

அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜான் டோ’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.
அர்ஜுன் தாஸ் காவல் துறை அதிகாரியாக நடித்திருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், ‘‘ஜான் டோ’ படத்தின் ட்ரெய்லரை வெளியிடுவதில் மகிழ்ச்சி. வாழ்த்துகள் அர்ஜுன் தாஸ் மச்சி. படம் வெற்றி பெற ஒட்டு மொத்த படக்குழுவுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்’ எனத் தெரிவித்துள்ளார்.
இந்த ட்ரெய்லர் ஜாராவும் அவரது தம்பியும் இரவில் ஒரு தனியாக சாக்லெட் வாங்கச் செல்வதில் தொடங்குகிறது. அப்போது அந்த சின்னப் பையன் காணாமல் போகிறான். தனது தாயுடன் ஜாரா காவல் துறையில் புகார் தர, அப்போதுதான் அந்தக் குடும்பம் துபாயில் இருந்து தமிழகத்துக்கு வந்திருப்பது தெரிய வருகிறது.
இரவில் தெரியாத ஊரில் குழந்தைகளை தனியாக அனுப்பியதற்காக அந்தத் தாயைக் கடிந்து கொள்கிறார் வழக்கை விசாரிக்கும் அதிகாரியான சஞ்சனா நடராஜன். தொடர் விசாரணையிலும் அந்த கடுமை நீடிக்கிறது.
இதனிடையில், அர்ஜுன் தாஸும் இந்த வழக்கை விசாரிப்பது காட்டப்படுகிறது. அவரது விசாரணையில் சிறுவனின் கடத்தல், 17 குழந்தைகளின் கொலையுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற புது கோணம் விரிகிறது.
சிறுவனைக் கடத்தியது யார்? அவன் உயிருடன் இருக்கிறானா? இதை எல்லாம் செய்யும் கொடூர கொலைகாரன் யார் என்ற கேள்விகளை எழுப்பி, இந்தப் படத்தின் மீது ஓர் எதிர்பார்ப்பை உருவாக்குகிறது இந்த 2.08 நிமிடம் ஓடும் ட்ரெய்லர்.
அர்கா மீடியா ஒர்க்ஸ் தயாரிப்பில், மதுமிதா இயக்கி இருக்கும் இப்படத்தில், சஞ்சனா நடராஜன், சிருஷ்டி, ஜாரா வினீத் சாந்தோக், நீரவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ப்ரீதா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்ய, முஜீப் மஜீத் இசையமைத்து இருக்கிறார். இந்தப் படம் நவம்பர் 13 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.