலகட்டத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா இணைந்து நந்தாதேவி மலைத்தொடரில் அணுசக்தியால் இயங்கும் ஒரு உளவுச் சாதனத்தை நிறுவ முயன்றபோது, ஒரு விபத்தால் அந்தச் சாதனம் காணாமல் போகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தச் சாதனம் தற்போது இந்தியாவுக்கு ஒரு மாபெரும் பேரழிவை ஏற்படுத்தப்போகிறது என்ற தகவல் இந்திய உளவுத்துறைக்குக் கிடைக்கிறது.

சென்னையில் ரகசிய உளவுத் துறை ஏஜென்டாக செயல்படும் கவுதமிடம் (ஆர்யா) அந்த சாதனத்தை கண்டுபிடிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. இன்னொரு பக்கம் அந்த சாதனத்தை அடைய நினைக்கும் வில்லன் அமரன் (கவுதம் கார்த்திக்). இந்த இருவருக்குமான போட்டியில் யாருக்கு அந்த சாதனை கிடைத்தது? பிறகு என்ன ஆனது என்பதே மிஸ்டர் எக்ஸ் படத்தின் கதை.

ஹாலிவுட்டில் வெளியாகி உலகம் முழுவதும் புகழ்பெற்ற ‘மிஷன் இம்பாசிபிள்’ பாதிப்பில் தான் இந்த படம் இருக்கப் போகிறது என்பதை டைட்டிலிலேயே சொல்லிவிடுகிறார் இயக்குநர் மனு ஆனந்த். நந்தா தேவி மலைத் தொடரில் புதைந்திருக்கும் அணுசக்தி சாதனம், அதைத் தேடிச் செல்லும் சரத்குமார் கதாபாத்திரம், கவுதம் கார்த்திக் அறிமுக என தொடக்கத்திலேயே நம்மை நிமிர்ந்து உட்கார வைத்து விடுகிறார். ஒரு ஸ்பை த்ரில்லருக்கு உண்டான பரபரப்பான காட்சிகள், சேஸிங் உடன் தொடங்கும் படம், ஹிரோ ஆர்யாவின் அறிமுகத்துக்குப் பிறகு முடங்கி விடுகிறது. 

தமிழ் சினிமா வழக்கம்போல தேவையே இல்லாமல் ஒரு நாயகி, படம் தொடங்கிய அரை மணி நேரத்திலேயே ஒரு டூயட் என க்ளிஷே டெம்ப்ளேட்டுக்குள் சென்றுவிடுகிறது படம். அதன் பிறகு பல ஸ்பை த்ரில்லர் படங்களில் நாம் பார்த்த அதே ஏராளமான க்ளிஷே காட்சிகளுடன் நகரத் தொடங்குகிறது. படம் முழுக்க நினைவில் கொள்ள சிரமப்படும் அளவுக்கு ஏராளமான கதாபாத்திரங்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு ட்விஸ்ட் என இஷடத்துக்கு தாராளமாக அள்ளி வீசியிருக்கிறார் இயக்குநர். 

நாயகனாக ஆர்யா தன்னுடைய கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்யும் வகையில் கட்டுக்கோப்பான உடலுடன் ஈர்க்கிறார். கவுதம் கார்த்திக்குக்கு வில்லத்தனம் செட் ஆகவில்லை. அவர் எவ்வளவு சீரியஸாக பேச முயற்சித்தாலும் அவருடைய குழந்தை முகம் அதை தடுத்து விடுகிறது.

மஞ்சு வாரியருக்கு வலுவான கதாபாத்திரம். ஆக்‌ஷன் காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார். சரத்குமார் சில காட்சிகளே வந்தாலும் அழுத்தமான கதாபாத்திரம் மூலம் நினைவில் நிற்கிறார். ஜெயப்பிரகாஷ், காளி வெங்கட், அனகா, அதுல்யா ரவி, ரைசா வில்சன்  என எக்கச்சக்க நடிகர்கள் வந்து செல்கின்றனர். 

திபு நினன் தாமஸ் பின்னணி இசை படத்துக்கு பலம். பாடல்கள் ஈர்க்கவில்லை. அருள் வின்செண்ட் ஒரு த்ரில்லர் ஆக்‌ஷன் படத்துக்கு தேவையான உழைப்பை தந்திருக்கிறார். பிரசன்னாவின் எடிட்டிங், காட்சிகள் தொய்வடையாமல் காப்பாற்றுகிறது. சில்வாவின் ஸ்டன்ட் காட்சிகள் சிறப்பு.

படத்தின் ஏகப்பட்ட லாஜிக் பிழைகள். நாட்டுக்கே பெரும் அச்சுறுத்தல் தரக்கூடிய ஒரு சாதனத்தை மீட்க எங்கோ சென்னையில் இருக்கும் சாதாரண ஒரு உளவாளியை தேடி வருவது ஏன்? அதுவும் ‘சப்பையான’ ஒரு டீம் ரஷ்யாவுக்கு அனுப்பப்படுகிறது. இவ்வளவு பெரிய விவகாரத்தை சமாளிக்க அனுப்பப்படுபவர்கள் தொடங்கி மேலதிகாரிகள் வரை அனைவருமே தமிழர்களாகவே இருக்கின்றனர். மருந்துக்கு கூட வேறு மாநிலத்தவர் யாரும் இல்லை. வில்லன், வில்லனின் அடியாள் ஆகியோர் கூட தமிழர்களே. 

எடுத்துக் கொண்ட களம் வித்தியாசமானதாக இருந்தாலும் அதற்காக வைக்கப்பட்ட காட்சிகள் யாவும் மிக மிக மேம்போக்காக எழுதப்பட்டிருப்பது பெரும் குறை. உதாரணமாக அதுல்யா ரவியின் கதாபாத்திரம் எல்லாம் ஆரம்பத்திலேயே யூகித்து விட முடிகிறது. காதலிக்கு ஒரு ஆபத்து ஏற்படும் சூழலில், ராணுவத்தையே அனுப்பமுடியும் என்ற நிலையில், பல கிமீ ஓடிச் சென்றே காப்பாற்றுகிறார் ஆர்யா. படத்தின் க்ளைமாக்ஸில் வைக்கப்பட்ட ட்விஸ்ட் கைகொடுக்கிறது. எனினும் அதுவரை நீளமான சண்டை காட்சி பொறுமையை சோதித்து விடுகிறது.

மொத்தத்தில் ‘மிஷன் இம்பாசிபிள்’ தாக்கத்தில் ஒரு படம் எடுக்க முடிவு செய்த இயக்குநர், அதற்கேற்ற ஆழமான திரைக்கதையையும், காட்சிகளையும் அமைக்கவில்லை. இதனால் மிக சுமாரான ஒரு ‘அவுட்புட்’ ஆக வந்திருக்கிறது இந்த மிஸ்டர் எக்ஸ்.

‘Mr X’ விமர்சனம் - ஆர்யாவின் ஸ்பை த்ரில்லர் எப்படி?
Ullozhukku: அன்பும் மன்னிப்பும், அஞ்சுவும் லீலாம்மாவும் | திரை தேவதைகள் 14

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in