

மின்சார கனவு
ஒலியும் ஒளியும் இணைந்து பார்வையாளர்களின் ஆழ்மனதோடு நிகழ்த்தும் உரையாடலே திரைப்படங்கள். ஒளிப்பதிவாளரின் கோணமும், இசையமைப் பாளரின் ராகமும் இணையும் புள்ளியில் ஒரு காட்சியின் ஆன்மா பிறக்கிறது.
நீண்ட ஷாட்களும் இசையின் சுவாசமும்
ஒளிப்பதிவு ஒரு கதையைச் சொல்லும் ‘உடல்’ என்றால், பின்னணி இசை மற்றும் பாடல்கள் அந்த உடலுக்கு உயிர் கொடுக்கும் ‘ஆன்மா’ போன்றது. காட்சியில் வெட்டுகள் குறைவாக இருந்து, கேமரா நீண்ட நேரம் ஒருவரை அல்லது ஒரு சூழலைப் பின்தொடரும்போது அங்கே இசை முழுமையாகத் தன் ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்குகிறது.
வெற்றிடம்: வசனங்கள் இல்லாத நீண்ட ஷாட்களில், அந்த மவுனத்தை நிரப்புவது இசைதான். இது பார்வையாளருக்குக் காட்சியின் உணர்வை உள்வாங்கத் தேவையான நேரத்தையும் இடத்தையும் வழங்குகிறது.
திருடா திருடா
ஒத்திசைவு : கேமராவின் நகர்வும் இசையின் தாளமும் ஒன்றாக இணையும் போது, பார்வையாளர் ஒருவிதமான ‘டிரான்ஸ்’ நிலைக்குச் செல்கிறார்.
ஒளியும் தாளமும்: பி.சி. ஸ்ரீராம் எனும் மேதை
ஒளிப்பதிவுத் தொழில்நுட்பத்தில் ‘ஒளியை இசையோடு இணைப்பது’ ஒரு மைல்கல். இதற்கு சிறந்த உதாரணம் ‘திருடா திருடா’ படத்தின் ‘சந்திரலேகா’ பாடல். இந்தப் பாடலில் இசையின் ஒவ்வொரு துடிப்புக்கும் ஏற்ப ஒளியின் நிறமும், திசையும், தீவிரமும் மாறும்.
பிற்காலத்தில் இந்தத் தொழில்நுட்பம் நவீன மியூசிக் வீடியோக்கள் மற்றும் கச்சேரி ஒளிப்பதிவுகளுக்கு முன்னோடியாக அமைந்தது. `கீதாஞ்சலி' (1989) படத்தில் ஊட்டியின் மூடுபனி மற்றும் பனி சூழ்ந்த காட்சிகள், குறிப்பாக உட்புறங்களுக்குள் புகுந்து செல்லும் இவரது மேஜிக் ஒளிப்பதிவும் இளையராஜாவின் பின்னணி இசையும் ஆழமான ஆராவைக் கொடுத்தது. இசையின் மெல்லிசைத் தன்மையும், ஒளியின் மென்மையும் சேர்ந்து பார்வையாளரை ஒரு பரவச உணர்வில் ஆழ்த்தியது.
மண்வாசனை
‘மண்வாசனை’ பட அனுபவம்
ஒளிப்பதிவுக்கும் இசைக்கும் இடையிலான உறவு என்பது ரசனை சார்ந்தது மட்டுமல்ல, அது தொழில்நுட்ப ரீதியான பிணைப்பும் கூட. இதற்குச் சிறந்த உதாரணம், பாரதிராஜாவின் ‘மண்வாசனை’ பட இடைவேளைக் காட்சி.
இந்தக் காட்சியில் ஒரு சில்லவுட் ஷாட்டை கையில் கேமராவை ஏந்தி ‘ஹேண்ட்-ஹெல்ட்’ முறையில் படமாக்கினார் ஒளிப்பதிவாளர் பி.கண்ணன். மாலை நேரத்து மங்கலான வெளிச்சத்தில் எடுக்கப்பட்ட அந்தக் காட்சியில், கேமரா நகரும்போது சில தேவையற்ற அசைவுகள் (ஜெர்க்ஸ்) ஏற்பட்டுவிட்டன.
ஆனால், இளையராஜா அந்த கேமரா ஜெர்க்கை ஒரு கலைப் படைப்பாக மாற்றினார். கேமராவில் எப்போதெல்லாம் ஜெர்க் ஏற்படுகிறதோ, சரியாக அந்த நொடிகளில் இசையின் துடிப்புகளைப் பொருத்தினார். இசையின் துணையோடு தீவிரமான மனநிலையை உருவாக்கும் மாபெரும் காட்சியாக அது மாறியது. இங்கே இசை என்பது ஒளிப்பதிவின் சவால்களைத் துடைத்தெறியும் மந்திரக்கோல்.
