

புதுச்சேரி: திரைப்படத்தின் மூலம் சமூகத்தில் நல்ல உரையாடலும், மாற்றமும் உருவாவது அவசியம் என திரைப்பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்தார்.
புதுச்சேரி முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், புதுச்சேரி திரைப்பட இயக்கம் மற்றும் சகோதரன் சமூக நல மேம்பாட்டு நிறுவனம் இணைந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற ‘டோரதி’ திரைப்படக் குழுவினருக்கு புதுச்சேரியில் பாராட்டு விழா நடத்தினர்.
புதுச்சேரி அலையன்ஸ் பிரான்சிஸ் அரங்கில் நடந்த சகோதரன் சமூக நல மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் சீத்தல் நாயக் தலைமை தாங்கினார். விழாவில் பேசிய திரைப்பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், “சமூகத்தில் திருநங்கைகள் எதிர்கொள்ளும் பாகுபாடு மற்றும் அவர்களைப் பற்றிய தவறான மனநிலைகள் மாற வேண்டும்.
“கலை ஒரு ஆயுதம்” அதன் மூலம் மாற்றம் உருவாக வேண்டும். ஒரு திரைப்படத்தை உருவாக்குவதோடு மட்டும் பணி முடிந்துவிடக் கூடாது. அந்தப் படத்தின் மூலம் சமூகத்தில் நல்ல உரையாடலும் மாற்றமும் உருவாக வேண்டும்.
‘டோரதி’ திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றி வெறும் வசூல் வெற்றி மட்டுமல்ல. பல்வேறு தரப்பைச் சேர்ந்த மக்கள் படத்தை பார்த்து, அதுகுறித்து உரையாடத் தொடங்கியிருப்பதே மிகப்பெரிய வெற்றி” என்றார். விழாவில் நடிகர்கள் ரிஷிகாந்த், சனந்து ஆகியோர் பங்கேற்றனர். அவர்களுடன் புகைப்படம், செல்ஃபி எடுக்க ரசிகர்கள் ஆர்வம் காட்டினர்.