

“இவர்களைத் தெரியும் என்பதே எனக்கு பெருமை” என எழுத்தாளரும், தனது நண்பருமான இரா.முருகன் மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் எம்.பி. புகழஞ்சலி செலுத்தி உள்ளார்.
எழுத்தாளர் இரா.முருகன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (நவ.3) காலமானார். அவருக்கு வயது 74. நண்பரின் மரணத்துக்கு கமல்ஹாசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “இரா.முருகனும் நானும் சேர்ந்து எழுதிய ‘உன்னைப் போல் ஒருவன்’ படத்தில் ஒரு வசனம். ‘மறதி ஒரு தேசிய வியாதி’. அந்த மறதி எனக்கும் முருகனுக்கும் வராது என்று நம்பியிருந்த எங்களுக்கு முருகனின் ‘மறதி வியாதி’ அதிர்ச்சிதான்.
கவலைப்படாதீங்க.. இந்த மறதியோட தேக்கி வச்சிருந்த கோபதாப குரோதங்களும் மறந்துரும். சோகங்களும் கூட என்றேன்.
அது போனா போயிட்டு போறது கூடவே நம்ம சந்தோச நாட்களும் ஜோக்ஸூம் மறந்துபோயிடுமோன்ற பயமாயிருக்கு என்றார் இரா.மு. எல்லாத்தோடயும் சேர்த்து பயமும் மறந்த வீரரா வாழவேண்டியதுதான். இது பெரிய சோகமில்ல முருகன் என்றேன்.
‘ஓ நல்லாருக்கே You are saying I might even forget to forget? என்று கேட்டார். இருவரும் சிரித்தோம். சத்தமாக நான். மனதிற்குள் அவர். முருகனின் கடைசி சோகம் அதுதான். சோகமும் பிரிவும் இனி என் போன்ற நண்பர்களுக்குத்தான்.
நாங்கள் நண்பர்களாக எங்களை ஊக்குவித்தவர் சுஜாதா ரங்கராஜன். அதுவும் எப்படி? உங்களுக்குப் பிறகு, நீங்கள் விட்ட இடத்தில் தொடங்கக் கூடிய எழுத்தாளரைக் கண்டுபிடித்து விட்டீர்களா என அவரிடம் கேட்டேன். சுஜாதா தயக்கமில்லாமல் சொன்னார், ‘ஓ இரா.முருகன்”. சுஜாதா புகழ்ந்த அந்த இரா.முருகன் என் நண்பர். இவர்களை எனக்குத் தெரியும் என்பதே என் பெருமை.
சில பேர் மொழியைக் காதலிப்பார்கள். சிலரை மொழியே காதலிக்கும். இரா.முருகனின் காதல் ஒருதலைக் காதல் அல்ல. அன்புடன், முருகனின் நண்பன், தமிழின் காதலன், கமல்ஹாசன்” என்று தெரிவித்துள்ளார்.
நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கியத்துக்கு பங்களிப்பு செய்து வந்தவர் இரா.முருகன். அரசூர் வம்சம், விஸ்வரூபம், மிளகு போன்றவை இவரின் கவனம் பெற்ற படைப்புகளாகும்.
திரைத்துறையிலும் பணியாற்றியுள்ள இரா.முருகன் ‘உன்னைப் போல் ஒருவன்’, ‘பில்லா 2’ படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். கிரிக்கெட் வீரர் அஸ்வின் முருகன் இவரது மகன் என்பது குறிப்பிடத்தக்கது.