

தனுஷ் நடித்துள்ள ‘கர’ படத்தை ‘போர் தொழில்’ இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார். மமிதா பைஜு, கே.எஸ்.ரவிகுமார், ஜெயராம், கருணாஸ், சுராஜ் வெஞ்சரமூடு, பிருத்வி பாண்டியராஜன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்குத் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஏப்.30-ல் வெளியாகும் இப்படம் பற்றி இயக்குநர் விக்னேஷ் ராஜா கூறியதாவது: இது சஸ்பென்ஸ் த்ரில்லர் கதை. அடுத்து என்ன நடக்க போகிறது என்கிற பரபரப்பு படத்தில் இருக்கும். ஹீரோவுக்கு அவரைச் சுற்றி நடக்கிற சில விஷயங்கள் என்ன மாதிரியான பாதிப்பைக் கொடுக்கிறது. அதற்கு அவர் என்ன செய்கிறார் என்பது படம்.
நான் படித்த 2 வெவ்வேறு செய்திகளை இணைத்துதான் இப்படத்தைப் பண்ணியிருக்கிறேன். அதை, 1991-ல் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பது போல மாற்றி இருக்கிறேன். நாயகி மமிதா பைஜு, ஹீரோவை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு அழைத்துச் செல்வதற்குக் கருவியாக இருப்பார். அவருக்கும் முக்கியமான கதாபாத்திரம். 7 கதாபாத்திரங்களை மையப்படுத்திய கதை. ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் உண்டு. இந்தப் படத்தில் எமோஷனல் காட்சிகள் அதிகம் இருக்கும். வன்முறை காட்சிகள் இருக்காது.
இதில் சுராஜ் வெஞ்சமூடுக்கு முன்பு, வேறு சில நடிகர்களிடம் நடிக்கக் கேட்டோம். அவர்கள் கதை நன்றாக இருக்கிறது. என் கேரக்டர் சரியில்லை என்றார்கள். இவ்வளவு பேர் அப்படிச் சொல்கிறார்கள் என்றால் அதில் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று நினைத்து அந்த கதாபாத்திரத்தை மாற்றி எழுதினேன். பிறகுதான் சுராஜ் வெஞ்சரமூடுவிடம் சொன்னேன். உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டார். இவ்வாறு விக்னேஷ் ராஜா கூறினார்.