“கமல், அஜித்துக்கு நன்றி...” - ‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ நினைவுகள் பகிர்ந்த சரண்

“கமல், அஜித்துக்கு நன்றி...” - ‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்’  நினைவுகள் பகிர்ந்த சரண்
Updated on
1 min read

என்னை இயக்குநராக ஏற்றுக்கொண்ட கமல் அவர்களுக்கு நன்றி எனக் கூறி, ‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ படத்தின் நினைவுகளை பகிர்ந்துள்ளார் இயக்குநர் சரண்.

இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் சரண் வெளியிட்டுள்ள பதிவில், ‘இதே நாளில் 2004-ல் வெளியான ‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ அசுர வேகத்தில் எடுக்கப்பட்ட படம். ஜெமினி பிலிம் சர்க்யூட்டுடன் ஒப்பந்தம் கையெழுத்தான நாளிலிருந்து 80-வது நாள் பொதுமக்கள் பார்வைக்கு திரையரங்குகளில் படம் வந்துவிட்டது.

எனக்கும் என் டீமுக்கும் தூக்கம் என்பது காரில் பயணிக்கும் நேரம் மட்டுமே வாய்த்தது. கிரேஸி மோகன் சார் படப்பிடிப்பு முழுவதும் ஒரு Stress buffer ஆக இருந்தபடியால், வசூல்ராஜா இன்று வரை ரசிகர்களின் Stress buster ஆக விளங்குகிறது.

பரத்வாஜ், வைரமுத்து பாடல்கள் அசுர பலம். என்னை இயக்குநராக ஏற்றுக்கொண்ட கமலுக்கும், ‘அட்டகாசம்’ பாதி முடிந்திருந்த நிலையில் என்னை விட்டுக்கொடுத்த என் அஜித்துக்கும் நன்றி’ என்று  தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் சினிமாவுக்கு நடிக்க வந்து 67 ஆண்டுகள் ஆன நிலையில், இயக்குநர் சரண், கமல் படத்தின் இந்த நினைவைப் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியில் வெளியான ‘முன்னாபாய் எம்பிபிஎஸ்’ படத்தின் ரீமேக்காக கடந்த 2004-ம் ஆண்டு, ஆகஸ்ட் 12-ம் தேதி தமிழில் வெளியான படம், ‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்’.

ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரிப்பில், சரண் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் கமல்ஹாசன், சினேகா, பிரபு, பிரகாஷ் ராஜ், கிரேசி மோகன், நாகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

வட்டி தொழில் செய்யும் ஒரு ரவுடி தனது அப்பாவை அவமானப்படுத்திய அவரின் மருத்துவ நண்பரை பழி வாங்க, ரவுடி தொழிலை விட்டுவிட்டு மருத்துவம் பயில வருவதே படத்தின் ஒரு வரி கதை.

விக்ரமாதித்தன் வேதாளமாக டீன் பிரகாஷ் ராஜ், மாணவர் கமல்ஹாசன் வரும் காட்சிகளில் அவர்களின் அனுபவ நடிப்புடன் கிரேஸி மோகனின் தேர்ந்த நகைச்சுவை வசனங்கள் போட்டி போட்டு ரசிக்க வைத்து காட்சிகளுக்கு வலு சேர்த்திருக்கும்.

“கமல், அஜித்துக்கு நன்றி...” - ‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்’  நினைவுகள் பகிர்ந்த சரண்
‘ராம் IN லீலா’ ட்ரெய்லர் எப்படி? - அப்பாவி ராமின் காதல் குழப்பம்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in