

சென்னை: விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஜனநாயகன்’. தணிக்கைச் சிக்கலால் இன்னும் ரிலீஸ் ஆகாமல் தாமதமாகி வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் சில காட்சிகள் இணையத்தில் கசிந்த நிலையில், சில மணி நேரங்களில் முழு படமும் ஹெச்டி தரத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது படக்குழுவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட பலரும் நடிகர் விஜய் மற்றும் படக்குழுவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
சிவகார்த்திகேயன்: ஒவ்வொரு திரைப்படமும் நூற்றுக்கணக்கான மனிதர்களின் ஆர்வம், ரத்தம் மற்றும் வியர்வையால் உருவாக்கப்படுகிறது. தயவுசெய்து படத்திருட்டை தவிருங்கள். பொறுமையாகக் காத்திருந்து, திரைப்படத்தைத் திரையரங்குகளில் மட்டும் பாருங்கள். இதற்கு காரணமானவர்கள் எவராயினும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். திறமைகளை மதியுங்கள். கடின உழைப்பை மதியுங்கள். திரையுலகை மதியுங்கள்.
சூர்யா: நெஞ்சை உலுக்கும் அநீதி இது. ஒரு முழு குழுவின் உழைப்பும் ஆர்வமும் இப்படிச் சிதைக்கப்பட்டிருக்கிறது. நான் உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன், தயவுசெய்து இப்படத்தை இணையத்தில் பார்க்கவோ, பகிரவோ அல்லது இங்கே விவாதிக்கவோ வேண்டாம். அவர்களின் உழைப்பிற்கு மதிப்புக் கொடுங்கள். எனது நண்பர்களுக்கு ஆதரவாக நான் நிற்கிறேன். இந்தச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இது மன்னிக்க முடியாதது.
ஜீவா: நமது தளபதியின் ஜனநாயகன் படத்தை ஒட்டி சமீபத்தில் நடந்துள்ள படத்திருட்டு விவகாரம் மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. இது போன்ற உள்ளடக்கங்களைப் பகிரவோ அல்லது ஊக்கப்படுத்தவோ வேண்டாம். நீங்கள் படத்திருட்டை ஆதரித்தால், நீங்கள் ஒரு ரசிகர் அல்ல, அந்தப் பிரச்சினையின் ஒரு பகுதி. நாம் காத்திருந்து, அந்த மனிதரை எப்படிக் கொண்டாட வேண்டுமோ அப்படி, அதாவது திரையரங்குகளில் மட்டுமே கொண்டாடுவோம். இது வெறும் உள்ளடக்கம் மட்டுமல்ல, இது வியர்வை, ரத்தம் மற்றும் பல ஆண்டுகால இடைவிடாத உழைப்பு. அதற்கு துரோகம் இழைத்துவிடாதீர்கள்! சம்பந்தப்பட்ட நபர் உடனடியாக விளைவுகளைச் சந்திக்க வேண்டும்.
பிரதீப் ரங்கநாதன்: இதயத்தை உடைக்கும் செயல். லீன் ஆன உள்ளடக்கங்களை பகிர வேண்டாம். மற்றவர்களின் வலியில் மகிழ்ச்சி காண வேண்டாம்.
வெங்கட் பிரபு: அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு முன்பே ஜனநாயகன் படத்தைக் கசியவிடுவது வெறும் படத்திருட்டு மட்டுமல்ல, இந்தப் படத்திற்காகத் தங்கள் ரத்தத்தையும் வியர்வையையும் சிந்திய தயாரிப்பாளர்கள், நூற்றுக்கணக்கான கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் கடின உழைப்பிற்கு இழைக்கப்படும் அவமரியாதை ஆகும்.
சினிமாவை எப்படி அனுபவிக்க வேண்டுமோ அப்படி பெரிய திரையிலேயே அனுபவிக்க வேண்டும். இந்தக் கசிவுக்குப் பின்னால் இருப்பவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். நான் ஏற்கனவே சொன்னது போல, எதாலும் நமது தளபதியை தடுக்க முடியாது. 'ஜனநாயகன்' வரலாற்றிலேயே மிகச்சிறந்த விடைபெறுதலாக அமையும்.
சிலம்பரசன்: அன்புள்ள விஜய் அண்ணா, பின்னடைவுகள் உங்களை ஒருபோதும் தடுத்து நிறுத்தியதில்லை. இதைவிடப் பெரிய புயல்களை நீங்கள் கடந்திருக்கிறீர்கள். இதுவும் கடந்து போகும். ஜனநாயகன் வெளியாகும் நாளன்றுதான் உண்மையான திருவிழா தொடங்கும்.
ராஜ்குமார் பெரியசாமி: வெளியாகாத ஒரு திரைப்படத்தைக் கசியவிடுவது, பல ஆண்டுகால கடின உழைப்பையும் கோடிக்கணக்கான பணத்தையும் சீர்குலைக்கும் செயலாகும். சினிமா திருட்டு என்பது திருடுவதற்குச் சமம், அது கொல்வதற்குச் சமம் . ஜனநாயகன் கசிவு என்பது ஒரு படத்தின் பிரச்சினை மட்டுமல்ல.
எச்.வினோத் மற்றும் படக்குழுவினர் மன உறுதியுடன் இருங்கள். இவை அனைத்திற்கும் மேலாக, எப்போதும் திரையரங்குகளை உயிர்ப்பிக்கும் தளபதி விஜய்க்கு உரிய அங்கீகாரமும், கே.வி.என் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு உரிய வருவாயும் கிடைக்க வேண்டும் என உண்மையிலேயே விரும்புகிறேன். படத்திருட்டைஒழிப்போம்.
சிரஞ்சீவி: ஜனநாயகன் படத்தின் துரதிர்ஷ்டவசமான கசிவு என்னை ஆழமான கவலைக்குள்ளாக்கியுள்ளது. சினிமா என்பது நம்பிக்கை, முயற்சி மற்றும் பலரின் கூட்டுக்கனவுகளால் கட்டமைக்கப்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் திரையுலகில் உள்ள நம் அனைவரையும் பாதிக்கின்றன. நமது படைப்புகளைப் பாதுகாப்பது எவ்வளவு முக்கியம் என்பதை இவை நமக்கு நினைவூட்டுகின்றன.
பாதிப்பைக் குறைப்பதிலும், குற்றவாளிகளைத் தண்டிப்பதிலும் நாங்கள் கே.வி.என் புரொடக்சன்ஸ் உடன் துணை நிற்கிறோம். சினிமாவை மதிக்கவும் பாதுகாக்கவும் நாம் அனைவரும் ஆதரவுக்கரம் நீட்டுவோம். படத்திருட்டை ஒழிப்போம். சினிமாவை காப்போம்.
பா.ரஞ்சித்: ஜனநாயகன் கசிவு உண்மையிலேயே வருத்தமளிக்கிறது மற்றும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவருக்கும் இது இதயத்தை உடைக்கும் செய்தியாகும். இதற்குப் பொறுப்பானவர்களைக் கண்டறிந்து, தாமதமின்றி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.