இன்​விசிபிள் கட்: கண்​கள் அறியாத தொடர்ச்​சி | ஒளி என்பது வெளிச்சமல்ல 27

இன்​விசிபிள் கட்: கண்​கள் அறியாத தொடர்ச்​சி | ஒளி என்பது வெளிச்சமல்ல 27
Updated on
3 min read

சினிமா ஒரு கூட்​டுக்​க​னவு. நாம் உறக்​கத்​தில் காணும் கனவு​களில் ஓர் இடத்​திலிருந்து இன்​னொரு இடத்​துக்​குத் தாவும்​போது “எப்​படி இங்கே வந்​தோம்?” என்ற தர்க்க ரீதியான கேள்வி எழு​வ​தில்​லை. அந்​தப் பயணம் தடையின்​றித் தொடரும். மனிதக் கண்​கள் நிமிடத்​துக்​குப் பலமுறை சிமிட்​டி​னாலும், அந்த ஒரு நொடி இருட்டை நம் மூளை கணக்​கில் கொள்​வ​தில்​லை; காட்​சி​யைத் தடையற்ற தொடர் ஓட்​ட​மாகவே நமக்​குப் பதிவு செய்கிறது.

நிஜ வாழ்க்கையின் இந்த ‘இயல்​பான தொடர்ச்​சி​யை’ (சீம்லெஸ் கன்​டினு​விட்​டி) திரை​யில் உரு​வாக்​கு​வது​தான் இன்​விசிபிள் கட் அல்​லது ‘மறைக்​கப்​பட்ட கட்’ எனப்படும் நுட்​பம். எடிட்​டிங்​கில் ஒரு காட்​சியி​லிருந்து இன்னொன்றுக்கு மாறும்​போது ‘கட்’ தெரிவது இயல்​பு. ஆனால், சில கதைகள் பார்​வை​யாளர் ஒரு நொடி கூட திரையை விட்டு வெளி​யேறக் கூடாது என்று விரும்புபவை. “நான் ஒரு படம் பார்த்​துக் கொண்டிருக்கிறேன்” என்ற உணர்​வை, “நான் அந்​தக் கதைக்​குள் வாழ்ந்து கொண்​டிருக்​கிறேன்” என்ற அதிதீ​விர உணர்​வாக உரு​வாக்​கு​வதே இன்​விசிபிள் கட்​டின் நோக்கம்.

வரலாற்​றின் முதல் இன்​விசிபிள் கட்- ஆல்ஃபிரட் ஹிட்ச்​காக்​கின் ‘ரோப்’ (1948)

இன்​விசிபிள் கட் நுட்​பத்தை முதன்​முதலில் ஒரு முழு நீளப் படத்​துக்​குப் பயன்​படுத்த முயன்ற பெருமை ‘மாஸ்​டர் ஆஃப் சஸ்​பென்​ஸ்’ ஆல்ஃபிரட் ஹிட்ச்​காக்கை சாரும். 1948-ல் அவர் இயக்​கிய ‘ரோப்’ திரைப்​படம், தொழில்​நுட்ப ரீதியாக மிகப்​பெரிய சவாலாக இருந்​தது.

அந்​தக்​காலத்​தில் ஒரு ஃபிலிம் ரோலில் அதி​கபட்​சம் 10 நிமிடங்​கள் மட்​டுமே காட்​சிகளைப் பதிவு செய்ய முடி​யும். ஆனால், ஹிட்ச்​காக் அந்​தப் படம் முழு​வதும் ஒரே ஷாட்​டில் நடப்​பது போன்ற பிரமையை உரு​வாக்க விரும்​பி​னார். அதற்​காக அவர் கையாண்ட வித்தை எளிமை​யானது, ஆனால் புத்​தி​சாலித்​தன​மானது. கேமரா ஒரு கதாபாத்திரத்​தின் முதுகுக்​குப் பின்​னால் செல்​லும்​போது திரை​யில் முழு​மை​யான இருள் சூழும். அந்த இருளில் அவர் ஃபிலிம் ரோலை மாற்​றி, அடுத்த ரோலைத் தொடங்​கி​னார். பார்வை​யாளர்​களுக்கு அது ஒரு கதாபாத்திரத்தின் அசைவாகத் தெரிந்​ததே தவிர, அங்கு ஒரு ‘கட்’ விழுந்​தது தெரியவில்​லை. வெறும் 10 கட்​-களைக் கொண்டு ஒரு முழுப் படத்​தை​யும் ஒரே தொடர்ச்​சி​யான நிகழ்​வாக அவர் மாற்​றிக் காட்​டி​னார்.

நவீன காவி​யங்​கள்: 1917 மற்​றும் பேர்ட்​மேன்

தொழில்​நுட்​பம் வளர்ந்த இன்​றைய டிஜிட்​டல் யுகத்​தில், இந்த மறைக்​கப்​பட்ட கட் நுட்​பம் புதிய உச்​சத்தை எட்டியுள்​ளது.