தாளத்துக்கேற்ப நகரும் கேமரா:
கன்னட ‘த்வீபா’ ஒரு பாடம் ‘த்வீபா’ படத்தின் ஒளிப்பதிவாளர் ராமச்சந்திரா படப்பிடிப்புக்கு முன்பே இசையமைப்பாளர் ஐசக் தாமஸ்ஸிடம் அந்தப் படத்தின் தீம் மியூசிக்-கை பெற்றுக்கொண்டார். அந்த இசையின் நீளம், வேகம் மற்றும் தாளத்தை உள்வாங்கி, அதற்கேற்ப தனது ‘ட்ராலி’ நகர்வுகளைத் திட்டமிட்டார்.
அதாவது, இசையின் வேகம் கூடும்போது கேமராவின் வேகமும், இசை நிதானிக்கும்போது கேமராவின் அசைவும் கச்சிதமாகப் பொருந்தியது. இது திரையில் கவித்துவமான ஒத்திசைவை ஏற்படுத்தியது.
பாடல் கட்டமைப்பு: ஒளிப்பதிவாளரின் பார்வை
ஒரு பாடலை ஒளிப்பதிவு செய்வதற்கு முன், அதன் இசைக் கட்டமைப்பை ஒளிப்பதிவாளர் நுணுக்கமாகப் புரிந்துகொள்ள வேண்டும்: பல்லவி - இது பாடலின் முகம். இங்கே பொதுவாக ‘எஸ்டாபிளிஷிங் ஷாட்கள்’ மற்றும் கதாபாத்திரங்களின் அறிமுகம் பிரம்மாண்டமாக இருக்கும்.
சரணம் - இங்கே கதை நகரும். கேமரா மூவ்மென்ட்கள் கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கு ஏற்ப மென்மையாகவோ அல்லது வேகமாகவோ அமையும். இசைக்கோப்பு - இங்கேதான் ஒளிப்பதிவாளர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டுவார்கள். வசனங்கள் இல்லாததால், டிராலி கிரேன் அல்லது ஜிம்மி ஜிப் பயன்படுத்தி நீண்ட, சிக்கலான நகர்வுகளை உருவாக்குவார்கள்.
டிராலி மற்றும் கிரேன்: இசையின் நடனம்
இசை ஒரு நதியைப் போல ஓடும்போது, கேமராவும் அதே வேகத்தில் நகர வேண்டும். ஒரு பாடலின் உச்சகட்ட உணர்வை எட்டும்போது, கேமரா கீழிருந்து மேலாக உயர்ந்து அந்த இடத்தின் பிரம்மாண்டத்தைக் காட்டும். ஒரு மெல்லிசைப் பாடலில், டிராலி மூலம் கேமரா மிக மெதுவாக நகரும்போது, அது அந்த இசையின் மென்மையைக் காட்சிப்படுத்துகிறது.
‘சவுண்ட் ஆஃப் மியூசிக்’ முதல்
‘மின்சார கனவு’ வரை இசை சார்ந்த திரைப்படங்கள் ஒளிப்பதிவுத் தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றன. த சவுண்ட் ஆஃப்,மியூசிக் - ஆல்ப்ஸ் மலையில் கேமரா வான்வழியாக சுழன்று வந்து ஜூலி ஆண்ட்ரூஸைக் காட்டுவது, அந்தப் பாடலின் சுதந்திரத்தை உணர வைத்தது.
ராஜீவ் மேனனின் மின்சார கனவு -ரவி கே.சந்திரன் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கு ஏற்ப கேமராவை எப்படி ஒரு பாத்திரமாகவே மாற்றினார்கள் என்பதற்கு ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ பாடல் ஒரு சிறந்த சான்று. ஒளியின் மென்மையும் கேமராவின் மெதுவான நகர்வும் அந்தப் பாடலை ஒரு கனவு போல மாற்றியிருக்கும்.
மவுனம்: ஒலியை விட வலிமையானது
பல நேரங்களில், உரத்த இசையை விட மவுனம் அதிகப்படியான அதிர்வுகளை ஏற்படுத்தும். ஒளிப்பதிவில் மவுனம் என்பது ஒரு ‘காட்சி மொழி’.
ஆழமான பாதிப்பு: போர்க்களக் காட்சியில் அல்லது ஒரு மரணத்தின் போது, திடீரென ஏற்படும் மவுனம் பார்வையாளர்களை அந்தக் காட்சியின் தீவிரத்துக்குள் இழுக்கும். இசை என்பது ஒரு கால அளவு (டைம்), ஒளிப்பதிவு என்பது ஒரு வெளி (ஸ்பேஸ்). இவை இரண்டும் இணையும்போது ஒரு திரைப்படம் ‘காலத்தைக் கடந்த கலையாக’ மாறுகிறது.
(புதன்தோறும் ஒளி காட்டுவோம்)
- cjrdop@gmail.com