

சென்னை: விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஜனநாயகன்’. தணிக்கைச் சிக்கலால் இன்னும் ரிலீஸ் ஆகாமல் தாமதமாகி வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் சில காட்சிகள் இணையத்தில் கசிந்தன. இது படக்குழுவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இது குறித்து தயாரிப்பாளர் தரப்பில் சட்டபூர்வமாக ஓர் எச்சரிக்கை நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது. அதில், கசிந்த ‘ஜனநாயகன்’ காட்சிகளை பதிவிறக்கம் செய்தாலோ, சமூக வலைதளங்களில் பகிர்ந்தாலோ சட்டபூர்வ நடவடிக்கை உறுதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நோட்டீஸின் விவரம் வருமாறு:
‘நான் கே.வி.என் புரொடக்ஷன்ஸ் எல்.எல்.பி நிறுவனத்தின் சட்ட ஆலோசகர். எனது கட்சிக்காரரின் அறிவுறுத்தல்களின்படி இந்தப் பொது அறிவிப்பை வெளியிடுகிறேன்.
எனது கட்சிக்காரர், விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில், அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்த 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆவார். பல நூறு கோடி ரூபாய் முதலீட்டில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம், திரையரங்கு, சாட்டிலைட், ஒடிடி மற்றும் வணிக ரீதியாக மிகப்பெரிய மதிப்பைக் கொண்டுள்ளது.
'ஜனநாயகன்' திரைப்படத்தின் சில காட்சிகள், சில நபர்களால் சட்டவிரோதமாக அணுகப்பட்டு, பதிவிறக்கம் செய்யப்பட்டு, நகலெடுக்கப்பட்டு, பல மூன்றாம் தரப்பினருக்கு அனுப்பப்பட்டு, பல்வேறு சமூக ஊடகத் தளங்கள் மூலம் டிஜிட்டல் கசிவு ஏற்படும் தீவிர அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளன என்பது எனது கட்சிக்காரரின் கவனத்துக்கு மிகுந்த அதிர்ச்சியுடனும் அவசரத்துடனும் வந்துள்ளது.
‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் கசிந்த காட்சிகள் அல்லது காணொலிகளை வாட்ஸ்அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப், இணையதளங்கள், டோரண்ட்கள் அல்லது வேறு எந்த டிஜிட்டல் ஊடகம் வழியாகவும் பதிவிறக்கம் செய்வது, அனுப்புவது, பகிர்வது, பதிவேற்றுவது, மீண்டும் பதிவிடுவது, சேமிப்பது அல்லது பரப்புவது ஒரு கடுமையான குற்றச்செயல் மற்றும் பதிப்புரிமை மீறலாகும் என்றும், இதில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நபரும் தனித்தனியாக குற்றவியல் நடவடிக்கைக்கு உட்படுவார்கள் என்றும் இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.
‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் காட்சிகளை சட்டவிரோதமாகப் பதிவிறக்கம் செய்து அனுப்பிய நபருக்கு எதிராக எனது கட்சிக்காரர் ஏற்கெனவே உரிய சட்ட நடவடிக்கையைத் தொடங்கியுள்ளார். மேலும், இத்தகைய சட்டவிரோதப் பரப்பலில் ஈடுபட்ட அனைத்து நபர்களுக்கும் எதிராக மேலதிக நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
‘ஜனநாயகன்’ தொடர்பான கசிந்த உள்ளடக்கத்தை எந்தவொரு டிஜிட்டல் அல்லது சமூக ஊடகத் தளம் வழியாகவும் எந்த வகையிலும் பதிவிறக்கம் செய்யவோ, பெறவோ, சேமிக்கவோ, அனுப்பவோ, பகிரவோ அல்லது பரப்பவோ கூடாது என்று பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் எவரும், அதன் விளைவுகளுக்குத் தங்கள் சொந்தப் பொறுப்பில், உடனடி உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்’ என்று அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.