

பெங்களூரு: காவிரி நீர் பங்கீடு தொடர்பான விவகாரம் கர்நாடகாவில் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக முதல்வர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் திரையிடல் கர்நாடகா முழுவதும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழுவின் பரிந்துரைப்படி, தமிழகத்திற்கு நாள்தோறும் 3,500 கனஅடி நீரை அடுத்த 15 நாட்களுக்குத் திறந்துவிட வேண்டும் என காவிரி நீர் மேலாண்மை வாரியம் உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கர்நாடகாவில் கன்னட அமைப்புகளும், விவசாய சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதன் எதிரொலியாக, அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பெங்களூரு மற்றும் பிற பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் ‘ஜனநாயகன்’ காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பெங்களூருவின் சம்பிகே திரையரங்கில் அனைத்துக் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டு, அங்கிருந்த விஜய் போஸ்டர்கள் அகற்றப்பட்டும், மறைக்கப்பட்டும் உள்ளன. மேலும், மண்டியா பகுதியில் உள்ள திரையரங்குகளில் கன்னட அமைப்பினர் பட விளம்பரப் பதாகைகளைக் கிழித்து அமளியில் ஈடுபட்டனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்கத் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் காவல்துறைப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக “தற்போதைய சூழலில் தமிழக முதல்வர் விஜய் கர்நாடகா வரவேண்டாம். பதற்றமான சூழல் நிலவும் நிலையில், தமிழக முதல்வர் கர்நாடகாவுக்கு வந்தால் சரியாக இருக்காது. தமிழக முதல்வர் கர்நாடகா வரும்போது இங்கே போராட்டங்கள் நடந்தால் நன்றாக இருக்காது” என கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹெச். வினோத் இயக்கத்தில் வெளியாகி உலகளவில் ரூ.260 கோடிக்கு மேல் வசூலித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் திரையிடல் பாதிக்கப்பட்டுள்ளதால், அதன் வசூல் மேலும் சரியக்கூடும் எனக் கருதப்படுகிறது.