1917: போர்க்​களத்​தின் ஒரு நீண்ட மூச்சு

சாம் மெண்​டெஸ் இயக்​கத்​தில், ரோஜர் டீக்​கின்​ஸின் ஒளிப்பதிவில் வெளி​யான ‘1917’ திரைப்​படம் “காணாத கட்” என்​ப​தற்கு நவீன உதா​ரணம். இந்​தப் படம் முழு​வதுமே ஒரே ஷாட்​டில் (சிங்​கிள் டேக்) எடுக்​கப்​பட்​டது போன்ற பிரமையை உரு​வாக்​கு​கிறது. இங்கு கேமரா ஒரு பார்வையாள​ராக இல்​லாமல், அந்​தப் போர்க்​களத்​தில் வீரர்​களு​டன் ஓடும் ஒரு கதா​பாத்​திர​மாகவே மாறுகிறது.

ஒரு வீரனின் பின்​னால் கேமரா செல்​லும்​போது ஏற்​படும் இருள் அல்​லது ஒரு பதுங்கு குழி​யின் சுவரை கேமரா உரசும்​போது ஏற்​படும் அந்த ஒரு நொடி மறைவு -அங்​கு​தான் மாயம் நிகழ்​கிறது. அந்த இருளுக்​குள் ஒரு கட் (டார்க் ஃபிரேம் கட்) ஒளிந்​திருக்​கிறது. பார்​வை​யாளர் அந்​தப் போர்க்​களத்​தின் புழு​தி​யிலும், ரத்​தத்​தி​லும் மூழ்கியிருப்பதால் அந்த மாற்​றத்தை உணர்​வ​தில்லை. இது போரின் தீவிரத்தை இடைவேளை​யற்ற நீண்ட மூச்சாக மாற்றுகிறது.

பேர்ட்​மேன்: திரைக்​குப் பின்​னால் ஒரு தொடர் நடனம்

அலெக்​ஜான்ட்ரோ கோன்​சலஸ் இனாரிட்​டு​வின் ‘பேர்ட்​மேன்’, ஒரு நாடக மேடை​யின் பின்​னணி​யில் நடக்​கும் போராட்​டத்தை ஒரே தொடர் இயக்​க​மாகக் காட்​டு​கிறது. ஒளிப்​ப​திவு மேதை இமானுவேல் லுபெஸ்​கி, விப்​-​பான் நுட்​பத்​தைப் பயன்​படுத்தி கேம​ராவை ஒரு திசையி​லிருந்து மற்​றொரு திசைக்கு மின்​னல் வேகத்​தில் திருப்​பு​கிறார்.

அந்த வேகத்​தில் பிம்​பங்​கள் மங்​கலாகும் போது (மோஷன் ப்ளர்), ஒரு காட்​சியி​லிருந்து அடுத்த காட்​சிக்​கு கட் விழுகிறது. ஜன்​னல் வழி​யாக வெளியே பார்த்​து​விட்டு மீண்​டும் உள்ளே திரும்​பும் அந்​தச் சிறிய இடைவெளி​யில், காலம் சில மணி நேரம் முன்​னோக்கி நகர்த்​தப் பட்டிருக்கும்.

‘இன்​விசிபிள் கட்’டை உரு​வாக்​கும் முக்​கிய நுட்​பங்​கள்

ஒளிப்​ப​தி​வாளர் மற்​றும் எடிட்​டர் இணைந்து உரு​வாக்​கும் இந்த மாயத்​துக்​குப் பின்​னால் முக்​கிய பல நுட்​பங்​கள் உள்​ளன:

பொருள் துடைப்பு (ஆப்​ஜெக்ட் வைப்)

ஒரு கதா​பாத்​திரம் அல்​லது ஒரு பொருள் (உதா​ரண​மாக தூண் அல்​லது சுவர்) கேம​ரா​வுக்கு மிக அரு​கில் கடக்​கும்​போது திரை​யில் ஒரு நொடி முழு​மை​யான மறைப்பு ஏற்படும். அந்த மறைப்​பில் அடுத்த ஷாட் இணைக்கப்படும்.

இருள் மற்​றும் நிழல் கட் (டார்க் ஃபிரேம் கட்)

காட்​சி​யில் திடீரென ஏற்​படும் இருள் அல்​லது நிழலைப் பயன்​படுத்தி எடிட் செய்​வது. இது பார்​வை​யாளரின் கண்களுக்​குத் தெரி​யாத மிகச்​சிறந்த நுட்​பம்.

