

என்னை யாரும் ஏமாற்றவில்லை, ஏமாற்றவும் முடியாது என்று தெருக்குரல் அறிவுக்கு பதில் அளிக்கும் விதமாக கானா பாடகர் மன்னர் முத்து பேசியுள்ளார்.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் தள பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை முத்து வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘சமீபத்தில் தெருக்குரல் அறிவு ஒரு பதிவு போட்டிருந்தார். அதைப் பார்த்தேன், மனதுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. என்னை யாரும் ஏமாற்றவில்லை, ஏமாற்றும் அளவுக்கு யாருக்கும் வேலையெல்லாம் இல்லை.
எனக்கு எல்லா வகையிலும் முன்னுரிமை கொடுத்து, நான் கேட்ட பர்சன்டேஜையும் கொடுத்து, நான் எனக்கு இவ்வளவு பர்சன்டேஜ் வேண்டும் எனக் கேட்டேன். அதைக் கொடுத்து, ஒரு கலைஞனுக்கு தேவையான எல்லா விஷயங்களையும் செய்து கொடுத்தார் அவர்.
இந்தப் பாடலில் எனக்காக நடித்து கொடுக்கச் சொல்லி நான்தான் கேட்டேன். அதற்கு, ‘இல்லடா இது உன் பாட்டு... நீதான் பண்ணணும்’ன்னு சொன்னார். இல்லண்ணா எனக்காக வாங்கண்ணா என நான் கேட்டேன். எனக்காக வந்து ஆட்டோ எல்லாம் ஓட்டி... நம்ம ஏரியாவுக்கெல்லாம் வந்து நிறைய சப்போர்ட் எல்லாம் செய்திருக்கிறார்.
அறிவு சொல்வது போல், மற்றவரிடம் ஏமாறாமல் இருக்கும் அளவுக்கு எனக்கு அறிவு இருக்கிறது. மற்றவர்களை குறை சொல்வதற்கு முன்பு நாம் சரியாக இருக்கிறோமா என நாம் நம்மை பார்த்துக் கொள்ள வேண்டும்.
நீங்களே என்னுடைய கானா கலைஞர் ஒருவருக்கு பாடல் ஒன்றுக்கு பணம் தரவில்லை. நீங்கள் இருந்த வீட்டுக்கு கரண்ட் பில் கட்டாமல் போயிருக்கிறீர்கள் என்ற விஷயங்களை எல்லாம் கேள்விப்படுகிறேன். முதலில் நீங்கள் சரியாக இருந்து கொண்டு, மற்றவர்களைக் குறை சொல்லுங்கள்.
வாருங்கள் சேர்ந்து வேலை செய்யலாம்... பர்சன்டேஜ் பற்றி ஏதாவது சொல்ல வேண்டுமென்றால் நேரடியாக பேச நான் தயார். வாங்க ஜாலியாக பேசலாம்.
இந்தப் பாடல் நன்றாக இருக்கிறது என் மக்கள் சந்தோசமாக கொண்டாடுகிறார்கள். கானா பாடல் பாடிக் கொண்டிருந்தவனுக்கு சர்வதேச அளவில் பாடல் பாட வாய்ப்பு இருக்கிறது.
இந்தப் பாடலைக் கொண்டு சேர்க்கும் அனைத்து ஊடகங்களுக்கும், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சாருக்கும், ரகிட என்டர்டெயின்மென்டுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். நான் மேலும் வளர வாழ்த்துங்கள்’ என்று அவர் பேசியுள்ளார்.
இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், மன்னர் முத்து இணைந்து வழங்கும் முதல் பாடல் ‘மன்னாரு’ என்ற தலைப்பில் சமீபத்தில் வெளியானது. பாடலை கே.காட்டியன், கானா பிரான்சிஸ் எழுதியுள்ளனர். மன்னர் முத்து பாடியுள்ளார், கென் ராய்சன் இயக்கியுள்ளார்.
ரகிட என்டர்டெயின்மென்ட் சார்பில் அனைத்து முக்கிய இசைத்தளங்களிலும் வெளியாகியுள்ள இப்பாடல் யூடியூப் தளத்தில் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இதனிடையே தெருக்குரல் அறிவு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘இந்த எலைட் இசையமைப்பாளர்கள், தங்களுக்கான பாடல்கள், இசைக் கோர்ப்புகளை உழைக்கும் அடித்தட்டு மக்களின் கலாச்சாரத்தில் இருந்து எடுத்துக்கொள்கின்றனர்.
அவர்களை ‘கொலப்ரேஷன்’, ‘இன்டிபென்டன்ட் மியூசிக்’ என சேர்த்துக் கொள்கின்றனர். ஆனால், அந்த மூல படைப்பாளிகளுக்கு சரியான பெயர், அங்கீகாரம், பொருளாதார பலன் கிடைப்பதில்லை’ என்று தெரிவித்திருந்தார்.