

சென்னை: திரைப்படத் தணிக்கை வாரியத்தின் சான்றிதழுக்காக காத்திருக்கும் நிலையில், விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ முழு திரைப்படமும் நேற்று இணையத்தில் வெளியாகி வைரலானதால் விஜய் உள்ளிட்ட படக் குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி டிஜிபியிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’. ஹெச்.வினோத் இயக்கத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரூ.500 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட படம் என்பதாலும், தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக களமிறங்கியுள்ள விஜய்யின் கடைசி திரைப்படம் என்று அறிவிக்கப்பட்டதாலும், ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தணிக்கைப் பிரச்சினை காரணமாக இதுவரை வெளியாகவில்லை. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, படத்தை மறுதணிக்கைக் குழு கடந்த மாதம் பார்த்தது. படத்துக்கு விரைவில் தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில், ‘ஜனநாயகன்’ படத்தில் இடம்பெற்றுள்ள சுமார் 5 நிமிட வீடியோ காட்சி இணையத்தில் கடந்த 9-ம் தேதி வெளியானது. பல்வேறு வலைதளங்களிலும் இது வேகமாக பகிரப்பட்டது. இதனால், படத் தயாரிப்பு நிறுவனமும், படக் குழுவினரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில், ‘ஜனநாயகன்’ முழு திரைப்படமும் நேற்று அதிகாலை இணையத்தில் சட்டவிரோதமாக மர்ம நபர்களால் வெளியிடப்பட்டது. இணையம் மற்றும் வலைதளங்களில் இதுவும் வேகமாக பகிரப்பட்டது. திரைப்படத் தணிக்கை வாரியத்தின் சான்றிதழுக்காக காத்திருக்கும் சூழலில், முழு படமும் இணையத்தில் வெளியானது விஜய் உள்ளிட்ட படக் குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
இணையத்தில் முழு திரைப்படத்தையும் மர்ம நபர்கள் சட்ட விரோதமாக வெளியிட்டதற்கு நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால், நடிகர்கள் ரஜினிகாந்த், சூர்யா, சிரஞ்சீவி, சிவகார்த்திகேயன், விஜய் ஆண்டனி, ஜீவா, ஜி.வி.பிரகாஷ் குமார், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உட்பட திரையுலகினர் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ரஜினிகாந்த் தனது வலைதளப் பதிவில், ‘ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் யாராலோ வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சி, வேதனையை அளிக்கிறது. திரை அமைப்புகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டும். அரசு இதைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். இது போன்ற குற்றம் இனியும் தொடரக்கூடாது’ என்று தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனமான ‘பெப்சி’ அமைப்பும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ‘இதுபோன்ற செயல்களை மத்திய, மாநில அரசுகள் தடுத்து, ஜனநாயகன் படத்தையும், திரைத்துறையையும் பாதுகாக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளது. திரைப்படத்தை இணையத்தில் கசியவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க முன்னாள் தலைவர் கேயார், டிஜிபியிடம் புகார் கொடுத்துள்ளார்.
சட்டப்படி நடவடிக்கை: இதற்கிடையே, ‘ஜனநாயகன்’ திரைப்படக் காட்சிகளை பகிர்ந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தயாரிப்பாளர் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: ‘ஜனநாயகன்’ படத்தின் கசிந்த காட்சிகள் அல்லது காணொளியை வாட்ஸ்அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், முகநூல், எக்ஸ், யூ-டியூப், இணையதளங்கள் உள்ளிட்ட எந்த டிஜிட்டல் ஊடகம் வழியாகவும் பதிவிறக்கம் செய்வது, அனுப்புவது, பகிர்வது, பதிவேற்றம் செய்வது, மீண்டும் பதிவிடுவது, சேமிப்பது, பரப்புவதுகடுமையான குற்றச்செயல் மற்றும் பதிப்புரிமை மீறல் ஆகும். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
‘ஜனநாயகன்’ படத்தின் காட்சிகளை சட்டவிரோதமாகப் பதிவிறக்கம்செய்து அனுப்பிய நபருக்கு எதிராக எனது கட்சிக்காரர் ஏற்கெனவே உரியசட்ட நடவடிக்கை தொடங்கிஉள்ளார். மேலும், இத்தகைய சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட அனைத்து நபர்களுக்கும் எதிராக மேலதிக நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் எவரும், அதன் விளைவுகளுக்கு, உடனடி உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.