இயக்​கப் பொருத்​தம் (மேட்ச் மூவ்​மெண்ட்)

ஒரு நபர் இடதுபுறம் நகரும் அதே வேகத்​தி​லும் திசையிலும் அடுத்த ஷாட்​டைத் தொடங்​கு​வது. கேமரா மற்​றும் நடிகரின் அசைவு​கள் (ப்​ளாக்​கிங்) மிகத் துல்லியமாக ஒத்​திசைக்​கப்​படு​வ​தால், கட் விழுந்த இடமே தெரி​யாமல் போகிறது.

டிஜிட்​டல் ஸ்டிச்​சிங்

கணினி கிராஃபிக்ஸ் மூலம் 2 வெவ்​வேறு ஷாட்​களின் ஓரங்​களை ஒன்​றிணைத்​து, அவற்றை ஒரே ஷாட் போலக்காட்​டு​வது.

எடிட்​டிங் தத்​து​வம்: சிறந்த கட் எது?

எடிட்​டிங் துறை​யில் ஒரு பழமொழி உண்​டு. சிறந்த கட் என்பது, பார்​வை​யாளர் கவனிக்​காத கட் . எடிட்​டிங் ஒரு படத்​தின் வேகத்​தை​யும் உணர்ச்​சி​யை​யும் தீர்​மானிக்​கும் இதயம். 2009-ல் வெளி​யான “த சீக்​ரெட் இன் தேர் ஐஸ்” என்ற ஸ்பானிஷ் படத்​தில் வரும் கால்​பந்து மைதானக் காட்சி இதற்கு சிறந்த உதா​ரணம்.

ஹெலி​காப்​டர் ஷாட்​டில் தொடங்​கி, மைதானத்​தின் கூட்டத்​துக்​குள் நுழைந்​து, ஒரு துரத்​தல் காட்​சி​யாக மாறி, இறு​தி​யில் ஒரு வீரரின் முகத்​தில் முடி​யும் வரை அந்த ஐந்து நிமிடக்காட்சி தடை​யின்றி ஓடும். அங்கு விழுந்த கட்-கள் எதை​யுமே பார்​வை​யாளர்​கள் உணர மாட்​டார்கள்; மாறாக அந்​தத் துரத்​தலின் பதற்​றத்தை மட்​டுமே உணர்வார்​கள்.

ஏன் இந்​தத் தொழில்​நுட்​பம் முக்​கி​யம்?

இன்​விசிபிள் கட் என்​பது வெறும் வித்தை மட்​டுமல்ல. கதை சொல்​லும் முறை​யில் முக்​கிய​மான கரு​வி​யு​மாகும். நேரத்​தின் ஓட்​டம் பார்​வை​யாளர்​களைக் கதையோடு நேரலை​யில் பயணிக்க வைக்​கிறது. பதற்​றம் : த்ரில்​லர் காட்​சி​யில் ‘கட்’ விழுந்​தால் பார்​வை​யாள​ருக்கு ஒரு சிறிய ஆசு​வாசம் கிடைக்​கும். ஆனால் கட் இல்​லாமல் காட்சி தொடரும்​போது, மூச்சு விடக்​கூட முடி​யாத​வாறு பதற்​றம் உரு​வாகிறது. அமிழ்​தல் (இமர்​ஷன்): இது திரையை​யும் பார்​வை​யாளரை​யும் பிரிக்​கும் சுவரை உடைக்​கிறது.

தெரி​யாத அழகின் மாயம்

இன்​விசிபிள் கட் சினி​மா​வின் அமை​தி​யான மாயம். இது கதையை உயிர்ப்​பித்​து, ஒளிப்​ப​திவைக் கவிதை​யாக்​கும். தையல் வெளியே தெரி​யாமல் தைக்​கும் தையல்​காரரைப் போல​வே, இயக்​குநரும் எடிட்​டரும் காட்​சிகளை இணைக்கும் விதம் தெரி​யாமல் இருந்​தால்​தான் அந்​தக் கலை முழுமை யடைகிறது. அடுத்த முறை ஒரு நீண்ட ஷாட் கொண்ட படத்​தைப் பார்க்​கும்​போது, அந்த மெல்லிய தையலைத் தேட முயலுங்​கள். இது சினி​மா​வின் தொழில்​நுட்​ப வளர்ச்​சி மட்​டுமல்​ல, மனிதனின்​ கற்பனைத்​திறன்​ காலத்​தை​யும்​ இடத்​தை​யும்​ எப்​படி வெல்​கிறது என்​ப​தற்​கான சாட்​சிய​மும்​கூட.

(புதன்தோறும் ஒளி காட்டுவோம்)

- cjrdop@gmail.com

இன்​விசிபிள் கட்: கண்​கள் அறியாத தொடர்ச்​சி | ஒளி என்பது வெளிச்சமல்ல 27
கோணமும் ராகமும்: கண்ணுக்குத் தெரியாத ரசவாதம் | ஒளி என்பது வெளிச்சமல்ல 26

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in